மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 1 ஆக 2021

குடியரசுத் தலைவர் வருகை: மோடி - ஸ்டாலின் இணக்கத்துக்காகவா?

குடியரசுத் தலைவர் வருகை: மோடி - ஸ்டாலின் இணக்கத்துக்காகவா?

வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நம் நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவப்படத்தைத் திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களுக்கு நேரில் அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று (ஜூலை 31) புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்த விழாவை அரசியலோடு முடிச்சு போட்டுப் பார்த்து ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். சமீப நாட்களாகவே புதிய தமிழகம் நிறுவனர் மிக நீண்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவற்றில் பல ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்த சாயலை ஒத்திருப்பதாக அவரை அறிந்தவர்களும் அரசியல் வட்டாரத்தினரும் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தமிழகம் வந்து கலைஞர் படத்தைத் திறந்து வைப்பதன் மூலம், பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குமான பிணக்கு, இணக்கமாகுமா என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார் கிருஷ்ணசாமி.

அவரது அறிக்கையில், “1947 சுதந்திரத்திற்குப் பிறகு, 1952-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலிருந்தே தமிழகச் சட்டமன்றத்தின் உண்மை வரலாறு துவங்குகிறது. எனவே சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழகச் சட்டமன்றத்திற்கான வயது 69 மட்டுமே. ஆனால் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் சட்டமன்றப் பேரவை போன்ற அமைப்பு - கீழவை (Assembly) 1936-லிருந்து செயல்பட்டு வந்துள்ளது. அந்த 16 வருடத்தையும் கணக்கிலே சேர்த்துக் கொண்டால்கூட தமிழகச் சட்டமன்றத்திற்கு வயது 85 மட்டுமே. மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்று மட்டுமே தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஆண்டு விழாவிற்கான சரியான அளவுகோளாக எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால், 2021 ஆகஸ்ட் 2-ம் தேதியை தமிழகச் சட்டமன்றத்திற்கான நூற்றாண்டு விழாவாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அது என்ன கணக்கு என்றும் தெரியவில்லை. வேறு எங்கிருந்து தொடங்கினாலும் இவர்களின் நூற்றாண்டு கணக்கு தப்புக் கணக்காகவே இருக்கிறது” என்று நூற்றாண்டுக் கணக்கை குறை கூறியிருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து,

“வரும் ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவிற்கும், அவ்விழாவின் பொழுது சட்டமன்ற வளாகத்திற்குள் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களுடைய உருவப்படத்தைத் திறந்து வைப்பதற்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஐஐடி அரசு விழாவில் கலந்துகொள்ள வந்த பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு எதிராக விமான நிலையத்திலிருந்து ஐஐடி வரை கறுப்புக் கொடிகளையும், விண்ணிலே கறுப்பு பலூன்களையையும் பறக்கவிட்டு மோடி அவர்களை மனமுடையச் செய்த செயல்கள் தமிழக அரசியல் களத்தின் நீங்கா வடுவாகவே உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த கடந்த மூன்று மாதத்தில் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்திற்கு விஜயம் ஏதும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் 2017ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டம் தோறும் மக்களின் வாழ்க்கை முறை, அரசு செயல்பாடுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளச் சுற்றுப்பயணம் சென்றபோது, அன்றைய ஆளும் கட்சியான அதிமுக கூட எவ்வித எதிர்ப்பும் தெரிக்கவில்லை; திமுக, ஆளுநர் சென்ற இடமெல்லாம் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக ஆட்சியில் எல்லா மாவட்டங்களுக்கும் சென்ற ஆளுநர் இப்போது எங்கும் பயணிப்பதில்லை.

தமிழகச் சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், கருணாநிதி படத் திறப்பு விழாவும் ஒன்றல்ல; இரண்டும் வேறு வேறு நிகழ்வுகள். ஆனால் இரண்டையும் ஒன்றாகப் பொருத்த நினைக்கிறார்கள். இதில் பல விஷயங்களில் மர்மம் இருப்பதாகவே தெரிகிறது.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது 1921ஆம் ஆண்டு. தமிழக அரசியல் வரலாற்றில் அதைக் கணக்கிட்டால் மட்டுமே 2021ஆம் ஆண்டு 100ஆவது ஆண்டாகும். நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த நூற்றாண்டு விழாவை கொண்டாட தான் ஜனாதிபதி தமிழகம் வருகிறாரா? அல்லது முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழாவிற்கா? அல்லது மத்திய அரசோடு ஏற்பட்ட பிணக்கைச் சரிசெய்து இணக்கத்தை உண்டாக்குவதற்கான புதிய முயற்சியா? அல்லது புதிய கூட்டணிக்கான அச்சாரமா? என்பதை போன்ற பல கேள்விகள் எழுகின்றன” என்று சந்தேகம் எழுப்பியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

கலைஞரின் படத்தை ஆர்எஸ்எஸ். ஸ்வயம் சேவக்தான் திறந்து வைக்கிறார் என்று தமிழக பாஜகவினர் சமூக தளங்களில் குறிப்பிட்டுக் கொண்டிருக்க... குடியரசுத் தலைரின் வருகைக்கே அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்ற அளவுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி.

-வேந்தன்

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

13 நிமிட வாசிப்பு

வெங்கடாசலம் தற்கொலைப் பின்னணி: அச்சத்தில் மாஜி விஐபிக்கள்!

ஜெ. நினைவு தினம்: எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

5 நிமிட வாசிப்பு

ஜெ. நினைவு தினம்:  எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு!

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு ...

3 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி ஆபத்தானது: மம்தாவுக்கு சிவசேனா

ஞாயிறு 1 ஆக 2021