மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

எடப்பாடியை எப்படியெல்லாம் அழைத்தோம் தெரியுமா? - துரைமுருகன்

எடப்பாடியை எப்படியெல்லாம் அழைத்தோம் தெரியுமா? - துரைமுருகன்

சட்டமன்ற நூற்றாண்டு விழா, சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திறப்பு விழா ஆகிய விழாக்களில் குடியரசுத் தலைவர் நேற்று (ஆகஸ்டு 2) கலந்துகொண்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்த இவ்விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.

அதிமுகவினர் ஏன் கலந்துகொள்ளவில்லை என்று இன்றைக்கு (ஆகஸ்டு 3) அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நேற்றைக்கு நடைபெற்ற கலைஞர் படத்திறப்பு விழா, சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் அதிமுகவினர் கலந்துகொள்ளவில்லை என்று சொல்கிறீர்கள். ஒரு கட்சி கலந்துகொள்வதும் கலந்துகொள்ளாததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

ஆனால் அவர்கள் சொல்லும் காரணம், முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களுடைய படத்திறப்பு விழாவில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை, அதாவது திமுக கலந்துகொள்ளவில்லை. எனவே கலைஞர் படத்திறப்பு விழாவை புறக்கணித்தோம் என்று சொல்கிறார்கள்.

ஆனால் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பிதழை மட்டும்தான் அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. இந்த விழாவை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டபோதே முதல்வர் என்னை அழைத்து, ‘எதிர்க்கட்சியினரிடம் தோழமையோடும் அனுசரனையோடும் இந்த விழா நடைபெறவேண்டும். எனவே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி, இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர், சபாநாயகர் அமர்ந்திருக்கிற மேடையில் அவருக்கு இடம் ஒதுக்கப்படும், அதுமட்டுமல்ல அவரும் வாழ்த்துரைப்பதற்கு வாய்ப்பு தரப்படும் என்றெல்லாம் நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டும்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.

நான் உடனே எடப்பாடியாரைத் தொடர்புகொண்டேன். அவரிடம், ‘சார்... நீங்க வரணும்னு தளபதி விரும்புகிறார். நாங்களும் விரும்புகிறோம். இந்த விழாவிலே நீங்கள் கலந்துகொள்வது மட்டுமல்ல... மேடையில் சரிசமமாக அமர்ந்து விழா குறித்து வாழ்த்துரை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு உங்கள் அனுமதியை கோருகிறோம்’என்று சொன்னேன். அவர் அதற்கு என்னிடம், ‘நான் இப்போது காரிலே சேலத்துக்கு போய்க் கொண்டிருக்கிறேன். நான் போய் சேர்ந்த பிறகு கலந்து சொல்கிறேன்’ என்று சொன்னார்.

நான் அப்போது கூட அவரிடம் சொன்னேன், ‘நீங்க சொன்னா கேட்கமாட்டார்களா சார். நீங்க சொல்லுங்க சார்’ என்றேன். அதற்கு அவர், ‘இல்லண்ணே... நான் சேலம் போயிட்டு கலந்துபேசிட்டு உங்ககிட்ட சொல்றேன்’என்றார்.

ஆனால் சேலம் போய் சேர்ந்தவர், தான் விழாவுக்கு வரவில்லை என்பதை அவரிடம் பேசிய என்னிடத்தில் சொல்லவில்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் அசெம்பிளி செகரட்டரியை கூப்பிட்டு, ‘நாங்கள் அந்த விழாவுக்கு வரமாட்டோம்’என்று தெரிவித்துவிட்டார்.

காரணம் என்னிடம் வரமாட்டேன் என்று சொன்னால் நான் மீண்டும் வற்புறுத்தி அழைப்பேன் என்பதாலோ என்னவோ என்னிடம் சொல்லவில்லை. நான் அவரது பதிலுக்காக காத்திருந்தேன். ஆனால் சட்டமன்ற செகரட்டரியிடம் இருந்து அவர் வரமாட்டார் என்ற தகவல் எனக்கு கிடைத்தது. நாங்கள் அவர் வரவேண்டும் என்று முழுமனதாக விரும்பினோம். அவருக்கு முழு மரியாதை தரப்படுமென்றும் சொல்லியே அழைத்தோம்.

ஆனால், அன்றைக்கு ஜெயலலிதா படத்திறப்புக்கு எங்களை அழைக்கவில்லை. ஜெயலலிதா அம்மையார் படம் திறக்கப் போகிறோம் என்று எங்களிடம் சொல்லக் கூட இல்லை. பத்தோடு பதினொன்னு அத்தோட இது ஒண்ணு என்பது போல எங்களுக்கு இன்விடேஷன் மட்டும் அனுப்பினார்கள். அதனால் எதிர்க்கட்சி என்ற மரியாதை கிடைக்காததால் நாங்கள் அந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. எனவே நாங்கள் அந்த விழாவில் கலந்துகொள்ளாததும், அவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளாத சமாச்சாரமும் ஒன்றல்ல” என்று விளக்கினார் துரைமுருகன்.

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

செவ்வாய் 3 ஆக 2021