மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

உருவப் படத்துக்குள் இருந்து உரையாற்றும் கலைஞர்! - சட்டமன்ற விழா கவரேஜ்!

உருவப் படத்துக்குள் இருந்து உரையாற்றும் கலைஞர்! - சட்டமன்ற விழா கவரேஜ்!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் படத்தை சட்டமன்றத்தில் ஆகஸ்டு 2 ஆம் தேதி மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஒன்றிய அரசோடு தமிழ்நாடு அரசு முழு இணக்கத்தோடு இல்லாத நிலையில் குடியரசுத் தலைவரின் தமிழக சட்டமன்ற வருகை முக்கியத்தும் வாய்ந்ததாகிறது.

சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா(இந்த நூற்றாண்டு பற்றி அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் கணக்கீடு தொடர்பான சர்ச்சைகளை எழுப்பியுள்ளன), கலைஞர் உருவப் படத் திறப்பு விழாவுக்க்காக குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்த சில மணி நேரங்களிலேயே சட்டமன்றக் கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. இருக்கைகள் அமைப்பது, சட்டமன்றத்தை புதுப்பித்தது போன்ற வேலைகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மேற்பார்வையிட்டு செய்திருந்தார், பந்தல் சிவா, பந்தல்கள் அலங்கரிப்பு வேலைகளை செய்திருந்தார்.

விழாவுக்கான அழைப்புகளையும் அமைச்சர் வேலுவும், துணை சபாநாயகர் பிச்சாண்டியும் நேரில் சென்று தலைவர்களுக்கு வழங்கினார்கள். அழைப்பிதழில் கார் பாஸ், மற்றும் ஒரு குறிப்பு இருந்தது. அதில் தாங்கள் நான்கு மணிக்கு அவரவர் இருக்கையில் அமர்ந்திருக்கவேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தது.

இருக்கைகள் சீனியாரிட்டிப்படி போடப்பட்டிருந்தது. ஜூனியர்களுக்கு வெளியில் வராண்டாவில் இருக்கைகள் போடப்பட்டு எல்இடி டிவி அமைக்கப்பட்டிருந்தது, மாலை 3.45 மணிக்கு திமுக எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள் ஆஜராகிவிட்டார்கள். உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் சட்ட ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இணைந்து குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சட்டமன்றத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களில் முதலில் ஆஜரானவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அவரைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் தோழர்கள் வந்தனர். அதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வந்தார். பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்நிகழ்வுக்கு வருகை தந்தார்.

பாமக எம்.எல்.ஏ,கள் இருக்கையும் எதிர்க் கட்சித் தலைவர் இருக்கை மட்டும் காலியாகவே இருந்தது. திமுக,வினர் பலரும் எழுந்து, ’என்னது பாமக எம்.எல்.ஏ. க்கள் வரவில்லையா?’ என்று பேசிக்கொண்டிருந்தார்கள். விழாத் துவங்க 5 நிமிடங்களுக்கு முன்பு சட்டமன்றத்துக்குள் ஜிகே மணி தலைமையில் பாமக எம்.எல்.ஏ.க்கள் வந்தனர்.

காலதாமதத்திற்கு என்ன காரணம் என்று விசாரித்தோம்.

பாமக எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரும் ஜி.கே.மணி தலைமையில் ஜார்ஜ் கேட்டுக்கு வந்து, ‘எங்களை உள்ளே விடுங்கள். எங்களிடம் பாஸ் உள்ளது’ என்றனர். அங்கே பாதுகாப்புப் பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையிலான போலீஸார், ‘ஐயா இந்த வழியில் கார் போகவும் நடந்து செல்லவும் அனுமதி இல்லை’ என்று மறுத்தனர்.

இதனால் போலீசுடன் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், ‘ஐயா நாங்கள் மேல் அதிகாரிகள் சொல்வதைத்தான் கேட்கமுடியும். இது குடியரசுத் தலைவர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. தயவு செய்து மெயின் கேட் வழியாகச் செல்லுங்கள். உங்களிடம் பாஸ் உள்ளது’ என்று ஜி.கே.மணியிடம் பொறுமையாகப் பேசி உள்ளே அனுப்பி வைத்தார். அதனால்தான் பாமக எம்.எல்.ஏ.க்கள் உள்ளே வருவதற்கு தாமதம் ஏற்பட்டுவிட்டது.

சட்டமன்றம் நடக்கும்போது முதல்வர் அமரும் இருக்கை இடத்தில்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்ந்திருந்தார். அவரை அடுத்து அமைச்சர் துரைமுருகன் இருந்தார். குறுகிய இடம் என்பதால் இடம் வசதி இல்லாமல் அமைச்சர்கள் பலர் மாடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

சரியாக 5.00 மணிக்கு விழா துவங்கியது. விழாவில் சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.

“தென் மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாகத் தமிழக சட்டப்பேரவை இருக்கிறது” என்று குறிப்பிட்ட சபாநாயகர் அப்பாவு, கோட்டையில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தது கலைஞர்தான் என்றும் குறிப்பிட்டார். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்ட முன்னாள் முதல்வர் கலைஞரின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

மாலை 5.15 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சட்டசபை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் முழு உருவப்படத்தை திறந்து வைத்தார்.அப்படத்தின் கீழே, ‘காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. சட்டமன்றத்தில் பல்வேறு பரிமாணங்களில் கலைஞரைப் பார்த்த பலரும் படமாக கலைஞரை சட்டமன்றத்தில் பார்த்து தங்கள் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

“வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் இது. தமிழக, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வகிக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்குக் குடியரசுத் தலைவர் வருகை தந்திருக்கிறார். அவர் பட்டியலின பழங்குடியின மக்களின் நலனுக்காக வாதாடுவது, போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணி கிடைத்தும் அதனை ஏற்காமல் வழக்கறிஞராக பணியாற்றினார். சமூகநீதியை தன் வாழ்வின் இலக்காகக் கொண்டவர். இவ்வளவு பெருமைக்குரிய அவர் தமிழக சட்டப்பேரவைக்கு வந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும் என்றார்.

மேலும் சட்டப்பேரவையின் வரலாற்றில், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சட்டப் பேரவையில் செயலாற்றிய கலைஞரின் உருவப்படத்தைத் திறந்திருப்பது அனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் தமிழன்னையின் தலைமகனான கலைஞரின் உருவப் படத்தைத் திறந்து வைத்து இருப்பதை எண்ணி தமிழக முதல்வராக மகிழ்கிறேன் கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்” என்றார். விழாவில் குடியரசுத் தலைவரும் முதல்வர் ஸ்டாலினும் நெருக்கமாகவும் இணக்கமாகவும் இருப்பது காணப்பட்டது.

அடுத்து, ’அனைவருக்கும் மாலை வணக்கம்’ எனத் தமிழில் தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கத் தனித்துவம் மிக்கவர் கருணாநிதி. அனைத்துத் துறைகளிலும் அறிவு மிகுந்தவராகத் திகழ்ந்தவர். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மிகச்சிறந்த வரலாறு உண்டு. இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இருவரும் 22 நிமிடங்கள் பேசினார்கள். நிறைவாக பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலைஞர் படத்தைத் திறந்து வைத்து சுமார் 15 நிமிடங்கள் பேசினார்.

"சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது பெருமைக்குரிய விஷயம். கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொள்வதிலும் பெருமையடைகிறேன். சட்டப்பேரவையில் இதுவரை இருந்த அனைத்து சபாநாயகர்களுக்கும் வாழ்த்துக்கள். இதுவரை இருந்த அனைத்து முதல்வர்களும் சட்டப்பேரவையின் மாண்பைக் காப்பாற்றியுள்ளனர். மக்களாட்சி இந்த சட்டப் பேரவையின் மூலம் உருவாக்கப்பட்டது. சட்டப்பேரவையை உருவாக்க நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் முயற்சி எடுத்தார்கள். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு இந்த சட்டப்பேரவை உதவியாக இருந்துள்ளது.

சட்டப்பேரவையில் நீண்டகாலம் தனது பங்களிப்பைக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்” என்று புகழாரம் சூட்டினார் .

அவரது உரை நிறைவுற்றதும் சரியாக 6.00 மணிக்குத் துணை சபாநாயகர் பிச்சாண்டி நன்றியுரை கூறினார்.

விழா முடிந்ததும் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு பக்கத்து அறையில் தேனீர், சிற்றுண்டி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இருவரும் சாப்பிடாமல் புறப்பட்டனர் என்கிறார்கள் அதிகாரிகள்.

விவிஐபிகளை வழி அனுப்பிவைத்துவிட்டு வந்த முதல்வர் ஸ்டாலின் தேனீர் விருந்தில் கலந்துகொண்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் கலந்துகொண்டார். தேனீர் விருந்து முடிந்ததும் சட்டமன்றத்தில் கலைஞரின் உருவப் படத்தை மீண்டும் ஒரு முறைப் பார்த்துவிட்டு 6.30 மணிக்கு முதல்வர் நிறைவாக புறப்பட்டார். அவரைத் தொடர்ந்து மற்ற தலைவர்களும் புறப்பட்டனர்.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாக, எதிர்க்கட்சித் தலைவராக, அமைச்சராக,முதலமைச்சராக எத்தனையோ அதிர்வுரைகளை ஆற்றிய கலைஞர், இன்று உருவப் படத்துக்குள் இருந்து மௌன உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

-மின்னம்பலம் டீம்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

செவ்வாய் 3 ஆக 2021