மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

பென்னி குயிக் மறைந்த பின் கட்டிய கட்டிடத்தில் வசித்தாரா? பன்னீர், எடப்பாடிக்கு அமைச்சர் எ.வ. வேலு பதில்!

பென்னி குயிக் மறைந்த பின் கட்டிய கட்டிடத்தில் வசித்தாரா? பன்னீர், எடப்பாடிக்கு  அமைச்சர்  எ.வ. வேலு பதில்!

மதுரையில் தமிழக அரசு அமைக்க இருக்கும் கலைஞர் நூலகம், முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் பென்னி குயிக் வாழ்ந்த கட்டிடத்தை இடித்துக் கட்டப்படுகிறது என்று அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் நேற்று (ஆகஸ்டு 1) கூட்டறிக்கை வெளியிட்டனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் இதே கருத்தை வெளியிட்டார்.

இவர்களுக்கு பதிலளித்து நேற்று (ஆகஸ்டு 1) தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ தென் தமிழ்நாடு மக்களின் கனவை நனவாக்க - அங்குள்ள இளைஞர் சமுதாயம் ஏற்றம் பெற மதுரையில் கலைஞர் பெயரில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தது, இருவருக்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பது அவர்களது பொருளற்ற அறிக்கையில் தெளிவாகிறது. மதுரைக்கு ஒரு நல்ல திட்டம் வருவதை அனுமதிப்பதா? என்று வீம்புக்காக மல்லுக்கு நிற்கிறார்கள் ! இரட்டை தலைமை உள்ள அ.தி.மு.கவால் ஒரு நல்ல திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், தனக்கு வாக்களித்துள்ள மக்கள் பயன் பெறும் திட்டம் ஓ. பன்னீர்செல்வத்துக்கே பிடிக்கவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது.

கலைஞர் நூலகத்திற்கு 7 இடங்களை தேர்வு செய்து, அவற்றுள் இறுதியாக மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் தேர்வு செய்யப்பட்டது. இந்தக் குடியிருப்பு வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பென்னிக்குயிக் வாழ்ந்ததாக திடீரென ஒரு புரளியை கிளப்பி விட்டு - பொய்ச் செய்தியைப் பரப்பி - இப்போது அறிக்கை வடிவில் வெளியிட்டு மதுரைக்கு வரும் நூலகத்தை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று அதிமுக வழக்கம் போல் தங்களது மலிவு அரசியலை நடத்துவது அப்பட்டமாக வெளிப்படுகிறது. இது வெட்கக்கேடானது!

அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைத் திட்டங்களை சிதைத்தவர்கள், இப்போது கலைஞர் நூலகம் அமைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் - வயிற்றெரிச்சலுடன் கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்து, அ.தி.மு.க. எப்போதுமே தமிழ்நாட்டின் அழிவு சக்திதான்' என்பதை நாட்டு மக்களுக்கு மீண்டும் உணர்த்தியுள்ளார்கள்” என்று கூறியுள்ள எ.வ. வேலு மேலும்,

“கலைஞர் நூலகத்திற்கு' தேர்வு செய்யப்பட்ட இடம் குறித்து வதந்தி கிளம்பிய போதே... 15.01.1841- இல் பிறந்த கர்னல் பென்னிகுயிக் 09.03.1911- இல் இயற்கை எய்தியுள்ளார். பொதுப்பணித்துறை ஆவணங்களைப் பரிசீலனை செய்ததில் இந்தக் கட்டடமானது 1912- இல் பூமி பூஜை செய்யப்பட்டு 1913- இல் கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டிட பதிவேடு எண். 159/1- ல் பதிவு செய்யப்பட்டுள்ளது . அதனால், கர்னல் ஜான் பென்னிகுயிக் மறைந்த காலத்திற்குப் பின் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இக்கட்டடத்தில் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெளிவாகத் தெரிவித்து - அது பத்திரிகைக் குறிப்பாகவும் வெளியிடப்பட்டது.

சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் படிக்க முடிந்த அறிவாளிகளால், நாள்தோறும் வெளியாகும் செய்தித்தாள்களைக் கூட படிக்க முடியவில்லை என்பது வேதனையை தருகிறது! மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் என்ற பீதியில் உலவிக் கொண்டிருக்கும் இருவரும் ஏதாவது ஒன்றை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள முனைகிறார்கள்.

இருவரும் மாறி மாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள். அப்படியிருந்தும் பென்னிக்குயிக் அவர்களின் வரலாறும் தெரியவில்லை; அவரது நினைவிடமும் தெரியவில்லை. கர்னல் பென்னிகுயிக்கிற்கு சிலை வைத்து அழகு பார்த்தவர் கலைஞர். அதை புதுபொலிவுடன் மாற்றியது திமுக ஆட்சி. முல்லைப் பெரியாறு விவகாரத்தில் உழவர்களின் உரிமைகளை நிலைநாட்டி - இன்றைக்கு தென் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்கள் பயனுறும் நிலையை உருவாக்கியதும் திமுக ஆட்சிதான் என்பதை ஓ. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் உணர வேண்டும்.

ஆகவே கதை அளந்து கலைஞர் நூலகத்தை தடுத்து விடலாம் என்று அவர்கள் கனவிலும் நினைக்க வேண்டாம். மதுரை மாநகரில் கலைஞர் பெயரிலான நூலகம் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் கம்பீரமாக எழும்”என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

-வேந்தன்

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 2 ஆக 2021