மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

மக்களைத் தேடி மருத்துவம்: 2020 இல் நாமக்கல்-2021ல் தமிழகம்!

மக்களைத் தேடி மருத்துவம்:  2020 இல் நாமக்கல்-2021ல் தமிழகம்!

ஆகஸ்டு 5 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், “மக்களைத் தேடி மருத்துவம்” என்ற திட்டத்தைத் துவக்கி வைத்தார்.

அதன் துவக்க விழாவில் பேசிய முதல்வர், “ இன்றைக்கு இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டமாக விளங்கக் கூடிய வகையிலே, ‘மக்களைத் தேடி மருத்துவம்’என்ற மகத்தான திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்திலே தொடங்கியிருக்கிறோம். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ துறையின் செயல்பாடுகள் மிகுந்த அர்ப்பணிப்போடு இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் தொடர்ச்சியாகத்தான் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அரசின் சார்பில் தொடங்கியிருக்கிறோம்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று அவசியமான மருத்துவ சேவைகளை இதன்மூலம் நாம் வழங்கப்போகிறோம். முதல் கட்டமாக 1264 பெண் சுகாதார தன்னார்வலர்களும், 50 பிசியோதெரபி மருத்துவர்களும் 50 செவிலியர்களும் இல்லம் தேடிவரும் இந்த மருத்துவ சேவையில் ஈடுபட இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு மேலும் இத்திட்டம் தொடர்பாக விளக்கினார்.

பொதுவாகவே தமிழ்நாட்டில் திமுக வைத்த கோரிக்கைகளை திமுகவே அரசமைத்து நடைமுறைப்படுத்துவது அண்ணா காலத்தில் இருந்தே தொடர்ந்து வரும் நிலைமை. திமுகவை தொடங்கிய அண்ணா... தொடக்க காலத்தில் திமுக மாநாடுகளில் நிறைவேற்றிய தீர்மானங்களைத்தான் பின்னாட்களில் அரசு அமைத்து அரசாணையாகவும் வெளியிட்டு அதை முழுமைப்படுத்தினார். அதுபோல கலைஞரும், தான் எதிர்க்கட்சியாக இருக்கும்போது வைத்த கோரிக்கைகளை தானே ஆளுங்கட்சியாகி முதல்வர் என்ற நிலையில் இருந்து நிறைவேற்றினார்.

இன்று அதேபோல மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சியாக இருந்தபோது கட்சி ரீதியாக திமுக செய்த விஷயங்களை இப்போது அரசமைத்து அரசுத் திட்டமாகவே அறிவித்திருக்கிறார்.

கொரோனா முதல் அலை கடந்த 2020 ஆரம்பத்தில் உச்சகட்டத்தில் இருந்தபோது முழு ஊரடங்கு, மக்களிடம் பீதி என இப்போதைய நிலையைவிட மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்குரியதாக இருந்தது.

அப்போது ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை செயல்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், அதன் மூலம் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் திமுக அறிவிக்கும் எண்களுக்கு தொடர்புகொண்டு உதவி கேட்டால் உடனடியாக அவர்களின் வீடு தேடி உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வீட்டுக்கே கொண்டு போய் திமுக நிர்வாகிகள் மூலம் சேர்த்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் திமுகவின் இந்த, ‘ஒன்றிணைவோம் வா திட்டம்’அப்போது திமுக நிர்வாகிகளுக்கு பெரும் செலவு வைத்தது. ஆனாலும், பல நிர்வாகிகளும் தலைமையின் உத்தரவுக்கு இணங்க கோரிக்கை வைத்தவர்களின் வீடு தேடிப் போய் உதவினார்கள்.

இந்த நிலையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இதில் ஒரு படி உயரே போய் நின்றது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் உணவுத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாலும், தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளியே செல்ல முடியாமல் மருந்து வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். உணவுப் பொருட்கள்,மளிகைப் பொருட்களை மக்களுக்கு வழங்கும்போது மக்களிடம் இருந்தே இந்த ஏக்கத்தை அறிந்தார் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார். அதையடுத்து ஊரடங்கால் வெளியே வர முடியாமல் தவித்த மக்களுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகள், உயிர்காக்கும் மருத்துவ சேவைகளை செய்யத் தொடங்கினார்.

அப்போது 2020 ஏப்ரல் 23 ஆம் தேதி மின்னம்பலத்தில் இதுகுறித்து, உயிர் காக்கும் உதவிகள்: நெகிழவைக்கும் நாமக்கல் கிழக்கு திமுக என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அந்த செய்திக்காக அப்போது நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர். என். ராஜேஸ்குமாரிடம் பேசியபோது,

“ கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு உதவி செய்வதற்காகவே பல இடங்களுக்கு சென்றுவந்தேன். அப்போது தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் ஒரு அம்மா, போலீஸாரிடம் மருந்துச் சீட்டை காட்டி, ‘முக்கியமான மருந்துங்க. வாங்கறதுக்கு ஆஸ்பத்திரி போகணும்’என கேட்க, போலீஸ்காரரோ, ‘இங்கிருந்து வெளியே போகக் கூடாதும்மா...’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பின் உடனடியாக அந்த அம்மாவிடம் விசாரித்து அவருக்குத் தேவையான மருந்துகளை வாங்கிவரச் சொல்லி கொடுத்தேன். இதேபோல பலரும் இருப்பார்களே என்ற எண்ணத்தில்தான் உடனடியாக மூன்று போன் நம்பர்களைக் கொடுத்து வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி, செய்தித் தாள்கள் வழியாகவும் அறிவித்தேன். அதுமுதற்கொண்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவின் டோல் ஃப்ரீ நம்பர், இளைஞரணிச் செயலாளர் அறிவித்த டோல் ஃப்ரீ எண்ணில் கூப்பிடுகிறவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரை, சிகிச்சைகளை ஏற்பாடு செய்து தருகிறோம். இதயநோய், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குகிறோம். இதுவரை இருநூறு பேருக்கு மேல் உயிர்காக்கும் மருந்துகள் வாங்கிக் கொடுத்துள்ளோம். தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் அடிப்படையிலும் இதைத் தொடர்கிறோம்”என்று நெகிழ்ந்து போய் கூறினார்.

இப்போது முதல்வர் ஸ்டாலின், ‘இந்தியாவுக்கே முன் மாதிரி திட்டம்’என்று கிருஷ்ணகிரியில் புகழ்ந்த திட்டத்தை திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது அத்திட்டம் அரசாணையாகி தமிழகம் முழுதும் செயல்படுத்தப்படுகிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது கட்சி ரீதியாக செய்ததை... ஆட்சி அமைத்ததும் அரசு ரீதியாக செய்கிறது என்பதற்கு அண்ணா, கலைஞர், வழியில் இப்போதைய ஸ்டாலின் ஆட்சியின் நிகழ்கால உதாரணம் இது.

நல்லவை தொடரட்டும்!

-ஆரா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 7 ஆக 2021