இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி: ராமதாஸ்

politics

இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவதே நீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் ஜெகதீஸ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட 65 பேர், தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2009ல் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர்கள் இந்தியக் குடியுரிமை கேட்டு புதிதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சியர்கள் தாமதப்படுத்தாமல் விண்ணப்பங்களை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒன்றிய அரசு 16 வாரங்களுக்குள் மனுக்கள் மீது உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று 2019ல் உத்தரவிட்டது.

தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமா்வுமுன் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ”இலங்கையிலிருந்து தமிழகம் வந்தவர்களைச் சட்ட விரோதமாக குடியேறியவர்களாகவே கருத முடியும். அவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது” என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாடு மனிதநேயமற்றது, ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “ இந்தியாவுக்குள் கடவுச்சீட்டு, தங்கும் அனுமதி (விசா) போன்ற ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்கு வந்து தங்கும் அனுமதி காலம் முடிந்த பிறகும் இந்தியாவுக்குள் தங்கி இருப்பவர்கள் ஆகியோர் தான் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று இந்தியச் சட்டம் கூறுகிறது. இந்த வரையறை இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பொருந்தாது. இலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் தங்களின் சொந்த நாட்டை விட்டு விட்டு சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக இந்தியாவில் குடியேறவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைகளுக்கும் கடந்த 1980-களின் தொடக்கத்திலிருந்து 2009-ஆம் ஆண்டு வரை உக்கிரமாகப் போர் நடைபெற்றது.

அந்தக் காலகட்டத்தில் சிங்களப் படையினர் நடத்திய இனப்படுகொலைகளில் உயிர் பிழைப்பதற்காகவும், சிங்களப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள், உடல் ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும் தான் அவர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை. கடல்வழியாக வந்தவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்து, ஒன்றிய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் தான் அவர்கள் காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது தவறாகும்.

சொந்த நாட்டில் போரோ, இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான கொடுமைகளோ இழைக்கப்படும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவது இயல்பு. அவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களைப் பாதுகாப்பதும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் வந்த நாட்டிலேயே குடிமகன்களாக வசிக்க விரும்பினால், சில நிபந்தனைகளுக்குட்பட்டு குடியுரிமை வழங்குவதும் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு வகை செய்வதற்காகவே 1951ஆம் ஆண்டில் ஐ.நா. அகதிகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை என்பதாலும், இந்தியாவில் அகதிகள் குறித்த தேசியக் கொள்கை இல்லாததாலும் தான் இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் உடனடியாக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அத்தகைய நாடு அகதிகளுக்கு வாழ்வளிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடாததும், அவர்களைச் சட்டவிரோத குடியேறிகள் என்று கூறுவதும் இந்தியாவின் உயரத்திற்கு ஏற்றதல்ல. அதுமட்டுமின்றி மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்டகாலமாகத் தங்கியிருப்பவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமையை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல. எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும். ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *