மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

டேக் செய்தால் போதும்- தமிழக அரசின் ‘தகைசால்’ பணி!

டேக் செய்தால் போதும்- தமிழக அரசின்  ‘தகைசால்’ பணி!

தமிழக அரசின் சார்பில் தமிழகத்தின் ஆளுமைகளை பெருமைப்படுத்தும் வகையில் தகை சால் தமிழர் என்ற பெயரில் விருது ஏற்படுத்தப்பட்டு, அதன் முதல் விருதாளராக விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியுமான நூற்றாண்டு கண்ட சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக அறிவிக்கப்பட்ட பத்து லட்சம் ரூபாய் தொகையை அரசுக்கே அளித்துவிட்ட சங்கரய்யா, தான் தகை தால் தமிழர்தான், தொகை சால் தமிழர் அல்ல என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

இந்நிலையில் சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று (ஜூலை 30) தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இந்த நிலையில் இந்த தகைசால் தமிழர் விருது ஏற்படுத்தப்பட்டமைக்கும்,அது சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டமைக்கும் ஒரு கருவியாக இருந்தமைக்காக பெருமைப்படுகிறோம் என்று நெகிழ்கிறார் வடசென்னை தமிழ் சங்க தலைவரான இளங்கோ.

இந்த விருதுக்கும் இளங்கோவுக்கும் என்ன தொடர்பு? அவரிடமே பேசினோம்.

“கோரிக்கைகள் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்க்காமல் அந்த கோரிக்கையில் அர்த்தமும், நியாயமும் இருந்தால் அதை செயல்படுத்திக் காட்டுவது என்ற உயர்ந்த எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஜூலை 15 சங்கரய்யாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது இல்லம் தேடிச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். அந்தப் புகைப்படத்தை எடுத்து எங்களது வட சென்னை தமிழ் சங்க ஃபேஸ்புக் பக்கத்தில் இட்டு, அதனுடன் ஒரு கோரிக்கையையும் வைத்தேன்.

தமிழ்நாட்டின் உயரிய விருது என்று தலைப்பிட்டு வைக்கப்பட்ட அந்த கோரிக்கையில், ‘இந்திய ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான 'பாரதரத்னா' போன்று, தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய விருதொன்றை உருவாக்கி முதல் விருதை அரசு சார்பில் விழா நடத்தி விடுதலைப் போராட்ட வீரர், நூறாண்டு கண்ட தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு வழங்க வேண்டும்!!மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அய்யா மு.க.ஸ்டாலின் இதைச் செய்ய வேண்டும்.- எ.த.இளங்கோ தலைவர் வடசென்னை தமிழ்ச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் தலைநகர் சென்னை மக்கள் இயக்கம்”என்று குறிப்பிட்டு #TNGovt #MKStalin என முதல்வர் ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கத்தை அதில் டேக் செய்திருந்தேன்.

இந்த எளியவனின் கோரிக்கையை பரிசீலித்து அதன்படியே குறுகிய கால ஆலோசனையில் தகைசால் தமிழர் என்ற விருதை நிறுவி, அதை எங்களது கோரிக்கையின்படியே முதலில் சங்கரய்யாவுக்கு அளித்து 27 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தின் நற்பெயருக்காகவும், வளர்ச்சிக்காகவும் எந்த ஆலோசனை வந்தாலும் அதை ஆராய்ந்து வாய்ப்பிருந்தால் அதை நிறைவேற்ற சற்றும் தயங்காதவராக இருக்கிறார் முதல்வர். ஒரு டேக் செய்ததற்கே இத்தனை பொறுப்புணர்வோடு அணுகுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியது” என்று நெகிழ்கிறார் த. இளங்கோ.

முதல்வரின் சமூக தள பக்கத்தை நிர்வகிக்கும் வட்டாரத்தில் பேசினோம்.

“திமுக ஆட்சியில் இல்லாதபோதே மக்களிடம் நேரடியாக சென்று மனுக்கள் வாங்கி ஆட்சி அமைந்த பின், அதை நூறு நாட்களுக்குள் மிகத் தீவிரமாக நிறைவேற்றி வருகிறோம். ஆட்சி அமைந்த பிறகு பலரும் முதல்வரின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் டேக் செய்து பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.

முதல்வரின் பக்கத்தில் டேக் செய்யப்படும் கோரிக்கைகளானாலும் சரி, விமர்சனங்களானாலும் சரி ஒவ்வொரு நாளும் தொகுக்கப்பட்டு முதல்வர் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதற்கென்றே ஒரு குழு இயங்குகிறது. இன்றைக்கு ஃபேஸ்புக் என்பது பரவலாக எல்லாராலும் கையாளப்படுகிற மக்கள் ஊடகமாக இருக்கிறது. தந்தையிடம் ஃபேஸ்புக் இல்லையென்றால் கூட மகன் அல்லது மகளிடம் இருக்கிறது. அவர்கள் தன் தந்தையின் கோரிக்கையை தங்கள் மூலமாக முதல்வருக்கு அனுப்புகிறார்கள். இப்படி தமிழகத்தின் பற்பல பகுதிகளில் இருந்தும் தொழில் நுட்பம் மூலமாக முதல்வரின் கதவை பலர் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு கோரிக்கையும் ஆய்வு செய்யப்பட்டு முதல்வரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் இந்த பொறிமுறை இருந்தது. இப்போது முதல்வராக இருப்பதால் மக்களின் சமூக தள கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அணுகுகிறார் முதல்வர்”என்கிறார்கள்.

tag செய்தால் போதும்... take action என்பது நல்ல விஷயம். இது தொடர்ந்திட வேண்டும்!

-ஆரா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 31 ஜூலை 2021