மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 31 ஜூலை 2021

கிராவல் மண்: திமுக பிரமுகரை மிரட்டிய திமுக பிரமுகர்!

கிராவல் மண்:  திமுக பிரமுகரை மிரட்டிய திமுக பிரமுகர்!

சென்னை மாநகராட்சியில் திமுக நிர்வாகியின் செயல்பாடுகளைத் தட்டிக் கேட்ட இன்னொரு திமுக நிர்வாகியே மிரட்டப்பட்டிருக்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 22 ஆவது வார்டு புழல் பகுதியைச் சேர்ந்தவர் திமுகவைச் சேர்ந்த நெல்சன். இவர் பகுதிப் பிரதிநிதியாகவும் இருக்கிறார். இவர் எம். 3 புழல் காவல்நிலையத்தில் நேற்று (ஜூலை 30) ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதுதான் சென்னை மாநகர திமுக வட்டாரத்தில் பரபரப்பாகியிருக்கிறது.

அந்தப் புகாரில், “கடந்த 28-07-01 அன்று மாலை 5 மணியளவில் கே.எஸ்.நகரில் கால்வாய் தோண்டப்பட்டு அதில் இருந்து எடுத்த கிராவல் மண், சக்திவேல் நகரில் திருட்டுத் தனமாக விற்கப்பட்டதை நான் புகைப்படம் எடுத்தேன்.

அன்று இரவு சுமார் 10 மணியளவில் இதே பகுதியில் வசிக்கும் மேனகா நித்யானந்தம், சரவணன், விக்கி, பி. ஆனந்தன், தாமரைச் செல்வன் மற்றும் பலர் என் வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளைப் பேசி என்னைத் தாக்க வந்தார்கள். அத்துடன் என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிச் சென்றுள்ளார்கள். இதற்கான ஆதார வீடியோ பதிவு என்னிடம் உள்ளது.

என் குடும்பத்தார் மன உளைச்சலுக்கு ஆளாகி மிகவும் பயத்துடன் இருக்கிறார்கள். ஆகவே எனக்கு ஏதாவது நேர்ந்தால் இவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்”என்று அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் சரவணன் என்பவர் திமுகவின் 22 ஆவது வட்டச் செயலாளர். அவரது தாயார் மேனகா என்பவர் திமுகவின் பொதுக்குழு உறுப்பினர்.

இந்தப் புகார் பற்றி புழல் திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“செங்குன்றம் வட்டாரத்தில் கிடைக்கும் மண் கிராவல் மண் சாதாரண மண்ணை விட விலை உயர்ந்தது. கட்டுமானத் தொழிலுக்கு மிகவும் ஏற்றது. இந்த வகை மண்ணால்தான் இந்த பகுதிக்கே செங்குன்றம் என்று பெயர் வந்தது.

மழை நீர் கால்வாய்க்காக தோண்டப்படுகிற மண்ணை அங்கேயே போட்டுவிட வேண்டும் என்பதுதான் விதி. அந்த வகையில் புழல் பகுதியின் 22 ஆவது வார்டிலும் மழை நீர் கால்வாய்கள் தோண்டப்பட்டு வருகின்றன. ஆனால் இப்பகுதியில் இருக்கும் மண் மற்ற பகுதி மண்ணைப் போல அல்லாமல் விலை மதிப்புள்ளது என்பதால், அரசியல்வாதிகளின் கண்கள் இந்த கிராவல் மண் மீது பட்டன.

22 வது வார்டு கண்ணப்பசாமிநகரில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைப்பதற்காக தோண்டியெடுக்கப்பட்ட கிராவல் மண் அதேபகுதியில் கட்டுமான வேலைமுடிந்தபின் பலநாட்களாக பள்ளத்தை நிரப்பாமல் இருக்கும் நிலையில்... வேறு இடங்களுக்கு நல்லவிலைக்கு ஆளுங்கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் துணையுடன் விற்கப்பட்டு வருகின்றன. கண்ணப்ப சாமி நகரில் தோண்டியெடுக்கப்பட்ட கிராவல் மண், எதிரே இருக்கும் சக்திவேல் நகருக்கு லாரியில் வடகரைவழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இது எல்லாமே அதிமுக ஆட்சி காலத்தில் விடப்பட்ட டெண்டர்கள். தேர்தலுக்கு முன்பே மாநகராட்சி வேலைகளில் பலவற்றை டெண்டர் விட்டு உரியதை எல்லாம் வாஙகிக் கொண்டுவிட்டார்கள் அதிமுக ஆட்சியில். இப்போது திமுகவில் வட்டச் செயலாளர் சரவணன் அதிகாரிகள் உதவியோடும், கான்ட்ராக்டர்கள் உதவியோடும் கிராவல் மண்ணை விற்பனை செய்து வருகிறார்.

இதை அப்பகுதியின் திமுக பிரதிநிதி நெல்சன் எதிர்க்கிறார். கிராவல் மண் விற்பனையை போட்டோ எடுத்து தலைமை வரைக்கும் அனுப்பியிருக்கிறார். இதையடுத்துதான் அந்த வட்டச் செயலாளரின் அம்மாவும் பொதுக்குழு உறுப்பினருமான மேனகா ஒரு படையோடு திமுகவின் பகுதிப் பிரதிநிதியான நெல்சன் வீட்டுக்கே சென்று மிரட்டியிருக்கிறார். தங்கள் பின்னால் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் இருப்பதால் அவர்கள் தைரியமாக இதுபோல செயல்படுகின்றனர்.

திமுக மீது எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பல்வேறு புகார்களை கூறி வருகின்றனர். அதனால் வழக்கத்துக்கு மாறாக முதல்வர் ஸ்டாலின் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக இருக்கிறார். அதையும் மீறி சென்னை மாநகரில் இதுபோன்ற திமுகவினரின் செயல்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். இல்லையென்றால் உள்ளாட்சித் தேர்தலில் நிலைமை மாறிவிடும்” என்கிறார்கள்.

தன் வீடு தேடி வந்து மிரட்டிய வீடியோவையும் தலைமையிடம் கொடுத்திருக்கிறார் திமுக பிரமுகர் நெல்சன்.

-வேந்தன்

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

சனி 31 ஜூலை 2021