மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

சேலம், ஈரோட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

சேலம், ஈரோட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

கொரோனா பரவல் காரணமாகக் கோவை போன்று, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், கொரோனா பரவல் அதிகரிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது தமிழக அரசு.

அதன்படி ஏற்கனவே கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு, சேலம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட அறிவிப்பில், “

சேலம் மாநகராட்சி

சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6 மணிவரை மட்டும் செயல்பட அனுமதி. வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை.

செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி.

வ.உ.சி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி

துணிக்கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

சேலம் ஊரகம்

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. பிற நாட்களில் ஏற்காட்டிற்குப் பயணிக்கும் பயணிகள் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

கொங்கணாபுரம் வாரச்சந்தை, வீரகனூர் வாரச்சந்தை,வரும் 23ஆம் தேதி வரை செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

மேட்டூர் அணை பூங்கா 23ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனி கடைகளாகப் பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், அடுமனைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

தேநீர்க் கடைகளும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

திருமணம் நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கும், ஈமச்சடங்குகளில் 20 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி.

அனைத்து பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் வருகைக்குத் தடை விதிக்கப்படுகிறது.

கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்துக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச் சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை சான்றிதழ் (அல்லது) கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாகக் காண்பிக்க வேண்டும், இல்லையெனில் சோதனைச்சாவடியிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

ஞாயிறு 8 ஆக 2021