மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 9 ஆக 2021

உள்ளாட்சித் தேர்தல்: பொறுப்பாளர்களான அமைச்சர்கள்- புதுவரவுகளுக்கு சீட் இல்லை?

உள்ளாட்சித் தேர்தல்: பொறுப்பாளர்களான அமைச்சர்கள்- புதுவரவுகளுக்கு சீட் இல்லை?

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான திமுக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிவிட்டது.

ஏற்கனவே தேர்தல் அலுவலர்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவிட்ட நிலையில், நேற்று (ஆகஸ்டு 8) அந்த 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அமைச்சர்கள் அடங்கிய கூட்டத்தை கூட்டினார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் துரைமுருகன் பேசும்போது பல மாவட்டச் செயலாளர்களின் கோரிக்கையை எழுப்பினார்.

“நாம் தேர்தலை சந்திக்க வேண்டும், வெற்றிபெற வேண்டும். பல்வேறு இடங்களில் முந்தைய ஆட்சியால் வரையறுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையே இன்னமும் இருக்கிறது. அந்த வரையறைகளை மாற்றணும்”என்று கூற அப்போது குறுக்கிட்ட அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அதெல்லாம் ஒண்ணும் மாற்ற முடியாது. கோர்ட்டில் அரசு பதிலளித்தபோது என்ன நிலைமையோ அதே நிலைமையில்தான் தேர்தலை நடத்த முடியும். அதனால் இட ஒதுக்கீட்டு சுழற்சி முறையை இப்போ உடனடியாக கொண்டு வரமுடியாது. பழைய முறையிலதான் தேர்தல் நடத்தணும்”என்றார்.

அதைக் கேட்டுக் கொண்ட துரைமுருகன், “அப்படியா, அடுத்த மாசத்துக்குள்ள தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும். நாம் தலைவரின் வ்ழி நடத்தலில் வெற்றிபெற்றாக வேண்டும்” என்று உரையை முடிக்க, மீண்டும் அமைப்புச் செயலாளர், “வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள்ள தேர்தலை முடிக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பாகிவிடும்:” என்று கூறினார்.

இதைக்கேட்ட அமைச்சர் நேரு, “ரொம்பப் பதறாதீங்க. நடத்திடுவோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நிறைவாக பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நாம் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாகவேண்டும். நமது அரசு மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் உள்ளது. இதைப் பயன்படுத்தி நூறு சதவிகிதம் வெற்றியைப் பெற்றாக வேண்டும். வேட்பாளர்களை அந்தந்த மாவட்டச்செயலாளர்கள் முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் ஒரு இடத்தில் கூட நாம் வெற்றி வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்களை பொறுப்பாளராக நியமித்திருக்கிறோம். இதில் என்னை நியமிக்கவில்லை, உன்னை நியமிக்கவில்லை என்று கருத்து வேறுபாடுகள் வேண்டாம்.அவர்களுக்கு நீங்களும் உங்களுக்கு அவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

அனைத்து பதவிகளுக்கும் பார்த்துப் பார்த்து சீட் கொடுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைவர் கலைஞருடன் அரசியல் செய்தவர்கள் இருப்பார்கள், என்னோடு அரசியல் செய்தவர்கள் இருப்பார்கள், உங்கள் தேர்தல் வெற்றிக்கு உழைத்திருப்பார்கள் அவர்களையெல்லாம் கண்டுபிடித்து சீட் கொடுங்கள் வெற்றிபெற உழைத்திடுங்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளரை நமது வேட்பாளராக நினைத்து வேலை செய்யுங்கள்.

அடுத்ததாக வரக்கூடிய பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகவேண்டும் அதற்கான வேலைகளைச் செய்யுங்கள். ”என்று பேசினார்.

இதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு பொன்முடி, செஞ்சி மஸ்தான், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு எ.வ. வேலு, தென்காசி மாவட்டத்துக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்., நெல்லை மாவட்டத்துக்கு ஐ.பெரியசாமி, வேலூர், திருப்பத்தூர் துரைமுருகன் என ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்.

“கலைஞருடன் அரசியல் செய்தவர்கள், தன்னோடு அரசியல் செய்தவர்கள் பழைய கட்சிக்காரார்கள், உங்கள் வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பார்த்து சீட் கொடுங்கள் என்றால் என்ன அர்த்தம்... புதியதாகக் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு சீட் கொடுக்கவேண்டாம் என்று சூசகமாக சொல்லியிருக்கிறார் தலைவர்” என்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள்.

வணங்காமுடி, வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 9 ஆக 2021