மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்த அதிமுகவினர்!

ஆட்சியரிடம்  வாக்குவாதம் செய்த அதிமுகவினர்!

கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரனிடம் நேற்று (ஜூலை 29) முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சென்று வழங்கினார்கள்.

கோவை மாவட்டத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில் சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதை முன்கூட்டியே அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப் பணிகளை ரத்து செய்யக்கூடாது, புதிய அரசுத் திட்டப் பணிகள் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் போது பூமி பூஜை மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவல்துறை உதவியுடன் இரவோடு இரவாக அப்புறப்படுத்தப்படுகிறது. இதனைத் தடுத்து, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவினர் மீது அரசியல் காரணங்களுக்காக திமுகவினரின் தூண்டுதலால் காவல்துறையினர் மூலம் பொய் வழக்குகள் போடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்கள்.

அப்போது, ஆட்சியர் சமீரன் அமர்ந்தபடியே எம்எல்ஏக்களிடம் மனுவை வாங்கக் கையை நீட்டினார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆட்சியரிடம், இது என்ன புதுப்பழக்கம் என்று கேள்வி எழுப்பினர். எம்.எல்.ஏ.க்கள் வந்தால் எழுந்து மனு வாங்க முடியாதா என்று கேள்வி எழுப்பினர்.

குறிப்பாகப் பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏ ஜெயராமன் மற்றும் மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் ஆகியோர் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “என்ன பழக்கம் இது, 25 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியா இருக்கேன், இது எல்லாம் ரொம்ப தவறு” என்று கூறினார் ஜெயராமன்.

அதிமுகவினர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து எழுந்து நின்று ஆட்சியர் மனு வாங்கினார். ஆட்சியரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

வெள்ளி 30 ஜூலை 2021