மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்! அரைக் கம்பத்தில் அதிமுக கொடிகள்!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார்! அரைக் கம்பத்தில் அதிமுக கொடிகள்!

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று (ஆகஸ்டு 5) காலமாகிவிட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்த 80 வயதான மதுசூதனன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமாகிவிட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் முன்பே, அதிமுக தலைமையின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுசூதனன் தனது பள்ளிக் காலத்திலேயே எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டு தனது 14 வயதிலேயே வடசென்னையில் எம்.ஜி.ஆர். மன்றம் அமைத்தவர். எம்ஜிஆர் காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். ஜானகி -ஜெ. அணிகள் செயல்பட்டபோது ஜெயலலிதாவின் தளபதியாக சென்னையில் விளங்கியவர். 1991 ஆட்சியில் அமைச்சராக பணியாற்றினார் மதுசூதனன். 2007 முதல் இப்போது வரை அதிமுகவின் அவைத் தலைவராக பணியாற்றியவர் மதுசூதனன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவரது பக்கம் ஆதரித்தவர். அதிமுகவின் முக்கிய பதவியான அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் தனது ஆதரவை ஓ.பன்னீருக்கு அளித்தது அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவமாக இருந்தது. தேர்தல் ஆணையம் கட்சியின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி பிறகு அதை மீண்டும் வழங்கியபோது ஓ.பன்னீர் அணியில் இருந்த அவைத் தலைவர் மதுசூதனனிடம்தான் வழங்கியது.

சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றிய மதுசூதனன், சில வாரங்களாகவே அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது அவரை சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மருத்துவமனை சென்று நலம் விசாரித்தனர்.

ஓரிரு நாட்களாக மூச்சுத் திணறல் அதிகமான நிலையில் அவர் இன்று இயற்கை எய்தினார்.

மதுசூதனன் இறந்த தகவல் தெரிந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் அப்பல்லோ மருத்துவமனையில் அதிமுக நிர்வாகிகள் யாரும் வரவில்லை, அமைதியாகவே இருந்தது வளாகம்.

மதுசூதனன் மறைவை ஒட்டி இன்று முதல் ஆகஸ்டு 7 வரை மூன்று நாட்கள் அதிமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வியாழன் 5 ஆக 2021