மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

காதல் எழுதினால் அரசியலாகிறது... அரசியல் எழுதினால் காதலாகிறது! -மனுஷ்யபுத்திரன்

காதல் எழுதினால் அரசியலாகிறது... அரசியல் எழுதினால் காதலாகிறது! -மனுஷ்யபுத்திரன்

உயிர்மை இலக்கிய இதழின் ஆசிரியரும் சிறந்த நவீன கவிஞரும் சமகாலத்தின் வாழ்வியல், அரசியல் கூறுகளை நுட்பமான பார்வையோடு அணுகக் கூடிய தர்க்கவியலாளருமான கவிஞர் மனுஷ்ய புத்திரன், சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவின் செய்தித் தொடர்பாளராகவும், அக்கட்சியின் ஐடி விங் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

இலக்கிய உலகில் மட்டுமல்லாமல் அரசியல், சமூக வட்டாரத்திலும் தொலைக்காட்சி விவாதங்கள் மூலம் முக்கியமான பங்கு வகிக்கும் மனுஷ்ய புத்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதைகளை எழுதி வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்.

அந்த வகையில் நேற்று (ஜூலை 31) பிற்பகல் அவர் எழுதி வெளியிட்ட ஒரு கவிதை அரசியல் உலகிலும் உற்று கவனிக்கப்பட்டது.

இதோ அந்த கவிதை...

உங்கள் நிமித்தமாக

யாருடன் சண்டையிட்டேனோ

அவருடன் நீங்கள் சமாதானமாகப் போகும் முன்

ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்

உங்கள் பொருட்டு

யார் கையால் காயப்பட்டேனோ

அவர்கள் கையை நீங்கள்

இறுகப் பற்றிக் கொள்ளும் முன்

ஒரு வார்த்தை என்னிடம்

சொல்லியிருக்க வேண்டும்

யாரோ உங்களுக்கு இழைத்த துரோகத்திற்காக

நான் தூக்கமின்றி தவித்தேனோ

அவர்கள் தோளோடு தோளாக

மறுபடி நீங்கள் சாய்ந்து கொள்ளும் முன்

ஒரு வார்த்தை என்னிடம்

சொல்லியிருக்க வேண்டும்

உங்களை முகம் வாடச் செய்தார்கள் என்பதற்காக

எவர் முகத்தில் விழிக்காமல் இருந்தேனோ

அவர்களை நீங்கள் முத்தமிடும் முன்

ஒரு வார்த்தை

சொல்லியிருக்கவேண்டும்

நீங்கள் எடுத்துக் கொடுத்த கத்தியால்

யாரை நான் தயக்கமின்றி கீறினேனோ

அவர்களுக்கு நீங்கள்

ஒரு பூங்கொத்து தரும் போது

ஒரு வார்த்தை என்னிடம்

சொல்லியிருக்க வேண்டும்

உங்கள் சதுரங்கக் கட்டத்தில்

காய்கள் எப்படியும் நகரட்டும்

என்னை ஏன்

எனக்குத் தெரியாமல்

அதில் ஒரு காயாக மாற்றினீர்கள்?

என்னிடம் நீங்கள்

எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என

ஒரு கட்டாயமும் இல்லை

ஒரு நாடகத்தில்

எனது கதாபாத்திரத்தை

திடீரென மாற்றும் போது

நான் சொல்லொணா தனிமையடைகிறேன்

இந்தக் கவிதைதான் அரசியல் உலகிலும் விவாதிக்கப்பட்டது.

எடப்பாடிக்காக சசிகலாவை எதிர்த்தவர்கள் இன்று எடப்பாடியும் சசிகலாவும் இணையும் சூழல் ஏற்படுகிறது என்பதால் இப்படி சொல்கிறார்களா? அதிமுகவில் இருந்து திமுகவுக்கு பல்வேறு மாவட்டங்களிலும் வந்து இணைகிறார்களே... அவர்களை வைத்து ஏற்கனவே திமுகவில் இருக்கும் நிர்வாகிகளின் கூற்றா? இப்படி பல யூகங்களை இந்த கவிதை தட்டியெழுப்பியது.

நம்மிடமும் சில அரசியல்வாதிகள், 'மனுஷ் கவிதையைப் படித்தீர்களா? அரசியலின் அரிச்சுவடியை அழகாக சொல்லிவிட்டார்" என்றார்கள்.

நாம் இதுபற்றி கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் நேற்று (ஜூலை 31) இரவு கேட்டோம்.

"அது எந்த அரசியல் நோக்கத்திலும் எழுதப்பட்ட கவிதை அல்ல. அதை அவரவர் தங்கள் பார்வையில் பார்த்திருக்கிறார்கள். அது தனிமனித உணர்வின் வெளிப்பாடுதான்" என்று விளக்கம் அளித்தார்.

நாம் உரையாடிய சிறிது நேரத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதுதொடர்பாக ஒரு பதிவையும் வெளியிட்டிருக்கிறார்.

"நான் மதியம் எழுதிய ஒரு கவிதையை ( நான் உங்களுக்காக யாருடன் சண்டையிட்டேனோ) சிலர் ஏதோ அரசியல் பதிவாக எடுத்துக்கொண்டு அவஸ்தை படுவதாக அறிந்தேன். இலக்கிய தற்குறிகள் மலிந்த சமூக வலைதள உலகில் இத்தகைய வாசிப்புகள் இயற்கையானதுதான். தனிமனித உறவுகளின் அபத்தங்கள் குறித்து நான் தொடர்ந்து எழுதிவரும் கவிதைககளில் அதுவும் ஒன்று என்பதற்குமேல் அதில் எனக்கு நோக்கங்கள் இல்லை.

நான் காதல் கவிதை எழுதினால் அது அரசியலாகிவிடுகிறது. நான் அரசியல் கவிதை எழுதினால் அது காதல் கவிதையாகிவிடுகிறது" என்று பதிவிட்டிருக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 1 ஆக 2021