மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

பன்னீர், எடப்பாடிக்கு அமித் ஷா கொடுத்த உறுதி! டெல்லி தரும் புதுத் தகவல்!

பன்னீர், எடப்பாடிக்கு அமித் ஷா  கொடுத்த உறுதி!  டெல்லி தரும் புதுத் தகவல்!

ஜூலை 26 ஆம் தேதி பிரதமர் மோடியையும், ஜூலை 27 ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்தனர்.

இந்த சந்திப்புகள் முடிந்து அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “தமிழகத்தின் பிரச்சினைகள் பற்றிய கோரிக்கைகளை முன் வைத்தோம்” என்றே சொன்னார். எனினும் இதுகுறித்து பாஜக தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் தீவிர முயற்சிக்குப் பின் பிரதமர் அலுவலக சோர்ஸுகள், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலக சோர்ஸுகளிடம் இந்த சந்திப்பு குறித்து விசாரித்தபோது பல முக்கியமான தகவல்கள் கிடைத்தன.

அதிமுக பிரமுகர்களுடனான சந்திப்புகள் குறித்து டெல்லி பாஜகவின் நம்பகமான புள்ளிகளிடம் பேசியபோது,

“ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடியும் சென்றபோது பிரதமர் மோடி நல்ல மரியாதை கொடுத்து அன்போடு வரவேற்றிருக்கிறார். தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல் முறையாக சந்திக்கும் நிலையில், ‘நீங்க எலக்‌ஷன்ல நல்ல ஸ்கோர் பண்ணியிருக்கீங்க. நல்லா உழைச்சிருக்கீங்க. நாங்கதான் உங்களுக்கு கொஞ்சம் டிஸ்டர்பன்ஸ் கொடுத்துட்டோம். அது இல்லைன்னா இன்னும் நல்லா வந்திருப்போம்னு நினைக்கிறேன்’ என்று மோடி சொன்னவுடன், ‘அப்படியெல்லாம் இல்லைங்க. உங்க இமேஜ் தமிழ்நாட்ல எங்களுக்கு கூடுதல் பலமாதான் இருக்கு’ என்றிருக்கிறார்கள் இருவரும்.

அப்போது மோடி, ‘வரும் பார்லிமென்ட் எலக்‌ஷன்ல நாமதான் வெற்றிபெறுவோம். நாமதான் மறுபடியும் ஆட்சிக்கு வருவோம். எந்த கவலையும் படாதீங்க. நம்ம கூட்டணியும் தொடரும். நீங்க உள்துறை அமைச்சரையும் பாத்துடுங்க. நானும் அவர்கிட்ட பேசுறேன்’ என்று சொல்லி இருவரையும் அனுப்பி வைத்திருக்கிறார் , இருவரிடமும் மொத்தம் 13 நிமிடங்கள் பேசியிருக்கிறார் மோடி. தங்கள் மீது மோடி இவ்வளவு மரியாதை வைத்திருப்பதை அறிந்து பன்னீரும், எடப்பாடியும் இன்ப அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அதோடு அடுத்த நாள் அமித் ஷாவை சந்தித்தார்கள்.

அமித் ஷாவும் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளில் இருந்துதான் பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.

‘இப்ப நாம வந்திருக்கிறதே நல்ல ரிசல்ட்டுதான். இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணியிருந்தா இன்னும் பெட்டரான ரிசல்ட் வந்திருக்கும்னு நினைக்கிறேன்’என்று சொன்ன அமித் ஷாவிடம், ‘தமிழகத்தில் திமுக அரசு முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது ரெய்டுகள் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியிருக்கிறது. விஜிலென்ஸுக்கு இப்போது கந்தசாமி ஐபிஎஸ் சைதான் தலைவராக நியமித்திருக்கிறார்கள்’ என்று அமித் ஷாவுக்கு கந்தசாமியை நினைவுபடுத்தியிருக்கிறார்கள்.

அதற்கு அமித் ஷா, ‘ஓ...கந்தசாமியா... என் மேல பொய் கேஸ் போட்டு அரெஸ்ட் பண்ணாரு. நான் அதை ஜெயிச்சுட்டு வந்தேன். ஜெயிச்சு வந்தபிறகு என்னை வந்து பார்த்தாரு. அப்ப நான் அவர்கிட்ட சொன்னேன், ‘நான் ஜெயிச்சுட்டேன். நீங்க தோத்துட்டீங்க..நான் தோத்தவன்கிட்ட எந்த பகையும் வச்சிக்க மாட்டேன். நீங்க அதனால தைரியமா போங்க’னு சொல்லி அனுப்பிட்டேன்.

விஜிலென்ஸுங்குறது ஸ்டேட் சப்ஜெக்ட். ஆட்சிக்கு வந்தவங்க அப்படிதான் பண்ணுவாங்க. அதுல நாம தலையிட முடியாது. இதெல்லாம் அரசியல்ல ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். அவங்க என்ன பண்றாங்களோ அதெல்லாம் பண்ணட்டும். ஜெயலலிதாவும் அன்னிக்கு கலைஞரை மிட்நைட்ல அரெஸ்ட் பண்ணது தப்புதானே...

ஆனா ஒரு விஷயத்தை ஞாபகம் வச்சிக்கங்க. நம்மகிட்ட இன்கம் டாக்ஸ் இருக்கு, அமலாக்கத்துறை இருக்கு, சிபிஐ இருக்கு, நான் டிஎம்கேவுல 5 பேரை வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ராஜா மேல இருக்குற 2ஜி கேஸ் கூட இன்னும் முழுசாமுடிஞ்சிடலை. அதையெல்லாம் ஞாபகம் வச்சிக்கங்க. தைரியமா இருங்க. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்றோம்’ என்று பன்னீர், பழனிசாமி இருவரது கைகளையும் பிடித்துக் கொண்டு உறுதிகொடுத்திருக்கிறார் அமித் ஷா.

அப்போது, தினகரன் பற்றி இருவரும் ஏதோ சொல்ல வர, ’தினகரனை பத்தியெல்லாம் யோசிக்காதீங்க. அவர் மேலயே கேஸ் எல்லாம் நம்மகிட்டதான இருக்கு’ என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார் அமித் ஷா.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் டெல்லி விசிட்டில் அவர்களே எதிர்பாராத அளவுக்கு ஆச்சரியங்கள் நடந்திருக்கின்றன” என்று விரிவாக விளக்கி முடித்தார்கள்.

-வணங்காமுடி

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

ஞாயிறு 1 ஆக 2021