மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

சட்டப்பேரவையில் கலைஞர் படம் திறப்பு - மகனாக நெகிழ்கிறேன்- முதல்வர்!

சட்டப்பேரவையில்  கலைஞர் படம் திறப்பு - மகனாக நெகிழ்கிறேன்- முதல்வர்!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முழு திருவுருவப் படத்தைத் தமிழக சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 2) மாலை திறந்து வைத்தார்.

1921 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. நூறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக பணியாற்றியவரும் 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தைச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

இதற்காக அவர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவருக்குப் புத்தகங்கள் மற்றும் பூங்கொத்து கொடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கார் மூலம் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு ஓய்வு எடுத்துவிட்டு மாலை 4.40 மணியளவில் புறப்பட்டு 5 மணியளவில் சட்டப்பேரவைக்கு வந்தடைந்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, துணைச் சபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் விழா மேடையில் அமர்ந்திருந்தனர். மேலும் விழாவில் அமைச்சர்கள், தலைமை நீதிபதி, மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழா மேடைக்குக் குடியரசுத் தலைவர் வந்ததும் தேசிய கீதமும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் குடியரசுத் தலைவர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றார்.

அப்போது அவர் தென் மாநிலங்களின் தாய் சட்டப்பேரவையாகத் தமிழக சட்டப்பேரவை இருக்கிறது என்றும் கோட்டையில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தது என்றும் குறிப்பிட்டார். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளிட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.

இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை, புத்தகம் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். முதல்வருக்குச் சபாநாயகர் பொன்னாடை, புத்தகம் மற்றும் நினைவுப் பரிசை வழங்கினார்.

பின்னர் மாலை 5.15 மணி அளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சட்டப்பேரவை அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது பெருமைக்குரிய விஷயம். கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைக்கும் விழாவில் கலந்து கொள்வதிலும் பெருமையடைகிறேன். சட்டப்பேரவையில் இதுவரை இருந்த அனைத்து சபாநாயகர்களுக்கும் வாழ்த்துக்கள். இதுவரை இருந்த அனைத்து முதல்வர்களும் சட்டப்பேரவையின் மாண்பைக் காப்பாற்றியுள்ளனர். மக்களாட்சி இந்த சட்டப் பேரவையின் மூலம் உருவாக்கப்பட்டது. சட்டப்பேரவையை உருவாக்க நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் முயற்சி எடுத்தார்கள். சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு இந்த சட்டப்பேரவை உதவியாக இருந்துள்ளது.

சட்டப்பேரவையில் நீண்டகாலம் தனது பங்களிப்பைக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியவர். திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்” என்று புகழாரம் சூட்டினார்.

இவ்விழாவில் அனைவருக்கும் மாலை வணக்கம் எனத் தமிழில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், “இந்திய அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கத் தனித்துவம் மிக்கவர் கருணாநிதி. அனைத்துத் துறைகளிலும் அறிவு மிகுந்தவராகத் திகழ்ந்தவர். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு மிகச்சிறந்த வரலாறு உண்டு. இந்தியாவில் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது” என்று கூறினார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாள் இது. தமிழக, இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வகிக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்குக் குடியரசுத் தலைவர் வருகை தந்திருக்கிறார். அவர் பட்டியலின பழங்குடியின மக்களின் நலனுக்காக வாதாடுவது, போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இந்திய ஆட்சிப் பணி கிடைத்தும் அதனை ஏற்காமல் வழக்கறிஞராக பணியாற்றினார். சமூகநீதியை தன் வாழ்வின் இலக்காகக் கொண்டவர். இவ்வளவு பெருமைக்குரிய அவர் தமிழக சட்டப்பேரவைக்கு வந்திருப்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஒன்றாகும் என்றார்.

மேலும் சட்டப்பேரவையின் வரலாற்றில், அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சட்டப் பேரவையில் செயலாற்றிய கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்திருப்பது அனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் தமிழன்னையின் தலைமகனான கருணாநிதியின் உருவப் படத்தைத் திறந்து வைத்து இருப்பதை எண்ணி தமிழக முதல்வராக மகிழ்கிறேன் கருணாநிதியின் மகனாக நெகிழ்கிறேன்” என்றார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 2 ஆக 2021