மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 4 ஆக 2021

எடப்பாடியை அதிர வைத்த ராமதாஸ்- கலைஞர் மூலம் ஸ்டாலின் ஆடிய கேம்!

எடப்பாடியை அதிர வைத்த ராமதாஸ்-  கலைஞர் மூலம் ஸ்டாலின் ஆடிய கேம்!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் படத்தை சட்டமன்றத்தில் ஆகஸ்டு 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஒன்றிய அரசோடு தமிழ்நாடு அரசு முழு இணக்கத்தோடு இல்லாத நிலையில் குடியரசுத் தலைவரின் தமிழக சட்டமன்ற வருகை முக்கியத்தும் வாய்ந்ததாகிறது.

அதே போல தமிழக அளவிலும் அரசியல் வரைபடம் இந்த விழா மூலமாக மாற்றி எழுதப்படவும் வாய்ப்பிருக்கிறது.

சட்டமன்றத்தில் கலைஞர் படத்திறப்பு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது அதிமுக. கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் உருவப் படம் திறந்து வைக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 12 ஆம் தேதி சட்டமன்றத்தில் அன்றைய சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் உருவப் படத்தைத் திறந்து வைத்தார். அப்போது, “நீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது” என்று திமுக, பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு படி மேலே போய், “சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டு விட்டது. இனி அங்கு புனிதம் இல்லை. குறைந்தபட்சம் அங்கு ஏற்கனவே திறந்து வைக்கப்பட்டுள்ள காந்தி, பெரியார், அண்ணா உள்ளிட்ட 10 பேரின் படங்களை அகற்றி விடலாமே. அவர்களின் புனிதமாவது காக்கப்படும் அல்லவா?”என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சியை திமுக புறக்கணித்தது போல, கலைஞர் படத் திறப்பு நிகழ்ச்சியை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்து அதன்படியே புறக்கணித்திருக்கிறது. “சட்டமன்றத்தில் கருணாநிதி படத்திறப்பு விழாவை அதிமுக புறக்கணிக்கிறது. சட்டமன்ற வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை திமுகவினர் புறக்கணித்தனர். அப்படி இருக்கும்போது கருணாநிதி படத்திறப்பு விழாவுக்கு நாங்கள் எப்படி வரமுடியும்?” என்கிறார்கள் அதிமுகவினர்.

ஆனால் ஜெயலலிதா படத்திறப்பில் திமுக கலந்துகொள்ளாததும், கலைஞர் படத்திறப்பில் அதிமுக கலந்துகொள்ளாததும் ஒன்றல்ல என்று கூறியிருக்கிறார் அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன்.

விழாவுக்கான அழைப்புகளையும் அமைச்சர் வேலுவும், துணை சபாநாயகர் பிச்சாண்டியும் நேரில் சென்று தலைவர்களுக்கு வழங்கினார்கள். பத்திரிகை அச்சடிப்பதற்கு முன்பே சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இந்த விழாவில் அதுவும் மேடையில் அமர்ந்து கலந்துகொள்ள வேண்டுமென்று விரும்பியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனை அழைத்த முதல்வர், “இது தொடர்பாக நீங்களே எடப்பாடியிடம் பேசுங்கள்”என்று சொல்லியிருக்கிறார்.

“கலைஞருக்காக நடக்கும் இந்த விழாவில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அனைவரும் பங்கேற்க வேண்டும். எடப்பாடி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துரையும் வழங்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.அதனால் அவரை நீங்களே அழையுங்கள்”என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். எடப்பாடியிடம் பேசி அவர் ஒப்புதல் பெற்ற பிறகு பத்திரிகை அச்சடித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதற்காக காத்திருந்தார்கள்.

முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே எடப்பாடி பழனிசாமியிடம் பேசியிருக்கிறார். அதற்கு என்ன ரெஸ்பான்ஸ் செய்தார் என்பதைத்தான் மனம் திறந்து சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.

“இந்த விழாவை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டபோதே முதல்வர் என்னை அழைத்து, ‘எதிர்க்கட்சியினரிடன் தோழமையோடும் அனுசனரனையோடும் இந்த விழா நடைபெறவேண்டும். எனவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி, இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர், சபாநாயகர் அமர்ந்திருக்கிற மேடையில் அவருக்கு இடம் ஒதுக்கப்படும், அதுமட்டுமல்ல அவரும் வாழ்த்துரைப்பதற்கு வாய்ப்பு தரப்படும் என்றெல்லாம் நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டும்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

நான் உடனே எடப்பாடியாரைத் தொடர்புகொண்டேன். அவரிடம், ‘சார்... நீங்க வரணும்னு தளபதி விரும்புகிறார். நாங்களும் விரும்புகிறோம். இந்த விழாவிலே நீங்கள் கலந்துகொள்வது மட்டுமல்ல... மேடையில் சரிசமமாக அமர்ந்து விழா குறித்து வாழ்த்துரை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு உங்கள் அனுமதியை கோருகிறோம்’என்று சொன்னேன். அவர் அதற்கு என்னிடம், ‘நான் இப்போது காரிலே சேலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறேன். நான் போய் சேர்ந்த பிறகு கலந்து சொல்கிறேன்’ என்று சொன்னார்.

நான் அப்போது கூட அவரிடம் சொன்னேன், ‘நீங்க சொன்னா கேட்கமாட்டார்களா சார். நீங்க சொல்லுங்க சார்’ என்றேன். அதற்கு அவர், ‘இல்லண்ணே... நான் சேலம் போயிட்டு கலந்துபேசிட்டு உங்ககிட்ட சொல்றேன்’என்றார்.

ஆனால் சேலம் போய் சேர்ந்தவர், தான் விழாவுக்கு வரவில்லை என்பதை அவரிடம் பேசிய என்னிடத்தில் சொல்லவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அசெம்பிளி செகரட்டரியை கூப்பிட்டு, ‘நாங்கள் அந்த விழாவுக்கு வரமாட்டோம்’என்று தெரிவித்துவிட்டார்.

காரணம் என்னிடம் வரமாட்டேன் என்று சொன்னால் நான் மீண்டும் வற்புறுத்தி அழைப்பேன் என்பதாலோ என்னவோ என்னிடம் சொல்லவில்லை. நான் அவரது பதிலுககாக காத்திருந்தேன். ஆனால் சட்டமன்ற செகரட்டரியிடம் இருந்து அவர் வரமாட்டார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. நாங்கள் அவர் வரவேண்டும் என்று முழுமனதாக விரும்பினோம். அவருக்கு முழு மரியாதை தரப்படுமென்றும் சொல்லியே அழைத்தோம்”என்று இந்த விழாவுக்கு எடப்பாடியை அரசு சார்பில் அழைத்தும் அவராகத்தான் வரவில்லை என்பதற்கான பின்னணியை விளக்கியிருக்கிறார் துரைமுருகன்.

அதுமட்டுமல்ல... “அன்றைக்கு ஜெயலலிதா படத்திறப்புக்கு எங்களை அழைக்கவில்லை. ஜெயலலிதா அம்மையார் படம் திறக்கப் போகிறோம் என்று எங்களிடம் சொல்லக் கூட இல்லை. பத்தோடு பதினொன்னு அத்தோட இது ஒண்ணு என்பது போல எங்களுக்கு இன்விடேஷன் மட்டும் அனுப்பினார்கள். அதனால் எதிர்க்கட்சி என்ற மரியாதை கிடைக்காததால் நாங்கள் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. எனவே நாங்கள் அந்த விழாவில் கலந்துகொள்ளாததும், அவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளாத சமாச்சாரமும் ஒன்றல்ல” என்று விளக்கினார் துரைமுருகன்.

எடப்பாடி இந்த விழாவுக்கு வராதது முக்கியமாக பேசப்பட்டதை விட அரசியல் ரீதியாக முக்கியமானதாக இன்னொரு அம்சம் பேசப்பட்டு வருகிறது. அதுதான் பாமகவின் அனைத்து ஐந்து எம்.எல்.ஏ.க்களும் இந்த விழாவில் கலந்துகொண்டது.

விழா தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்புவரை பாமக எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. முதல்வர் ஸ்டாலின் துரைமுருகனிடம் விழா தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு பேசும்போது, “பாமக சார்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வருவார்கள்”என்று சொல்லியிருந்தார். ஆனால் ஜி.கே.மணி கூட வரவில்லையே என்று முதல்வர் யோசித்துக் கொண்டிருந்த நிலையில்தான் அவசர அவசரமாக ஜி.கே.மணி உள்ளிட்ட ஐந்து பாமக எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்துக்குள் வந்து அமர்ந்தனர்.

அவர்கள் தாமதமாக வந்ததன் காரணம் வெளியே நடந்த நிகழ்வுதான். பாமக எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரும் ஜி.கே.மணி தலைமையில் ஜார்ஜ் கேட்டுக்கு வந்து, ‘எங்களை உள்ளே விடுங்கள். எங்களிடம் பாஸ் உள்ளது’ என்றனர். அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீஸார், ‘ஐயா இந்த வழியில் கார் போகவும் நடந்து செல்லவும் அனுமதி இல்லை’ என்று மறுத்தனர்.

இதனால் போலீசுடன் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ‘ஐயா நாங்கள் மேல் அதிகாரிகள் சொல்வதைத்தான் கேட்கமுடியும். இது குடியரசுத் தலைவர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. தயவு செய்து மெயின் கேட் வழியாகச் செல்லுங்கள். உங்களிடம் பாஸ் உள்ளது’ என்று ஜி.கே.மணியிடம் பொறுமையாகப் பேசி உள்ளே அனுப்பி வைத்தார். அதனால்தான் பாமக எம்.எல்.ஏ.க்கள் உள்ளே வருவதற்கு தாமதம் ஏற்பட்டுவிட்டது.

கலைஞர் படத்திறப்பு விழாவில் எடப்பாடி கலந்துகொள்ளாதது கூட ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி என்ற அரசியல் விளையாட்டில் சேர்ந்துவிடும். ஆனால் பாமகவின் ஐந்து உறுப்பினர்களும் கலந்துகொண்டது ஸ்டாலினை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் அந்த 9 மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் தமிழகத்தின் வட பகுதியில்தான் வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஏழு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பாமகவின் கூட்டணி அதிமுகவுக்கு முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் எடப்பாடி கடந்த ஆட்சியில் அவசர அவசரமாக கொண்டுவந்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அறிவிப்பை, இப்போது நிரந்தரமாக்கி அரசாணை வெளியிட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

இதையடுத்து ஸ்டாலினுக்கு நேரில் சென்று நன்றி சொல்ல விரும்பியிருக்கிறார் ராமதாஸ். ஆனால் உடல்நிலை மற்றும் கொரோனா சூழல் கருதி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கருதி போனில் தொடர்புகொண்டு நன்றி சொல்லியிருக்கிறார். பாமகவின் ஐந்து எம்.எல்.ஏ.க்களும் நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்து நன்றி சொன்னார்கள்.

இந்தப் பின்னணியில் அதிமுக கூட்டணியை விட வன்னியர் நலன் என்ற அடிப்படையில் திமுக அரசோடு இணக்கமான போக்கையே விரும்புகிறார் டாக்டர் ராமதாஸ். அதன் அடிப்படையிலேயே அதிமுக சட்டமன்றத்தில் கலைஞர் படத்திறப்பு நிகழ்வை புறக்கணிக்கிறது என்று தெரிந்தும் தனது ஐந்து எம்.எல்.ஏ.களும் நிகழ்வுக்கு வருவார்கள் என்ற உறுதியை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பாமகவின் இந்த மூவ்தான் எடப்பாடிக்கு அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் தமிழ்நாட்டின் வட பகுதியில் இருக்கின்றன. இங்கே பாமக கணிசமான செல்வாக்கோடு இருக்கிறது. ஒரு வேளை அதிமுக கூட்டணியில் தொடர்வது என்றால் பாமக அதிக இடங்களை இந்த மாவட்டங்களில் கேட்கும். ஆனால் அதற்கு ஏற்கனவே அன்புமணியால் விமர்சிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் சம்மதிக்க மாட்டார். எடப்பாடிதான் பாமக கூட்டணியை சட்டமன்றத் தேர்தலில் மெனக்கெட்டு உருவாக்கினார். அதனால் இந்த ஏழு மாவட்டங்களில் பாமகவுக்கு அதிகப்படியான இடங்களை தர எடப்பாடியும் சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறியே. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருக்குமா தனித்து நிற்குமா என்பது இந்த கலைஞர் படத்திறப்பு விழா மூலமாக விவாதத்துக்குரிய கேள்வியாகியிருக்கிறது.

இருக்கும் வரை அரசியல் காய் நகர்த்தல்களில் மிகுந்த சாமர்த்தியரான கலைஞர், தான் காலமான பின்னும் தனது படத்திறப்பு

மூலமாக அதிமுக -பாமக இடையே ஒரு சலசலப்பு விதையைத் தூவியிருக்கிறார்.

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

புதன் 4 ஆக 2021