மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு!

மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு!

கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதை போன்று நீடித்துக் கொண்டே செல்கிறது. மீனவர்களின் இந்த பிரச்சினைக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.

இந்நிலையில் நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 28ஆம் தேதி கலைச்செல்வன், தீபன் ராஜ், ஜீவா மாறன், அரசுமணி உள்ளிட்ட 10 பேர் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

நேற்று மாலை இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் பயமடைந்த மீனவர்கள் படகுக்குள் மறைந்து கொண்டனர். அப்போது கலைச்செல்வன் என்பவரின் தலை பகுதியில் துப்பாக்கி குண்டு உரசிசென்றதால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இலங்கை கடற்படையினரிடமிருந்து தப்பித்த மீனவர்கள், காயமடைந்த கலைசெல்வனை இன்று(ஆகஸ்ட் 2) காலை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைசெல்வனை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தர்மராஜ் மருத்துவமனைக்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு குறித்து தமிழ்நாடு அரசிற்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என மீனவர்களுக்கு ஆட்சியர் உறுதியளித்தார்.

அதுபோன்று நாகை மாவட்ட திமுக செயலாளர் என்.கெளதமன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன் உள்ளிட்டோரும் கலைசெல்வனை நேரில் சந்தித்துநலம் விசாரித்தனர்.

சமீபத்தில் மீனவர்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அதில், ”திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 464 மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல், துப்பாக்கிச் சூடு போன்றவற்றால் உயிரிழந்தனர். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில், ஒரு மீனவர் கூட துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழக்கவில்லை. மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று தைரியமாக மீன் பிடிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் நம் பிரதமர் மோடிதான்” என்று அண்ணாமலை கூறியிருந்தார். அவர் சொல்லி ஓரிரு நாட்கள் கூட ஆகாத நிலையில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

-வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

திங்கள் 2 ஆக 2021