மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

'எங்களது பேச்சை கேளுங்கள்': எதிர்க்கட்சிகளின் வீடியோ!

'எங்களது பேச்சை கேளுங்கள்': எதிர்க்கட்சிகளின் வீடியோ!

நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத் தொடரின்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், மூன்று வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் தொடர்ந்து குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது என்று அவர்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடரின் நேரமும் மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று ஒன்றிய அரசு குற்றம் சாட்டுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் முடிவு காண வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் 3 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த காணொளியை திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை பதிவிட்டுள்ளார். "மிஸ்டர் மோடி கம் லிசன் டு அஸ்" என்ற கேப்ஷன் உடன் தொடங்கும் அந்த வீடியோவில், காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பேசிய நாடாளுமன்ற உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன.

நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்கள் வைத்த கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

திமுக சார்பில் ஆர்.எஸ் பாரதியின் உரையாடல் இடம்பெற்றுள்ளது. "நாட்டில் தற்போது ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. ஜனநாயகத்தின் தரம் பற்றி நாம் விவாதித்தாக வேண்டும்" என்று பேசியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி.

3 நிமிடம் கொண்ட இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகப் பிரதமர் குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

ஞாயிறு 8 ஆக 2021