மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

4 ஆயிரம் கோடி புழங்கும் ஆன்லைன் ரம்மி: புதிய சட்டத்தின் முன் உள்ள சவால்கள்!

4 ஆயிரம் கோடி புழங்கும் ஆன்லைன் ரம்மி:  புதிய சட்டத்தின் முன் உள்ள சவால்கள்!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்துப் பிறப்பிக்கப்பட்ட சட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை விதித்து கடந்த ஆட்சி இயற்றிய அவசர சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 3) ரத்து செய்துவிட்ட நிலையில், ஆன் லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் வலிமையான புதிய சட்டம் இயற்றப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஆகஸ்ட் 4) அறிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளால் இளைஞர்கள் பலர் தங்களது பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் அவலம் தொடர்வதால் அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக முடிவெடுக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், கடந்த 2020 நவம்பர் 20 ஆம் தேதி ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து எடப்பாடி அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் கொடுத்தார்.

இதை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ஆகஸ்ட் 3 தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும் போதுமான காரணங்களை விளக்காமல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும், இதனை ரத்து செய்தனர். மேலும் உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை என்று கூறி தீர்ப்பு வழங்கினர்.

இந்தப் பின்னணியில் சட்ட அமைச்சர் ரகுபதி இன்று (ஆகஸ்ட் 4) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“ஆன் லைன் விளையாட்டை எதிர்த்து அதிமுக அரசின் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை அரசு வழக்கறிஞர் வாதிட்டு உரிய கருத்துகளை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும்... இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றும்போது கூறவில்லை’என்று கூறிய நீதிமன்றம் உரிய விதிமுறைகளுடன் புதிய சட்டம் இயற்ற தடையில்லை என்றும் கூறியுள்ளது.

பொதுநலன் மிகவும் முக்கியம் என்பதால் உரிய விதிமுறைகள், தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு எவ்வித தாமதமும் இன்றி ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவரவேண்டும் என்று தீர்ப்பு வந்தவுடனே முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழகத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டுவரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜூலை 26 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கைத் தீர்ப்புக்காக ஒத்தி வைத்தபோது திமுக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர் சண்முகசுந்தரம், “அதிமுக ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்ட சட்டத்தை புதிய திமுக அரசால் சட்டத்தை திருத்த முடியுமா என்று அரசிடம் அறிவுறுத்தல்களப் பெற வேண்டும். அதற்கு அவகாசம் வேண்டும்” என்று கேட்டார். ஆனால் இரு தரப்பு வாதங்களும் நிறைவுபெற்றதால் அதை நிராகரித்தது நீதிமன்றம். ஆன்லைன் விளையாட்டுகளால் பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன என்று அட்வகேட் ஜெனரல் கூறியபோது, “நீங்கள் அதை ஒழுங்குபடுத்துங்கள். நீங்கள் விளையாட்டுகளை முற்றிலுமாக தடைசெய்ய முடியாது" என்று கூறியது நீதிமன்றம். இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அதிமுக அரசின் சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வந்திருக்கிறது.

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பிரச்சினையாகவே இருக்கிறது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆன்லைன் கேம் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற அகில இந்திய கேமிங் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரோலாண்ட் லாண்டர்ஸ், “ஆன்லைன் கேமிங்கிற்கு நீதிமன்றம் எதிரானதல்ல என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு தெளிவாக நிறுவியிருக்கிறது. ஆன்லைன் கேமிங்கிற்கு தெளிவை வழங்குவதற்காக ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க அரசுகளுக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இதை தடை செய்யாதீர்கள், ஒழுங்குபடுத்துங்கள். தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை ஆன்லைன் கேம் துறை ஏற்படுத்தி வருகிறது”என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவின் பொது சூதாட்டச் சட்டத்தின்படி எந்த வடிவத்திலும் சூதாட்டம் சட்டவிரோதமானது. ஆனால், ரம்மி போன்ற விளையாட்டுகள் திறமையான விளையாட்டுகள் என்று ஆன்லைன் நிறுவனங்கள் வாதிடுகின்றன. ஏற்கனவே தெலுங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளன.

"ஆன்லைன் ரம்மி தடைசெய்யப்பட்ட மாநிலங்களில் சூதாட்டம் கணிசமாக உயர்கிறது. ஏனெனில் இதில் விளையாடியவர்கள் தவறாக வழிநடத்தும் கணக்கிட முடியாத தளங்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அத்தகைய தளங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அவற்றின் இருப்பிடங்கள் அல்லது உரிமை தெரியாததால் சாத்தியமற்றதாகிவிடும்” என்றும் ஆன்லைன் ரம்மி தளத்தினர் வாதிட்டிருக்கிறார்கள்.

ஆன்லைன் ரம்மி தொழிலில் சுமார் ரூ. 4,000 கோடி வரை புழக்கத்தில் இருக்கிறது. மேலும் இது வருடத்துக்கு 30% வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் இவற்றை தடை செய்வதா, முறைப்படுத்துவதா என்ற இரு வேறு குரல்கள் இந்தியா முழுதும் ஒலிக்கின்றன. புதிய ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை தமிழக அரசு தாக்கல் செய்வது சட்ட ரீதியாக சவாலான ஒன்றுதான்!

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 4 ஆக 2021