மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 6 ஆக 2021

100% தனியார்: இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை 80 விநாடிகளில் இடித்துவிட்ட நிர்மலா- கொதிக்கும் ஊழியர்கள்!

100% தனியார்:  இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை 80 விநாடிகளில் இடித்துவிட்ட நிர்மலா- கொதிக்கும் ஊழியர்கள்!

அரசு பொது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அயல்நாட்டு முதலாளிகளுக்கு விற்பனை செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பில் பாஸ் செய்துள்ளது பாஜக அரசு. இதனால் நாடு முழுவதும் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

50 ஆயிரம் ஊழியர்கள், 8ஆயிரம் கிளைகள், 10 லட்சம் முகவர்கள் உள்ள பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரைவார்க்க 80 வினாடியில் அறிவித்துவிட்டார் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் என்கிறார்கள் ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள்.

ஆகஸ்ட் 4ஆம் தேதி, இந்தியா முழுவதுமுள்ள அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களின் அலுவலகம் எதிரில் ஊழியர்கள் இந்த அறிவிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் விண்ணைப் பிளக்கும் அளவுக்குக் கோஷமிட்டனர்... ‘மத்திய அரசே மோடி அரசே! விற்காதே விற்காதே! அரசு பொது காப்பீட்டு நிறுவனத்தை விற்காதே’ , ‘நீதி எங்கே நீதி எங்கே, நிதி அமைச்சரே நிர்மலாவே’ என கோஷமிட்டார்கள் ஆக்ரோஷமாக.

சென்னை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இன்ஷூரன்ஸ் தொழிற்சங்கத்தின் தென் மண்டல பொதுச்செயலாளர் (ஆந்திரா,கர்நாடக, தெலுங்கானா, தமிழ்நாடு) ஆனந்த்திடம் போராட்டங்களைப் பற்றிக் கேட்டோம்.

“இந்திய நாட்டு நலன் கருதியும் பாதுகாப்பு கருதியும் தனியார் உடைமையாக இரு ந்த நிறுவனங்களை நாட்டுடைமையாகினார்கள் முன்னாள் பிரதமர்கள் நேருவும், இந்திரா காந்தியும்

ஆனால் தற்போதுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுடைமையாக உள்ள பொது நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்துவருகிறார்.

1971க்கு முன்பு 107 தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் கொள்ளையடித்து கொழுத்துப்போய் பல முறைகேடுகளைச் செய்து வந்ததைக் கண்டுபிடித்து, இந்திராகாந்தி அவசரச் சட்டம் கொண்டுவந்து காப்பீட்டு நிறுவனங்களை தேசியமயமாக்கினார்.

1972இல் பொது காப்பீடு வணிகம் தேசிய மயமாக்கல் திட்டம் சட்டத்தை அமல்படுத்தினார். 107 நிறுவனங்களை ஒன்றிணைத்து நான்காகப் பிரித்து நேஷனல் இந்தியா இன்சுரன்ஸ் லிமிடெட் கொல்கத்தாவை தலைமையிடமாகவும், நியூ இந்தியா இன்ஷரன்ஸ் லிமிடேட் மும்பையை தலைமையிடமாகவும், ஓரியன்டல் இன்ஷூரன்ஸ் லிமிடேட் டெல்லியை தலைமையிடமாகவும், யுனைடைட் இந்தியா இன்ஷூரன்ஸ் லிமிடேட் சென்னையை தலைமையிடமாகவும் செயல்பட்டு வருகிறது.

19.5 கோடி முதலீட்டுடன் கொடுத்தது இந்திரா காந்தி அரசு. அதன் மதிப்பு தற்போது 2 லட்சம் கோடி அசையும் சொத்தாகவும் அசையா சொத்தாகவும் உள்ளது. லாபகரமாக இயங்கி வருகிறது. நான்கு அரசு பொது காப்பீட்டு நிறுவனங்கள் 8ஆயிரம் கிளைகளுடன் 50 ஆயிரம் ஊழியர்களுடன் பத்து லட்சம் முகவர்களுடன், 50 கோடி மக்களுக்குக் காப்பீடு திட்டத்தில் பயனடையச் செய்துவருகிறது. மக்கள் காப்பீடு திட்டம், ஆடு, மாடுகளுக்கான காப்பீடு, விவசாய காப்பீடு, பிரதம மந்திரி காப்பீடு திட்டம் என மக்களுக்குச் சேவை செய்துவருகிறது.

பிரதம மந்திரி விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் இறந்துபோகிறவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தில் 17 கோடி மக்கள் இருக்கிறார்கள். ஆண்டுக்கு வெறும் 12 ரூபாய் செலுத்தினால் போதும் மீதி 350% சதவீதத்தை இன்ஷூரன்ஸ் கம்பெனி செலுத்தி வருகிறது மக்கள் நலன் கருதி.

ஆனால் லாபம் நோக்கத்துடன் செயல்பட்டுவரும் 27 தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் 2500 கிளைகளில் சுமார் ஐந்து கோடி பேர் மட்டுமே பயன்பட்டுவருகிறார்கள். அதிலும் பல முறைகேடுகள் ஏராளமான புகார்கள் குற்றச்சாட்டுகள். கிராமப்புற மக்களைக் கண்டுகொள்வதில்லை, ஆனால் தனியார் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்கிறார். என்ன கேவலம் இது”என்ற ஆனந்த்திடம்,

“ அரசு பொது காப்பீட்டு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு திடீரென்று எடுத்த முடிவா?”என்று கேட்டோம்.

“2016இல் ஒரு சட்டம் திருத்தம் கொண்டுவந்தார்கள். அதில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ங்களில் 49% சதவீதம் பங்கைத் தனியாருக்கு விற்பனை செய்யலாம் மீதி 51%சதவீதம் பங்கு அரசிடம் இருக்கும் என்று முடிவு செய்தார்கள். ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போது, ஆகஸ்ட் 2 ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வைக்காமல் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்காமல் 80 வினாடியில் 74% சதவீதம் பங்குகளை தனியாருக்கு விற்கலாம், அதுவும் பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்கலாம் என்று பில் பாஸ் செய்துள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

பொன் விழா கொண்டாடும் ஆண்டில் பாபர் மசூதியை இடித்ததுபோல் இமயம் போல் வளர்ந்துள்ள அரசு பொது காப்பீட்டு நிறுவனத்தை 80 வினாடியில் இடித்து தரைமட்டமாகிவிட்டது பாஜக ஆட்சி.

1971இல் இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டுக்கும் போர் நடந்தபோது இந்திய இராணுவ விமானம் மற்றும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கமுடியாது என்றது தனியார் பெட்ரோல் நிறுவனம்( அமெரிக்கா நிறுவனம்) மறுத்தது. அப்போதுதான் யுத்தம் முடிந்ததும் அரசுடமையாகினார் இந்திரா காந்தி அவர்கள்.

எந்த நோக்கத்துடன் தனியார் நிறுவனங்களை அரசுடமையாகினர்களோ அதையெல்லாம் தவிடுபொடியாகி மீண்டும் அரசுடைமையை தனியார் உடைமையாக்கி வருகிறது பாஜக ஆட்சி.

பாஜக தவறான போக்கைக் கண்டித்து நாடு தழுவிய பெரும் போராட்டம் செய்வதற்குத் தயாராகிவருகிறோம். நாடாளுமன்றத்தில் வாதாட அனைத்து கட்சிகளின் எம்.பி,கள் மற்றும் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறோம்” என்றார் ஆனந்த்.

-வணங்காமுடி

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

வெள்ளி 6 ஆக 2021