மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 7 ஆக 2021

அதிமுகவை விமர்சிக்க அமமுகவினருக்கு தடை?

அதிமுகவை விமர்சிக்க  அமமுகவினருக்கு தடை?

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்து 65 தொகுதிகளில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியானது. தேர்தலுக்கு முன்பே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திடீரென ஆக்டிவ் அரசியலில் இறங்கினார்.

அதிமுக., அமமுக தொண்டர்களுக்கு போன் செய்த சசிகலா அந்த உரையாடலை பதிவு செய்து வெளியிட்டார். தமிழ்நாட்டு அரசியலில் அறிக்கை, வீடியோ அறிக்கை போன்றவற்றைப் பார்த்த பலருக்கும் சசிகலாவின் ஆடியோ அரசியல் புதிதாக இருந்தது. அது அதிமுகவில் சலசலப்புகளையும் ஏற்படுத்தியது.

'நான் தான் பொதுச் செயலாளர், விரைவில் கட்சியை கைப்பற்றி சரிசெய்வேன். அவர்கள் இருவருக்கும் (பன்னீர், எடப்பாடி) இடையில் ஒற்றுமை இல்லை. கட்சியில் தொண்டர்களுக்கு மரியாதை இல்லை' என்றெல்லாம் தனது அலைபேசி உரையாட்ல்களில் கருத்து வெளியிட்ட சசிகலா விரைவில் அதிமுகவை கைப்பற்றுவேன் என்றும் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் சுற்றுப் பயணம் வருவேன் என்றும் அறிவித்திருந்தார். இதன் அடுத்த கட்டமாக தொலைக்காட்சிகளில் சிறப்புப் பேட்டிகளும் அளித்தார்.

இதற்கிடையே திடீரென டெல்லிக்கு அழைக்கப்பட்ட பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கடந்த ஜூலை 26 ஆம் தேதி பிரதமர் மோடியையும், 27ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தனர். அவர்களின் டெல்லி பயணத்தின்போது சசிகலா டாபிக் பேசப்பட்டதாக பலரும் யூகங்களை வெளியிட்டனர்.

அதற்கேற்றமாதிரி பன்னீர், எடப்பாடி டெல்லி பயணத்துக்குப் பிறகு சசிகலா தொண்டர்கள், நிர்வாகிகளுடன் பேசும் ஆடியோக்கள் வெளிவருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இதுபற்றி சசிகலா தரப்பில் விசாரித்தபோது, 'சசிகலா தொடர்ந்து அலைபேசியில் தொண்டர்கள், நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவை வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது ஏன் என்று தெரியவில்லை' என்கிறார்கள்.

இதற்கிடையில்தான் டிடிவி தினகரன் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்பாட்டத்தை ஆகஸ்டு 6 ஆம் தேதி வைத்திருந்தார். அதற்கு முதல் நாள் ஆகஸ்டு 5 ஆம் தேதி பாஜக அதே காரணத்துக்காக போலீஸ்தடையை மீறி உண்ணாவிரதம் நடத்தியது. ஆனால் டிடிவி தினகரன் ஆகஸ்டு 4 ஆம் தேதியே கொரோனா நெறிமுறைகள் காரணமாக போலீஸ் அனுமதி மறுத்ததால் ஆர்பாட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார்.

"பாஜகவே தஞ்சாவூரில் ஆர்பாட்டம் நடத்துகிறது. ஆனால் பாஜகவை விட வலிமையான அமமுக திடீரென ஆர்பாட்டத்தை ஒத்திவைத்திருப்பது ஆச்சரியம் தருகிறது. கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி ஆர்பாட்டத்தை நடத்தவேண்டும் என்று தினகரன் உத்தரவிட்டு, அதற்கேற்ப பத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டமும் போட்டோம். ஆனால் திடீரென ஆர்பாட்டத்தை ரத்து செய்துவிட்டு ஆரோவில் சென்றுவிட்டார் தினகரன். கொரோனா கட்டுப்பாடுகள் ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும் அந்த ஆர்பாட்டத்தில் திமுக, பாஜகவோடு அதிமுகவையும் விமர்சிக்க வேண்டியிருக்கும் சூழலில் அது ரத்துசெய்யப்பட்டதற்கு வேறு அரசியல் காரணங்களும் இருக்கிறது" என்கிறார்கள் அமமுகவின் மாசெக்கள் சிலரே.

இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் அமமுகவின் திடீர் சைலன்ட்டுக்கான பின்னணியை எடுத்துச் சொல்லும் வகையில் இருக்கிறது.

மறைந்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் சிலை சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அவ்வையார் சிலை எதிரில் உள்ள லேடி வெலிங்கடன் கல்லூரி வளாகத்தில் இருக்கிறது. இந்த சிலையை கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தர். அந்த சிலைக்காக அமைக்கப்பட்ட மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. அதனால் ஜெயலலிதா சிலை இருட்டில் இருக்கிறது. இதை அதிமுகவினரும் கண்டுகொள்ளவில்லை.

அதைப் பார்த்த அமமுகவினர் தங்களது மாவட்ட நிர்வாகத்துக்குக் கொண்டு சென்றனர். மாவட்ட நிர்வாகத்தில் இருந்து மண்டலப் பொறுப்பாளரான துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் கவனத்துக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டது. 'எடப்பாடி திறந்து வைத்த அம்மா சிலை இன்று இருட்டில் இருக்கிறது. இதை வைத்தே எடப்பாடியையும் திமுகவையும் கடுமையாக விமர்சிக்கலாம்' என்று ஜெயா டிவி உள்ளிட்ட டிவி சேனல்களையும் அழைக்கத் தயாராகிவிட்டனர். ஆனால் செந்தமிழன், 'அதெல்லாம் வேண்டாம். இப்போதைக்கு அதிமுகவையெல்லாம் விமரிசிக்க வேண்டாம்' என்று சொல்லிவிட்டார். இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு அதில் மேற்கொண்டு அரசியல் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

ஆக ஆடியோவை சைலன்ட் செய்த சசிகலா, ஆர்பாட்டத்தை தள்ளி வைத்த தினகரன், அதிமுகவை விமர்சிக்க வேண்டாம் என்ற அமமுக தலைமையின் உத்தரவு இதெல்லாம் உள்ளுக்குள் ஏதோ ஒன்று நடப்பதை சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

அது அந்த ஜெயலலிதாவுக்குதான் வெளிச்சம்!

-வேந்தன்

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்: முதல்வர் ...

8 நிமிட வாசிப்பு

சொந்தக் கட்சியினர் மீதும் பிறாண்டத் தொடங்கிய பி.டி.ஆர்:  முதல்வர்  ஆக்‌ஷன் என்ன?

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

6 நிமிட வாசிப்பு

தொழிலாளி கொலை: கைதாவாரா திமுக எம்.பி?

நான் வழக்குப் போட்டேனா? திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

4 நிமிட வாசிப்பு

நான்  வழக்குப் போட்டேனா?  திமுகவுக்கு எடப்பாடி நேரடி கேள்வி!

சனி 7 ஆக 2021