மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 3 ஆக 2021

குறள் வழி கண்ட குதூகல அறிவிப்பு!

குறள் வழி கண்ட குதூகல அறிவிப்பு!

ஸ்ரீராம் சர்மா

காவல்துறைக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து அரவணைத்திருக்கிறது அரசாங்கம்.

போலீஸ் இலாகாவைத் தன்னகத்தே கொண்டு, அதனைத் தாயினும் சாலப்பரிந்து ஆதூரமாக அணுகிய போற்றுதலுக்குரிய நமது மாண்புமிகு முதலமைச்சரை இதற்காக எத்துணை பாராட்டினாலும் தகும்.

காவல் துறையின் பெருமைக்குரிய டிஜிபி திரு. சைலேந்திரபாபு அவர்கள் வெளியிட்டதொரு அறிக்கையில்,

“இனி வருங்காலங்களில், காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும். அவர்களது பிறந்த நாள் – திருமண நாட்களில் விடுமுறை எடுக்க வாய்ப்புரிமை கொடுக்கப்படும்’’ என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், ‘‘அவர்களது பிறந்தநாள் வாழ்த்துகள் அந்தந்தப் பகுதி போலீஸ் வானொலி வாயிலாக அறிவித்து கொண்டாடப்படும்…” எனவும் அறிவித்திருக்கிறார்.

வாயார வரவேற்று மனதார போற்றப்படவேண்டிய மானுடம் கொழிக்கும் அறிவிப்பு அது!

நமது போலீஸ் துறையின் மேன்மை குறித்து ஏற்கனவே இரண்டு முறை மின்னம்பலத்தில் எழுதியிருக்கிறேன். குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று தொடங்கிய காலத்தில், என்னவென்றே புரியாத உயிராபத்து நிறைந்த அந்த ஆரம்பக் கட்டங்களில்…

“மக்களே, நிம்மதியோடு வீட்டுக்குள் இருந்து கொள்ளுங்கள். இதோ, நாங்கள் இருக்கிறோம் உங்களோடு…” என நெஞ்சு நிமிர்த்தியபடி நடுச்சாலைகளில் இறங்கி நமது காவலர்கள் களம் கண்ட விதம் குறித்து கசிந்திருக்கிறேன்!

தமிழ்நாட்டுப் போலீஸ்!

உலகின் முதல் தரமான போலீஸ் துறைகளுள் ஒன்றாகப் பல காலமாக நிலைபெற்று நமது மண்ணுக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் ஈடு இணையற்றக் காவல் துறை.

சொல்லப்போனால், மேலை நாட்டு போலீஸ் துறைகளைவிட நமது காவல் துறை உயர்ந்து நிற்கிறது என்பதே உண்மை.

ஆம்... வளர்ந்த நிலையில் இருக்கும் மேலை நாடுகளில் அவர்களுக்கு உதவியாக அதிநவீன புலனாய்வுக் கருவிகள் அங்கே உண்டு. சட்டத்துக்கு அஞ்சி நடந்துகொள்ளும் நாகரிகம் மக்களிடையே வளர்ந்துவிட்ட நிலை அங்கே நிலவுகிறது.

பொருத்திப் பார்த்தால், மக்கள்தொகையும் அங்கே குறைவு. சட்டங்களும் கடுமையானவை. அவ்வளவு இருந்தும் குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் அவர்கள் திக்கித் திணறுகின்றார்கள்.

ஆனால், மக்கள்தொகை பெருத்த நமது நாட்டில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் அதிகம் பேர் வாழும் இந்த துர்ப்பாக்கிய சுதந்திர இந்தியாவில்…

குறிப்பாக, நமது தமிழ்நாட்டில், காவல் துறையின் ரேஷியோ (Ratio) 632 : 1 என்பதாகத்தான் இருக்கிறது. அதாவது, அறுநூற்று முப்பத்திரண்டு நபர்களுக்கு ஒரே ஒரு காவலர் என்னும் விகிதமே நிலவுகிறது.

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலிலும்கூட, தங்களது அறிவுக் கூர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பை மட்டுமே நம்பி, நமது போலீஸ் துறை அயராது இயங்குகிறது.

சடுதியில் செயல்பட்டு வெற்றி முகட்டைத் தொட்டு மக்களைக் காத்து நிற்கிறது என்றால் அதை அடிவயிற்று ஆழத்திலிருந்து எழும் நன்றி கலந்த வாழ்த்தொலிகளால் போற்றியே ஆக வேண்டும்!

போலீஸாரும் மற்ற அரசாங்க ஊழியர்கள் போல சம்பளம் பெற்றுக்கொள்பவர்கள்தான் என்றாலும், தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு அதிகமாகவே அவர்கள் உழைக்கிறார்கள் என்பதே எனது துணிபு.

ஆம், வெயில் – மழை – புயல் – புழுதி என சகலத்துக்கும் முகம் கொடுத்து நேரம் காலம் பொருட்படுத்தாது தங்கள் உடல்நலனையும் – குடும்பநலனையும் பணயம் வைத்து அயராது உழைக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதை மனப்பூர்வமாக உணர்ந்த முதலமைச்சர் இன்று தனது காவல் துறையை அரவணைத்திருக்கும் பாங்கு, போலீஸார் குடும்பங்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது.

ஏற்கெனவே, விஐபிக்களுக்கான பாதுகாப்பில் பெண் போலீஸார் நிறுத்தப்படக் கூடாது என அறிவிக்கப்பட்ட நெகிழ்ச்சியான அணுகுமுறை வெகுவாக வரவேற்கப்பட்டு வாழ்த்தப்படும் நிலையில்… இந்த அறிவிப்பு காவல் துறையின் நலன் காக்கும் நிர்வாக செழிப்பை உயர்த்திப் பிடித்து தேசத்துக்கு வழி காட்டி நிற்கிறது.

அரசாங்கத்தின் இந்த மானுடம் சார்ந்த அணுகுமுறை, செயல்திறன் மிக்க ஆற்றலர்களான நமது காவலர்களை இன்னுமின்னும் அதிக வேகத்தோடு செயல்பட வைக்கும். குற்றங்களற்ற தமிழ்நாட்டை நோக்கி அது இட்டுச் செல்லும் என உறுதியாக நம்பலாம்.

மற்ற மற்ற துறைகளில் இருப்பதைப் போல காவல் துறையிலும், தவறிழைப்பவர்களும் - கடமை தவறும் கறுப்பாடுகளும் உண்டுதான்.

எனினும், அதன் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்பது இந்த மண்ணுக்கே உரிய நியாய தர்மம் சார்ந்த விழுமியங்களின் நீட்சி என்பதாகவே கொள்ள முடிகிறது. அந்த வகையிலும் இந்த மண்ணின் மேன்மையை உயர்த்தியே பிடிக்கிறார்கள் நமது காவலர்கள்.

தமிழக போலீஸாரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பை வடபுலத்து போலீஸ் அதிகாரிகள் விரும்பி ஏற்கிறார்கள் எனப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது, இந்த மண்ணுக்குப் பெருமை.

அத்தகைய பெருமையைத் தமிழ் மண்ணுக்கு சேர்த்துக் கொடுக்கும் நமது காவலர்களின் நலம் பேணுவது ஒவ்வொரு குடிமகனுக்கும் அத்தியாவசியக் கடமை ஆகிறது!

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின்

என்கிறது திருவள்ளுவரின் தமிழ் வேதம்!

‘ஆ’ எனில் ‘பசு’ என்று பொருள்படும். பசுவின் பயனாகக் கிடைக்கும் பாலை ‘இரண்டாம் உணவு’ என்பார்கள்.

‘காவலன்’ இந்தச் சமூகத்தை முறையாகக் காக்கத் தவறிவிட்டால் முதலில் உணவு அழியும். உணவு அழிந்த வறுமை சூழ் மண்ணில் குற்றங்கள் பெருகும்.

அதன்பின், கற்றல், கற்பித்தல், மெய்த்தவம், உயர் நோக்கம், பொருள் ஈட்டல், தானம் செய்தல் என மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஆறு தொழில்களும் கூறு கெட்டழியும்.

மொத்தத்தில் சமூகமே சீர்கெட்டுப் போகும் என்கிறார் ஈரடியில் உலகளந்த பேராசான்!

தமிழ்வேதம் உணர்ந்து தக்கதொரு முடிவை எடுத்த, காவலர்களைக் காத்த காவலனாகிய போற்றுதலுக்குரிய நமது முதலமைச்சரையும் அதை அறிவித்த வணக்கத்துக்குரிய டிஜிபி அவர்களையும் வரலாறு வழிமொழியும் என்பது திண்ணம்!

பெருமைக்குரிய நமது தமிழ்நாட்டுக் காவல் துறையின் மாட்சியும், அவர்தம் உடல் – மன ஆரோக்கியமும் உயர்ந்து ஒளிவீச நிறைந்து வாழ்த்துவோம்!

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.,

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

செவ்வாய் 3 ஆக 2021