மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 8 ஆக 2021

பற்றி எரிந்த தெலங்கானா போராட்டமும்... பற்ற வைக்கப்பட்ட கொங்குநாடு கோரிக்கையும்! பகுதி 2

பற்றி எரிந்த தெலங்கானா போராட்டமும்...  பற்ற வைக்கப்பட்ட கொங்குநாடு கோரிக்கையும்! பகுதி 2

எஸ்.இரவி

முதல் தனி தெலங்கானா போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர் மருத்துவ மாணவரான மரி சென்னாரெட்டி. தமிழக மக்கள் நன்கு அறிந்தவர்தான் இவர். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக ஆளுநராக இருந்தவர். அவர்தான், தெலங்கானா பிரஜா சமிதி (TPS ) என்கிற அமைப்பை உருவாக்கிப் போராடினார். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு சமரச திட்டத்தை அறிவித்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி.

அது ஒரு எட்டு அம்சத்திட்டம். வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு, தெலங்கானா பிரதேசத்துக்கு என்று ஒரு மேம்பாட்டு கமிட்டி அமைக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அத்திட்டத்தில் இருந்தன. அரை மனதுடன் அமைதியானார்கள் தெலங்கானா மக்கள். ஆனாலும் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தெலங்கானா விவகாரத்தை மையப்படுத்தி பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அந்தத் தேர்தலில், தெலங்கானா பகுதியில் இருந்த 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் பத்து இடங்களை மரி சென்னா ரெட்டியின் டி.பி.எஸ் கைப்பற்றியது. கதிகலங்கியது காங்கிரஸ்.

இதனால், தனி தெலங்கானாவுக்கு சம்மதம் தெரிவிக்கலாமா என்று இந்திரா காந்தி யோசிக்கத் தொடங்கினார். அந்த யோசனையை ஆரம்ப நிலையிலேயே அறுத்தெறிந்தது ஐக்கிய நாடுகள் சபையில் இருந்த ஒரு வழக்கு. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு... 1948ஆம் ஆண்டில், ஹைதராபாத் நிஜாமிடமிருந்து ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய அரசு கைப்பற்றியது தொடர்பான வழக்கு அது. (1979ஆம் ஆண்டில்தான் அந்த வழக்கை விசாரிப்பதை ஐக்கிய நாடுகள் சபை நிறுத்திக்கொண்டது.) இதன் காரணமாக, அந்த யோசனையைக் கைவிட்டார் இந்திரா. இருப்பினும் தெலங்கானா மக்களின் உணர்வுகளை அவர் மதித்தார்.

தெலங்கானா பகுதி மக்களை சமாதானப்படுத்தும்விதமாக, தெலங்கானா கரீம் நகர் பகுதியைச் சார்ந்த ஒருவரை ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இந்திரா அமர்த்தினார். அவர்தான், பின்னாளில் நாட்டின் பிரதமராகி, இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை கொண்டு வந்த கற்றறிந்த மேதை பி.வி.நரசிம்மராவ். இதற்குப் பின்புதான், ஆந்திராவில் ஒரு புதிய அரசியல் அதிசயம் நிகழ்ந்தது.

என்.டி.ஆர் – ஆந்திராவின் எம்.ஜி.ஆர்!

1980களில் பரந்து விரிந்த தெலுகு தேசத்தின் மாபெரும் ஆளுமையாக உருவெடுத்தார் என்.டி.ஆர் என்ற என்.டி.ராமாராவ். நீண்ட காலமாக நீரு பூத்த நெருப்பாக இருந்த தெலங்கானா கோரிக்கை, இந்த ஆளுமையின் அரசியல் வரவால் அணைக்கப்பட்டது. ஆம்... ஆந்திரா, ராயலசீமை மற்றும் தெலங்கானா என மூன்று பகுதி மக்களும் மொத்தமாகக் கொண்டாடும் அரசியல் தலைவராக உருவெடுத்தார் என்.டி.ஆர். அவர் இருக்கும் காலத்தில் தனி தெலங்கானா என்ற கோரிக்கையே, இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

அவர் மறைவுக்குப் பின், தெலுகு தேசம் கட்சி அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு கைக்குச் சென்றது. அவரும் முதல்வராக இருந்த காலத்தில், ஆந்திரா வளர்ச்சியின் பாதையில் அசுரப்பாய்ச்சல் காட்டியது. உயர் தொழில் நுட்பம், தொழில் வளர்ச்சி, அந்நிய நாடுகளின் முதலீடு என ஆந்திராவுக்கு புதுமுகம் கொடுத்தார் நாயுடு. அதனால் அப்போதும் அந்தக் கோரிக்கை அடங்கியே இருந்தது.

ஆந்திராவில் காங்கிரஸுக்கு முடிவுரை எழுதப்பட்டு விடுமோ என்ற அச்சம் எல்லோருக்கும் எழுந்த நிலையில்தான், ராமலசீமையிலிருந்து மகத்தான ஆளுமையாக உருவெடுத்தார் ஒய்.எஸ்.ஆர் என்ற ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவரால்தான், ஆந்திராவில் காங்கிரஸ் புத்துயிர் பெற்று, 2004ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்தது. ஒய்.எஸ்.ஆர்.,முதல்வரானார். இந்த அரசியல் திருப்பத்தில் தெலுகு தேசம் கட்சி, சற்று கலகலத்துப் போயிருந்தது. அக்கட்சியிலிருந்து விலகிய கே.சி.ஆர் என்ற கே.சந்திரசேகர ராவ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதியை (TRS) உருவாக்கினார்.

காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போராடிய இவரது கட்சி, தெலங்கானா பகுதியில் கணிசமான வெற்றியைப் பெற்றது. மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சராக பொறுப்பேற்றார் சந்திரசேகர ராவ். அப்போதும் தெலங்கானா கோரிக்கையை அவ்வப்போது எழுப்பிக்கொண்டிருந்தார். ஆட்சிக்காலம் முடியும் தறுவாயில் 2007 -08 காலகட்டத்தில், தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனித் தெலங்கானா பிரச்சினையைக் கையிலெடுத்தார்.

இருப்பினும், ஒய்.எஸ்.ஆர் என்ற ஆளுமையை எதிர்த்து இந்தப் பிரச்சினையை அவரால் மக்களிடம் தீவிரமாகக் கொண்டு செல்ல முடியவில்லை. 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், ஆந்திரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று, காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் தொடர்ந்தது. அதனால் தெலங்கானா பிரச்சினையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் குழம்பினார் ராவ். அந்தக் குழப்பத்துக்கு காலமே ஒரு தெளிவைத் தந்தது. 2009ஆம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் காடுகளில் இறந்து போனார் ராஜசேகர ரெட்டி.

2009இல் வெடித்தது இரண்டாவது தெலங்கானா போராட்டம்!

அவருக்குப் பதிலாக கிரண்குமார் ரெட்டி ஆந்திர முதல்வரானார். ஆந்திர அரசிலும், அரசியலிலும் குழப்பம் கும்மியடித்த காலகட்டம் அது. தன் பங்கிற்கு வில்லடியை நடத்தினார் சந்திரசேகர ராவ். 2009 நவம்பர் 29 அன்று தனி தெலங்கானா கோரிக்கையுடன் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கினார். ஒரு வாரம் தொடர்ந்தது உண்ணாவிரதப் போராட்டம். மாணவர்கள், அரசு ஊழியர்கள், திரைத்துறையினர் என எல்லோரும் அவருடைய போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நடுநிலை வகித்த அரசியல் கட்சியினர் கூட, பின்பு தெலங்கானா காலத்தின் கட்டாயம் என்றனர். ஒவைசியின் மஜ்லிஸ் இத்தேஹாதுல் முஸ்லிமீன் (MIM) கட்சியும் இதே பாட்டைத்தான் பாடியது.

வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பு எனப் போராட்டம் புரட்சியாக மாறியது. இதில் அதிகமான உஷ்ணத்தை உமிழ்ந்தது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள். ஹைதராபாத்தில் உள்ள, ஆந்திர சட்டப் பேரவை முற்றுகையிடப்பட்டது; தலைமைச் செயலகமே தகித்தது. அன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரம், இந்த விவகாரத்தைக் கையாண்டார். அவர். ‘தெலங்கானா கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்’ என்ற உறுதியைக் கொடுத்தார். உண்ணாவிரதத்தை முடித்தார் கே.சி.ஆர்.

ஆனால் தீ எதிர்த்திசையில் எரியத் தொடங்கியது. ஐக்கிய ஆந்திர மாநிலம்தான் எங்கள் கோரிக்கை என்று ஆந்திரா, ராயலசீமைப் பகுதிகளில் உள்ள மக்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தைத் துவக்கினர். கடைகள் அடைக்கப்பட்டன. வேலைநிறுத்தம் நடந்தது. அன்றாட வாழ்வு நிலை குலைந்தது.

இரு தரப்பையும் சமாதானப்படுத்த நீதியரசர் ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில், ஐந்து நபர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைத்தது மத்திய அரசு. 2010 பிப்ரவரி 3ஆம் தேதி குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, இரண்டு மாநிலங்களின் நிதி ஆதாரம், நீர் ஆதாரம், நதி நீர் பங்கீடு, மக்களின் நிலை, பலவிதமான பகிர்வுகள் போன்றவற்றை அலசி ஆராய்ந்தது. இரண்டு தரப்பிலும் 60,000க்கும் மேற்பட்டோர் கருத்துத் தெரிவித்தனர். 2010 டிசம்பர் 30 அன்று இக்குழு தன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஸ்ரீ கிருஷ்ணா குழுவின் அறிக்கை, 2011ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று, பொதுமக்களின் பார்வைக்கு, வலைதள வடிவில் ஏற்றிடப்பட்டது.(https://en.wikipedia.org/wiki/Srikrishna_Committee)

அதில் பல அம்சங்கள் அலசப்பட்டிருந்தன. தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான ஆதரவு அதிகம் காணப்பட்டாலும், ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள், ஹைதராபாத் நகர் மீது, அவர்களின் உரிமையை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை. ஹைதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக மாற்றி, பஞ்சாப், ஹரியானாவுக்கு பொதுவான தலைநகரமாக சண்டிகார் இருப்பது போல, இரண்டு மாநிலங்களுக்கும் அதைத் தலைநகராக அறிவித்து விடலாம் என்று பலரும் யோசனை தெரிவித்திருந்தனர்.

பகுதி 1

தொடர்ச்சி இரவு 7 மணி பதிப்பில்...

(கட்டுரையாளர்: எஸ்.இரவி, புவிசார் குறியீடு நிபுணர், ஹைதராபாத்)

.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 8 ஆக 2021