மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த நிர்பந்தித்து விடாதீர்கள்: முதல்வர்!

politics

தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு மக்கள் முறையாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மீண்டும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க அரசை நிர்பந்தித்து விடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று (ஆகஸ்ட் 1) அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா என்ற பெருந்தொற்று 18 மாதங்களாக நாட்டையும், நாட்டு மக்களையும் வாட்டி வதைத்துக் கொண்டியிருக்கிறது. மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, மருத்துவக் கட்டமைப்பு, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தி உள்ளோம்.

ஆனால், அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவில்லை. கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நாடுகளில்கூட மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிரமம் இருந்தாலும், மக்களைப் பாதுகாப்பது அரசின் கையில் உள்ளது. அதற்கேற்ப பல நடவடிக்கைகளை எடுத்தும் வருகிறோம்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது கொரோனா பரவல் குறைந்து வந்தது. தளர்வுகள் அறிவிக்கப்படும்போது லேசாக பரவத் தொடங்குகிறது. இதை கவனத்தில் வைத்து மக்கள் செயல்பட வேண்டும். கடைகளைத் திறக்க அனுமதித்தால் அங்கு வரும் மக்கள்,கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற தவறுகின்றனர். மக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக கடைகளில் நிற்பதைப் பார்க்கும்போது வேதனையளிக்கிறது. அதனால்தான் மக்கள் அதிக அளவில் கூட்டம் சேரும் இடங்களை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் சில பகுதிகள் அப்படி மூடப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதற்காக மட்டுமே கடைகள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. அதை உணராமல், விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் நடந்து கொள்ளக் கூடாது. மீண்டும் முழு ஊரங்கை பிறப்பிக்கும் சூழலுக்கு அரசை நிர்பந்திக்க வேண்டாம் என்பதை கொஞ்சம் கடுமையாக சொல்லிக் கொள்கிறேன்.

மூன்றாவது அலை மட்டும் அல்ல, எந்த அலை வந்தாலும் அதை வெல்லும் ஆளுமை தமிழ்நாடு அரசுக்கு உள்ளது. அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் தயார் நிலையில் இருக்கிறது. அதற்காக கொரோனாவை விலை கொடுத்து வாங்கி விட கூடாது என பொதுமக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முதல் மற்றும் இரண்டாவது அலையை விட மூன்றாவது அலை மோசமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, கொரோனா பரவலில் அலட்சியம் வேண்டாம், எச்சரிக்கையாக இருப்போம், கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்போம். கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசியே சிறந்த ஆயுதம். அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். அவரச தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வாருங்கள். வெளியில் வரும்போது இரண்டு முகக்கவசங்களை அணிந்துகொள்ளுங்கள். வெளியில் இருக்கும்போது முகக்கவசங்களை கழற்ற வேண்டாம். கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினியை பயன்படுத்தி கொரோனாவிலிருந்து நம்மையும், நாட்டையும் காப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *