மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

ஒரு வாரத்தில் டிசியை வழங்குக: நீதிமன்றம்!

ஒரு வாரத்தில் டிசியை வழங்குக: நீதிமன்றம்!

கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காகத் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழை வழங்க மறுக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாகத் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் மாற்றுச் சான்றிதழ் வாங்கி பெற்றோர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதற்காக மாற்றுச் சான்றிதழ் கேட்கும்போது அதனை வழங்கத் தனியார் பள்ளிகள் மறுப்பதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சுயநிதி பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்த போது தனியார் பள்ளிகள் சார்பில், மாணவர்களின் கட்டணத்தை நம்பியே செயல்படும் நிலையில், படிப்பைத் தொடர்பவர்கள், வேறு பள்ளிகளுக்குச் செல்பவர்கள் குறித்த விவரங்கள் தெரியாவிட்டால் பாதிப்பு ஏற்படும் என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், எந்த காரணத்திற்காகவும் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களைச் சேர்க்கக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவைப் பிறப்பித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் அரசின் ஒவ்வொரு முடிவிலும் தலையிட முடியாது என்ற போதிலும் இரு தரப்பின் பாதிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறு பள்ளிகளுக்கு மாறுவதற்கு மாணவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. மாற்றுப் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் டிசி கோரி தற்போது படிக்கும் பள்ளிகளிடம் விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பங்களைப் பெற்ற ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

கட்டண பிரச்சினை உள்ளிட்ட எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் தனிப்பட்ட முறையில் சட்டப்படி தீர்வு காண வேண்டும். டிசி கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் மாற்றுச் சான்றிதழை வழங்க மறுக்கும் பள்ளிகளுக்கு எதிராக முதன்மை கல்வி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக இரு வாரங்களில் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

டிசி வழங்க மறுப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டால் அதனை நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரிக்கத் தயாராக உள்ளது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

-பிரியா

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

சனி 7 ஆக 2021