மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

தமிழக கோயில்களில் பக்தர்களுக்குத் தடை!

தமிழக கோயில்களில் பக்தர்களுக்குத் தடை!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடி பெருவிழாவை முன்னிட்டு கோயில்களுக்குப் பக்தர்கள் அதிகளவு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன், அம்மன் கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், படைவீடு ரேணுகாம்பாள் கோயில் மற்றும் முருகன் கோயில்கள் உட்பட அனைத்து கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குச் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆகம விதிப்படி அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மூலமாக அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அழகர் கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆடிக் கிருத்திகை நிகழ்வுகள் அனைத்திற்கும் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர் என்று மதுரை ஆட்சியர் எஸ்.அனீஸ் சேகர் கூறியுள்ளார்.

திருத்தணி

திருத்தணி முருகன் கோயிலில் ஜூலை 31 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கோயில் குளத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தெப்ப உற்சவ விழா நடப்பாண்டு நடைபெறாது என்றும் கோயில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். விழா நிகழ்ச்சிகள் திருக்கோயில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்குக் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

விராலிமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில், புதுக்கோட்டை டவுன் சாந்தநாத சுவாமி கோயில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத விழாக்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தற்போது, கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில், மதனகோபால சுவாமி கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், பாலமுருகன் கோயில், சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயில், எசனை வேணுகோபால சுவாமி கோயில் என இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 35 கோயில்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடக்கும் சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் இணையதளம் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று சேலம் மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி தெரிவித்துள்ளார்.

ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, மாதாந்திர பிரதோஷம், பவுர்ணமி வழிபாடுகள், தேய்பிறை, அஷ்டமி உள்ளிட்ட நாட்களில் எந்த சிறப்புப் பூஜை வழிபாடுகளுக்கும் கோயில்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்கு வருவதற்கும் அங்குக் கூடுவதற்கும் பக்தர்களுக்கு தற்போதைய நிலையில் அனுமதி இல்லை என்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று,கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து கோயில்கள் உட்படத் தமிழகம் முழுவதும் முக்கிய மற்றும் பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது,

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 1 ஆக 2021