மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 ஆக 2021

அமித் ஷாவின் டார்கெட்: செந்தில்பாலாஜியை நோக்கி அமலாக்கத்துறை?

அமித் ஷாவின் டார்கெட்:  செந்தில்பாலாஜியை நோக்கி  அமலாக்கத்துறை?

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக 2011-16 ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக, அவர் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மூன்று வழக்குகள் பதிவு செய்தனர்.

அதில் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. புகார் தாரர்கள் தங்கள் புகாரை திரும்பப்பெற்றதால் அவ்வழக்கு ரத்து செய்யப்பட்டது.

மீதியிருக்கும் இரு வழக்குகளின் அடிப்படையில் முறைகேடான பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி மீது ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை கடந்த வாரம் ஒரு வழக்குப் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மதுரை அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கரூர் மாவட்ட அதிமுகவில் இருபெரும் சக்திகளாக இருந்த செந்தில்பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவருக்கும் அரசியல் பகை தனி நபர் பகையாகவும் மாறியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாஜி அமைச்சர்களின் மீது நடக்கும் முதல் ரெய்டாக கரூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள் நடந்தன. அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் பதியப்பட்டது.

இந்நிலையில் டெல்லி சென்ற பன்னீரும், எடப்பாடியும் முன்னாள் அமைச்சர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை திமுக அரசு துவங்கிவிட்டதாக புகார் கூறினார்கள். பன்னீர், எடப்பாடிக்கு அமித் ஷா அளித்த உறுதி என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்தியில், “விஜிலென்ஸுங்குறது ஸ்டேட் சப்ஜெக்ட். ஆட்சிக்கு வந்தவங்க அப்படிதான் பண்ணுவாங்க. அதுல நாம தலையிட முடியாது. இதெல்லாம் அரசியல்ல ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். அவங்க என்ன பண்றாங்களோ அதெல்லாம் பண்ணட்டும். ஜெயலலிதாவும் அன்னிக்கு கலைஞரை மிட்நைட்ல அரெஸ்ட் பண்ணது தப்புதானே.... ஆனா ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சிக்கங்க. நம்மகிட்ட இன்கம் டாக்ஸ் இருக்கு, அமலாக்கத்துறை இருக்கு, சிபிஐ இருக்கு, நான் திமுகவுல 5 பேரை வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்” என்று அமித் ஷா தன்னை சந்தித்த பன்னீர், எடப்பாடியிடம் பேசியதாக குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில்தான் மாநில அரசின் பவர் ஃபுல் அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜியை குறிவைத்து அமலாக்கத் துறை தனது ஆக்‌ஷனை தொடங்கியுள்ளது. செந்தில்பாலாஜி தனது மாநில அரசின் அதிகாரத்தை வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கரையும், பதிலுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் மேலே உள்ள பாஜக அரசை வைத்து செந்தில் பாலாஜியையும் குறிவைத்து வருவதாக கரூர் அரசியல் மற்றும் தொழில் வட்டாரங்களில் பேச்சுகள் அதிகமாக இருக்கின்றன.

எம்.ஆர். விஜயபாஸ்கர் தவிர, தற்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அந்த அடிப்படையில் அவரும் செந்தில்பாலாஜி மீது கடுமையான விமர்சனங்களை தேர்தல் பிரச்சாரம் தொடங்கி இப்போது வரை வைத்து வருகிறார். இந்த அரசியல் பின்னணியும் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகளின் பின்னால் இருக்கலாம் என்கிறார்கள்.

அமித் ஷா சொன்ன அந்த ஐவரில் செந்தில்பாலாஜியும் ஒருவர். மீதி நால்வர் யார் என்பதும் திமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

-வேந்தன்

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

செவ்வாய் 10 ஆக 2021