மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

பாடப்புத்தகங்களில் தமிழறிஞர்களின் சாதிப்பெயர் நீக்கம்!

பாடப்புத்தகங்களில் தமிழறிஞர்களின் சாதிப்பெயர் நீக்கம்!

தமிழ்நாடு பாட நூல் புத்தகத்திலிருந்து தமிழ் சான்றோர்களின் பெயர்களிலிருந்த சாதியைக் குறிக்கும் சொற்கள் நீக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராகத் திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டார். இதன்பிறகு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளின் பாடப்புத்தகங்களும் தமிழில் அச்சிட்டு வெளியிடப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தமிழ்நாடு பாடநூல் கழகம், பாடப்புத்தகங்களில் தமிழ் சான்றோர்களின் பெயர்களிலிருந்த சாதியைக் குறிக்கும் சொற்களை நீக்கியுள்ளது.

தமிழ் தாத்தா என வரலாற்றில் அறியப்படும் அறிஞர் உ.வே.சாமிநாதய்யர். இவர் எழுதிய “பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்” என்ற தலைப்பிலான பாடம் பனிரெண்டாம் வகுப்பு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் எழுதியவர் பெயர் உ.வே.சாமிநாதய்யர் என்றிருந்த நிலையில், அய்யர் சொல் நீக்கப்பட்டு, உ.வே.சாமிநாதர் என்று இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் பெயர் மீனாட்சி சுந்தரனார் என்றும், தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயரை வேதநாயகம் என்றும் பாடநூலில் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழறிஞர்கள் டி.டபிள்யு. தாமோதரம் பிள்ளையின் பெயரை தாமோதரனார் என்றும், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயரைப் பாடநூலில் ராமலிங்கனார் என்றும் மாற்றி உள்ளனர். எனினும் சில பாடங்களில் உள்ள தீக்ஷிதர், தேசிகர் போன்ற சாதிப் பெயர்கள் நீக்கப்படவில்லை.

இதுபோன்று மற்றப்பாடங்களில் இருக்கக் கூடிய தமிழறிஞர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருக்கக் கூடிய சாதிப் பெயர்கள் நீக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன,

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் வட்டாரங்கள் கூறுகையில், “தெருக்களில் சாதிப் பெயரை நீக்க ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.

1978ல் திராவிடர் கழக நிறுவனர் பெரியார் நூற்றாண்டு விழாவின் போது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களிலிருந்து சாதி குறிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதி கலவரத்தைத் தொடர்ந்து, சாதிப் பெயருடன் இருந்த தலைவர்களின் பெயர்களை நீக்கினார் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி. இதன்விளைவாக போக்குவரத்துக் கழகங்களில் இடம்பெற்றிருந்த பல்லவன், பாண்டியன், சேரன், சோழன் மற்றும் பட்டுக்கோட்டை அழகிரி போன்ற பெயர்களும் நீக்கப்பட்டன.

இந்த சூழலில், திமுக தலைமையிலான அரசு பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த தமிழறிஞர்களின் பெயருக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயரினை நீக்கியுள்ளது.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வியாழன் 5 ஆக 2021