மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

வேளாண் ஏற்றுமதி: முதல் 10 நாடுகளில் இந்தியா!

வேளாண் ஏற்றுமதி: முதல் 10 நாடுகளில் இந்தியா!

பிரதமரின் கிசான் திட்டத்தில், 9வது தவணையைப் பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 9) விடுவித்தார். 9.75 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் ரூ.19,500 கோடிக்கும் மேற்பட்ட பணம் நேரடியாகச் செலுத்தப்பட்டது.

பிரதமரின் கிசான் நிதி திட்டத்தின் கீழான நிதியுதவியின் அடுத்த தவணைத் தொகையைக் காணொலி மூலம் நரேந்திர மோடி அளித்தார். இந்நிகழ்ச்சியின் போது, விவசாய பயனாளிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார்.

அவர் பேசுகையில், “இன்று பெறப்பட்ட தொகை விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ரூ.1 லட்சம் கோடி தொகுப்பிலான கிசான் உள்கட்டமைப்பு நிதி திட்டம், இன்று ஓராண்டை நிறைவு செய்கிறது.

2047ம் ஆண்டில், 100வது சுதந்திர ஆண்டை நாடு நிறைவு செய்யும்போது, இந்தியாவின் நிலையை தீர்மானிப்பதில் நமது வேளாண்மையும் மற்றும் நமது விவசாயிகளும் முக்கிய பங்கு வகிப்பர்

குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து, இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.1,70,000 கோடி, நெற்பயிர் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் சென்றுள்ளது மற்றும் சுமார் ரூ.85,000 கோடி கோதுமை பயிர் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகச் சென்றுள்ளது.

தேசிய சமையல் எண்ணெய் திட்டத்தில் - பாமாயில் மூலம், சமையல் எண்ணெய் உற்பத்தி தற்சார்பு நிலையை அடைய நாடு உறுதி எடுத்துள்ளது. சமையல் எண்ணெய் உற்பத்தி சூழலை உருவாக்க ரூ.11,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்படும். முதல் முறையாக, வேளாண் ஏற்றுமதியில் முதல் 10 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது.

சர்வதேச சந்தையில் டிஏபி உரங்களின் விலை பல மடங்கு அதிகரித்தபோதும், அரசு உடனடியாக ரூ.12,000 கோடி மானியத்தை ஏற்பாடு செய்தது. இதனால் இந்த சுமையை விவசாயிகளால் உணரப்படவில்லை.

கொரோனா காலத்தில், வேளாண் ஏற்றுமதியில் நாடு புதிய சாதனை படைத்துள்ளது. இன்று, இந்தியா மிகப் பெரிய வேளாண் ஏற்றுமதி நாடாக அங்கீகரிக்கப்படும் போது, சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது சரியானது அல்ல.

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், இதுவரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 60 கோடி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரூ. 1 லட்சம் கோடி கொரோனா காலத்தில், சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. கொரோனா காலத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டன. இதுபோன்று விவசாயிகள், நாட்டில் வரவுள்ள வேளாண் கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புகளால் பயனடைவர்” என்று தெரிவித்தார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 9 ஆக 2021