மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் முதல்வர்!

மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இந்தியாவுக்கே இது முன்னோடி திட்டம் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில், குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் பரவல் காலத்தின் போது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தொற்றா நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றிற்குத் தினசரி மாத்திரை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டது.

சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் ஆகியவற்றுக்காகச் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மருத்துவம் வழங்குவதற்காக 242 கோடி ரூபாய் செலவில், முதல் கட்டமாக 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

1172 துணை சுகாதார மையங்கள், 189 ஆரம்பச் சுகாதார மையங்கள், 50 சமுதாய நலவாழ்வு மையங்கள், சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 26 நகர்ப்புற ஆரம்பச் சுகாதார மையங்கள் என 1,400க்கும் மேற்பட்ட இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தை, தொடங்கி வைப்பதற்காக நேற்று (ஆகஸ்ட் 4) தனி விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அங்கு நட்சத்திர ஓட்டலில் தங்கி விட்டு இன்று காலை, 9.50 மணியளவில் சாமனப்பள்ளி கிராமத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அந்த பகுதியில் உள்ள பயனாளியின் வீட்டுக்கே சென்று மருந்து மாத்திரைகளை முதல்வர் வழங்கினார். இரண்டாவது பயனாளியின் வீட்டுக்குச் சென்று அளிக்கப்படும் சிகிச்சை முறையைப் பார்வையிட்டார்.

அதோடு பெருநிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி மூலம், மலைவாழ் மக்களுக்கான 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை, இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியானது. கொரோனா காலத்தில் சுகாதார துறையின் பணிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருந்தது. கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த துறை எப்படிச் செயல்பட்டது, குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தன்னலமின்றி எவ்வாறு செயல்பட்டார்கள் என்பது இந்த நாட்டுக்கே தெரியும்.

இதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையால் உள்ள நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உடல் பரிசோதனை இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பொதுச் சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று அவர்களின் சேவையை ஆற்ற இருக்கின்றனர். முதல் கட்டமாக 1,764 பெண் சுகாதார தன்னார்வலர்களும், 50 இயன்முறை மருத்துவர்களும் 50 செவிலியர்களும் இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்தின் மூலம் 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடி மக்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இத்திட்டத்தின் நோக்கத்தை உணர்ந்து இச்சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

-பிரியா

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வியாழன் 5 ஆக 2021