தீரன் சின்னமலை: வேலுமணிக்காக காத்திருந்த ஓபிஎஸ்

politics

தியாகி தீரன் சின்னமலையின் 216ஆவது நினைவு நாளில் சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு பல கட்சித் தலைவர்களும் நேற்று (ஆகஸ்ட் 3) மரியாதை செலுத்தினார்கள்.

சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டையில் ஆடிப் பெருக்கு நாளில் வீரமரணம் அடைந்த தீரன் சின்னமலைக்கு சென்னை கிண்டியில் அவரது சிலையை நிறுவினார் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி.

நேற்று ஆகஸ்ட் 3ஆம் தேதி, தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் காலை 10.00 மணிக்கு மலர் தூவி மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டது. அடுத்தபடியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக பாஜக மற்றும் காங்கிரசுக்கு நேரம் ஒதுக்கியிருந்தார்கள் காவல் துறையினர்.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமையில் மதுரையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் நேற்று காலை 6.30 மணிக்கு மாலை போடசென்றார்கள். தகவல் அறிந்த காவல்துறையினர் பதட்டமாகி விரைந்துவந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மறித்து தடுத்து நிறுத்திவைத்திருந்தார்கள். முதல்வர் வந்துவிட்டுப் போகும் வரையில் பாஜகவினர் போராட்டம் கோஷம் எனப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

முதல்வர் ஸ்டாலின் சரியாக 10.00 மணிக்கு அமைச்சர்களுடன் வந்து மலர் தூவி மரியாதை செலுத்திட்டுச் சென்றார். அடுத்ததாக பாஜகவினர் மாலைபோட நெருங்கியபோது அதிமுக ஒருங்கிணைப்பாளருக்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று தடுத்து நிறுத்திவைத்தார்கள்.

அதனிடையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா தலைமையில் வந்த எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று சின்னமலை சிலைக்குச் சென்று மாலை மரியாதை செலுத்திட்டு, சிலையின் கீழே பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்திக்கொண்டிருந்தார்கள்.

காலதாமதமாக அங்கே வந்த போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் முதல்வர் வந்துவிட்டு போய்விட்டாரே… நாம் தனியாக சென்று சிலைக்கு மரியாதை செலுத்தலாமா என்ற யோசனையில் இருந்தார். அவர் புறப்பட முயற்சித்தபோது, அங்கே அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் அண்ணா தொ.மு.ச நிர்வாகி கமலக்கண்ணன் போன்றவர்கள் ஒபிஎஸ் வருகைக்குக் காத்திருந்தார்கள். இருவரும் நின்றதைப் பார்த்த அமைச்சர் ராஜகண்ணப்பன் இறங்கிப்போய் நலம் விசாரித்துவிட்டு பொன்னையன் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு ’பேசுங்கண்ணா’ சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

அடுத்ததாக பாஜகவினர் சிபி.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், வானதி சீனிவாசன், மதுரையிலிருந்து வந்த ராஜலட்சுமி ஆகியோர் மாலை மரியாதை செலுத்தினார்கள்.

லேட்டாக வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் சின்னமலை சிலை அருகில் வந்து சுமார் 20 நிமிடம் காத்திருந்தார். அவருடன் கட்சிகாரர்களும் சூழ்ந்திருந்தார்கள். ஓபிஎஸ் உதவியாளர் முன்னாள் அமைச்சர் வேலுமணியைத் தொடர்புகொண்டு, ‘அண்ணா எங்க வர்றீங்க, தலைவர் வந்துவிட்டார்’ என்று கேட்டுக் கொண்டே இருக்க, 20 நிமிடங்கள் வேலுமணிக்காக காத்திருந்தார் ஓபிஎஸ். வேலுமணி வந்ததும், தீரன் சின்னமலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டுத் திரும்பினார்கள்.

“அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் மரியாதை செலுத்த வரும்போது இடையூறுகள் மற்றும் மோதல்கள் உருவாகிடக்கூடாது என்பதால்தான் ஒவ்வொரு கட்சியினருக்கும் நேரம் ஒதுக்கிகொடுத்துவிடுகிறோம். ஆனால் அதிமுகவினர் கொடுக்கப்பட்ட நேரத்தில் வராததால் முட்டலும் மோதலும் ஏற்பட்டதை காவல்துறையினர் சாதுர்யமாக கையாண்டு, சின்ன மலைக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு திரும்பினார்கள் என்கிறார்கள் சென்னை மாநகர காவல்துறையினர்.

**-வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *