மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

மாதாகோவில் இடிப்பு: கலெக்டர் மீது முதல்வரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் புகார்!

மாதாகோவில் இடிப்பு: கலெக்டர் மீது முதல்வரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் புகார்!

திமுக எம்.எல்.ஏ.க்கள், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோரது தலையீட்டை மீறி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று (ஆகஸ்டு 2) வருவாய் துறை மூலமாக மலை மீது இருந்த ஒரு மாதா உருவத்தை இடித்தார் என்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடங்கிய அரசியல் பரபரப்பு முதல்வர் அலுவலகம் வரை எதிரொலிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சர்ச்சை திறக்க பாஜகஎதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸார் திறப்பு விழாவுக்கு அனுமதி மறுத்து போலீஸ் பாதுகாப்பு போட்டனர். இதை எதிர்த்து அருமனையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, “இந்த திமுக ஆட்சியே கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் போட்ட பிச்சை”என்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் முதல்வர், பிரதமர் ஆகியோரை கடுமையாக தாக்கியும் பேசினார். இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கிறிஸ்துவர்களை மையமாக வைத்து பரபரப்பும் சர்ச்சையும் மூண்டிருக்கிறது. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்கு ஒன்றியம் பொருவளூர் மற்றும் சவேரியார் பாளையம் கிறிஸ்துவர்கள் நிறைந்த பகுதி. இந்த அடிப்படையில் பொரூவளூர் கிராமத்தில் ஒரு சிறு மலை மீது ஒரு மாதா கோவிலை கட்டியிருக்கிறார்கள். அதன் முகப்பில் ஏசு, மாதாவின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.

இது புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருக்க்கிறது. எனவே இதை இடிக்க வேண்டும் என்று சிலர் கலெக்டரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து கிறிஸ்துவர்கள் இந்தத் தகவலை ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு சொல்லியிருக்கிறார்கள். உடனடியாக அதுகுறித்து விசாரித்திருக்கிறார் எம்.எல்.ஏ. “அந்த இடத்தில் வேறு மத கோயில் ஏதும் இல்லை. புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டதாக புகார் கொடுத்திருக்கிறார்கள்” என்று கிறிஸ்துவர்கள் எம்.எல்.ஏ.விடம் சொல்லியிருக்கிறார்கள்.

அதையடுத்து சில நாட்கள் முன்பு, கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதரிடம் போனில் பேசிய எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன், “இந்த விவகாரம் குறித்து பீஸ் கமிட்டி அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை பொறுமையாக இருங்கள். இரு தரப்பிடமும் பேசி சுமுகமான

முடிவெடுப்பதுதான் அரசுக்கு நல்லது. அப்பகுதி மக்களுக்கும் நல்லது. இப்போது எந்த அவசர நடவடிக்கையும் வேண்டாம்” என்று கலெக்டரிடம் கூறியுள்ளார்.

இந்தத் தகவலை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரும் சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தானிடமும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவரும் இன்று (ஆகஸ்டு 2) கலெக்டரைத் தொடர்புகொண்டு, “நான் சம்பந்தப்பட்ட அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ய வருகிறேன். அதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று (ஆகஸ்டு 2) காலை வருவாய் துறையினர், காவல்துறையினர் கலெக்டர் உத்தரவின்படி அந்த மாதா கட்டுமானத்தை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். இந்தத் தகவல் கிறிஸ்துவர்கள் மூலம் மறை மாவட்ட குருமார்களுக்கு போக அவர்கள் எம்,எல்.ஏ. அமைச்சர் என்று பல தரப்பினரிடமும், ‘என்ன சார் இது? திமுக ஆட்சியிலேயே இப்படி நடக்கிறது?” என்று கேட்டிருக்கிறார்கள்.

“ ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக் கூடிய 9 மாவட்டங்களில் கள்ளக்குறிச்சியும் ஒன்று. இந்த நிலையில் இப்பகுதியில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்துவ வாக்குகள் உள்ளன. மாதாகோவில் இடிக்கப்பட்ட பகுதி ரிஷிவந்தியம் ஒன்றியத்திலும், அதன் அருகே உள்ள பகுதிகள் சங்கராபுரம் ஒன்றியத்திலும் உள்ளன. இந்த நிலையில் கலெக்டர் மத அமைப்புகளின் அழுத்தத்துக்கு ஆட்பட்டு செயல்பட்டிருக்கிறாரோ?”என்றும் திமுகவினர் அரசியல் ரீதியாக சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

இந்தப் பின்னணியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் கலெக்டர் ஸ்ரீதர் மீது முதல்வர் வரை புகார் செய்திருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு மாதம் முன்புதான் இங்கே கலெக்டராக வந்தார் ஸ்ரீதர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேசியபோது, “நாங்கள் இதுகுறித்து தாலுகா ஆபீசில் விசாரித்துவிட்டுதான் சொல்ல முடியும்” என்றார்கள்.

-வேந்தன்

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 2 ஆக 2021