மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 ஆக 2021

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி!

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி!

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த ஒன்றிய ரயில்வே, தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், “புறநகர் மற்றும் பயணிகள் ரயில்கள் உட்பட அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 4141 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் மட்டும் 335 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 814 நிலையங்களில் இது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து ரயில் நிலையங்களிலும் காணொலி கண்காணிப்பு அமைப்பை நிறுவுவதற்கான பணிகளுக்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நிர்பயா நிதியின் கீழ் 983 நிலையங்களில் ஒருங்கிணைந்த விசாரணை, எதிர்வினை மேலாண்மை அமைப்பை நிறுவுதல் இதில் அடங்கும்.

ரயில் பாதைகளை இரட்டை தடமாக்குதல், மின் மயமாக்குதல், புதிய தடங்களின் கட்டுமானம், பாலங்களின் கட்டுமானம், சிக்னல் பணிகள் உள்ளிட்ட 143 உள்கட்டமைப்பு திட்டங்களை ஆறு மாநிலங்களில் ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் துரிதப்படுத்த இந்திய ரயில்வே முடிவெடுத்தது.

பிகாரில் 36 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஜார்கண்டில் 28 உள்கட்டமைப்பு திட்டங்களும், மத்தியப்பிரதேசத்தில் 6 உள்கட்டமைப்பு திட்டங்களும், ஒடிசாவில் 16 உள்கட்டமைப்பு திட்டங்களும், ராஜஸ்தானில் 53 உள்கட்டமைப்பு திட்டங்களும், உத்தரப்பிரதேசத்தில் 143 உள்கட்டமைப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு, 14,14,604 பணி நாட்கள் உருவாக்கப்பட்டன.

ரயில்வே வசதிகளை மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை விலை ஆன்லைன் பயணச்சீட்டு பதிவு முறை நீட்டிப்பு, ரயில்களில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகளுக்குத் தானியங்கி முறையில் கீழ் படுக்கையை ஒதுக்கீடு செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கு ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலி வசதி, ஐஆர்சிடிசியின் ஆன்லைன் தளமான irctc.co.in மூலம் சக்கர நாற்காலி முன்பதிவு வசதி, முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் 2016இல் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட பிறகு, அனைத்து ரயில் நிலைகள் மற்றும் ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்தி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. ஆனால் தற்போது வரை தமிழகத்தில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா உள்ளதா என்றால் அது கேள்விக்குறிதான். இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில் பெட்டிகளில் சிசிடிவி பொருத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

வியாழன் 5 ஆக 2021