மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

தமிழ்நாட்டுக்கு மூன்று சி.எம்.: திமுகவைத் தாக்கிய அண்ணாமலை

தமிழ்நாட்டுக்கு மூன்று சி.எம்.: திமுகவைத்  தாக்கிய அண்ணாமலை

மேகதாது அணை கட்டக்கூடாது என்று கர்நாடக அரசை வலியுறுத்தி தமிழக பாஜகவின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஆகஸ்டு 5) தஞ்சாவூரில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் நாளை ஆகஸ்டு 6 ஆம் தேதி நடக்க இருந்த ஆர்பாட்டத்தை அமமுக தள்ளி வைத்துள்ளது. பொறுப்புள்ள கட்சியாக சட்டத்தை மதித்து ஆர்பாட்டத்தை தள்ளிவைக்கிறோம் என்றார் தினகரன்.

ஆனால். தடையை மீறியும் கொரோனோ பரவல் பற்றி கவலைப்படாமலும் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், ஏ.என்.எஸ். பிரசாத் ,கார்வேந்தன், வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், ஜி.கே.நாகராஜ், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்த உண்ணாவிரதத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாஸ்க் அணிந்தும் மாஸ்க் அணியாமலும் தென்படுகின்றனர்.

இந்த உண்ணாவிரதத்தில் தொடக்க உரையாற்றிய பாஜக தலைவர் அண்ணாமலை,

“இது ஒரு சாதாரண அரசியல் மேடை கிடையாது. மேகதாதுவிலே அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை கைவிடக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்.

நாம் இந்த அறப்போராட்டத்தை அறிவித்த பின் பலர் நம் மீது விமர்சனங்களை வைத்தார்கள்.ஒரு தலைவர், ‘யோவ் அண்ணாமலை நீ கர்நாடகா

போய் அங்கே அணை கட்டுவதை நிறுத்து’ என்றார். மய்யம் என்று கட்சிக்கு பெயர் வைத்துவிட்டு மய்யம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவர், ‘இரு தலையாட்டி பொம்மைகளை போல பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலே ஒரு பொம்மை, தமிழ்நாட்டிலே ஒரு பொம்மை’ என்று சொன்னார்.

நம் கட்சி விவசாயிகளுக்கானது. மாநில அரசு திமுக அரசு சாராயம் விற்கிற அமைச்சருக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாய அமைச்சரை தூரமாக வைத்திருக்கிறது. சாராயம் விற்கிற அமைச்சர் உதயநிதிக்கு பக்கத்திலேயே இருக்கிறார், முதல்வருக்குப் பக்கத்திலேயே நிற்கிறார்.

ஒவ்வொரு மாதமும் ரிவ்யூ மீட்டிங் என்னான்னா ஒவ்வொரு மாதமும் சாராய விற்பனையை அதிகரிப்பதுதான். அதே அரசு விவசாயிகளுக்காக இவ்வளவு பலன்கள் மத்திய அரசு கொடுத்திருக்கிறதே... அவை விவசாயிகளுக்கு கிடைத்திருக்கிறதா என்று ஒரு ரிவியூ மீட்டிங் போட்டிருக்கிறதா?

பாஜகவினருக்கு வயிற்றில் ஏதும் பிரச்சினை இருக்கிறது அதனால்தான் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி சொல்லுகிறார். அது கேவலமானது. அவர் அரசியலில் இருந்தே விலக வேண்டும். அதுபோல கமல்ஹாசன் நடிப்பின் உச்சகட்டம் அரசியல் என்று கருதி அரசியலுக்கு வந்துவிட்டார். கோவையில் இருந்த ஒவ்வொரு நாளும் அவர் தங்கியது ஸ்டார் ஹோட்டல்தான். அவர் நம்மை தலையாட்டி பொம்மை என்று சொல்கிறார். அவரை மக்களே அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிடுகிறார்கள்.

கர்நாடாகாவில் அதிக பணம் கொழிக்கக் கூடிய டிவி உதயா சேனல். அதன் உரிமையாளர் கலாநிதிமாறனின் தம்பிதான் தயாநிதிமாறன். அவருக்கு பணம் எங்கிருந்து வந்தாலும் சரி. தமிழக மக்களுக்கு உண்மையாக பணியாற்றும் பாஜகவை இன்னொரு முறை தயாநிதிமாறன் கொச்சைப்படுத்தினால் உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் பேசுவோம். யாரிடமும் நாங்கள் கைட்டி நிற்க மாட்டோம். நம் போராட்டத்தை பற்றி கருத்து சொல்ல எந்த கட்சிக்கும் முகாந்திரம் கிடையாது.

எங்கள் அறப்போராட்டம் கர்நாடக அரசை எதிர்த்து நடக்கிறது. இதற்கு முன் அங்கே இருந்த காங்கிரஸ் அரசு, இப்போதைய பாஜக அரசும் மேகதாது அணை கட்ட முயற்சிக்கிறது. அங்குள்ள அரசும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சேர்ந்து அணை கட்ட முயற்சிக்கின்றன. அவர்கள் எல்லாரையும் சேர்த்து எதிர்த்து நாம் போராட்டம் நடத்துகிறோம். சட்டரீதியாக மேகதாது அணை கட்ட முடியாது. நமது மத்திய நீர்பாசன அமைச்சரே சொல்லியிருக்கிறார் அணை கட்ட முடியாது என்று. பிறகு எதற்கு இந்த போராட்டம்? மேகதாது அணை கட்ட முடியாது என்ற நம்பிக்கையை விவசாயிகளுக்கு ஏற்படுத்துவதற்குத்தான். எந்த காரணத்துக்காகவும் மேகதாதுவை கர்நாடகாவில் அணை கட்ட விடமாட்டோம்.

மோடி வந்த பிறகு 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு விவசாயி கூட பட்டினியால் சாகவில்லை. ஆனால் பாஜக துணிந்து விவசாயிகளுக்காக இந்த பட்டினிப் போராட்டத்தை நடத்துகிறது. போலீஸார் தஞ்சைக்குள் பாஜகவினரை விட மாட்டேன் என்கிறார்கள். அதனால் பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்”என்று கூறிய அண்ணாமலை,

“தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் 8%, 12% லஞ்சம். தமிழ்நாட்டில் மூன்று சி.எம். இருக்கிறார்கள். யாரைப் பார்க்கணும் என்றாலும் பெரிய கனெக்‌ஷன் வேண்டும். அது முதல் சிஎம் ஆக இருக்கலாம். சி.எம்.கைகாட்டுகின்ற இரண்டாவது சி.எம். ஆக இருக்கலாம். சி.எம் ஆகப் போகிறோம் என்ற நினைப்பில் இருக்கும் மூன்றாவது சி எம் ஆக இருக்கலாம்” என்று திமுகவையும் திமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார்.

முதல் சி.எம்.ஸ்டாலின், இரண்டாவது சி.எம்.சபரீசன், மூன்றாவது சி.எம்.உதயநிதி ஸ்டாலின் என்று மேடைக்கு கீழிருந்தே விளக்கம் கொடுத்தார்கள் பாஜகவினர்.

-வேந்தன்

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

வியாழன் 5 ஆக 2021