மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

உதயநிதி அமைச்சராவது எப்போது? ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு!

உதயநிதி அமைச்சராவது எப்போது? ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு!

திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் திமுகவுக்கு உள்ளேயும் வெளியேயும் பரபரப்பாகப் பேசப்படும் புள்ளியாக இருக்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், உதயநிதி சட்டமன்றத் தேர்தலிலேயே நிற்க வேண்டாம் என்று ஐபேக் திமுக தலைமையிடம் எடுத்துக் கூறியது. ஆனால் உதயநிதியின் தனிப்பட்ட விருப்பம், குடும்பத்தின் அழுத்தம் ஆகியவற்றால் அவருக்கு தாத்தா தொகுதியான சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே உதயநிதியை முழுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். இதனால் சட்டமன்றத் தேர்தலிலும் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தார் உதயநிதி. உரைநடைத் தமிழை ஓரங்கட்டி வைத்துவிட்டு எதிர்க்கட்சியினரை கலோக்கியல் தமிழில் கலாய்க்கும் உதயநிதியின் பேச்சு பொதுமக்களிடமும் எடுபட்டது. குறிப்பாக பிரதமர் மோடி மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை இதோ என்று உதயநிதி உயர்த்திக் காட்டிய செங்கல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பங்காற்றியது. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப் போல, உதயநிதிக்குச் செங்கல்லும் தேர்தல் களத்தில் பிரச்சார ஆயுதமானது.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு இடையிலான காலகட்டத்தில் வெளியான உத்தேச திமுக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதி இடம்பிடித்தார். அவருக்கு உள்ளாட்சித்துறை வழங்கப்படுமென்றும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டபோதிலும் உதயநிதி அமைச்சரவையில் இடம்பிடிக்காதது கட்சியில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வாரிசு அரசியல் விமர்சனம் கூர்மையாக வருமென்பதால் ஸ்டாலின் தவிர்த்துவிட்டார் என்று திமுகவிலேயே சிலர் இதற்கு காரணம் சொன்னார்கள்.

அமைச்சரவையில் உதயநிதி இடம்பிடிக்காதபோதும், ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் அமைச்சர்கள் பலர் உதயநிதியைதான் முன்னிலைப்படுத்தி வருகிறார்கள். திமுகவில் வெற்றிபெற்ற ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தையும் உதயநிதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள். அதை ஏற்று உதயநிதியும் தமிழகம் முழுக்க சென்று வருகிறார். உதயநிதிக்காக அமைச்சர்கள் காத்திருக்கிறார்கள். அரசு விழாக்களில்கூட அமைச்சர்களைவிட எம்.எல்.ஏ.வான உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சட்டமன்றத்தில் திமுக சார்பில் பேசிய ஒவ்வொருவரும் ஸ்டாலினையடுத்து உதயநிதி பெயரையே உச்சரித்துப் போற்றினார்கள்.

இந்த நிலையில் ஸ்டாலினுடைய அமைச்சரவையில் உதயநிதி விரைவில் இடம்பிடிப்பார் என்றும் அமைச்சர் பதவியை நோக்கிய பயணத்தைத்தான் உதயநிதி தற்போது மேற்கொண்டிருக்கிறார் என்றும் கூறுகிறார்கள் திமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரத்தில்.

உதயநிதியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிப் பணிகள் தொடங்கி கட்சிப் பணிகள், அவரது பல மாவட்டப் பயணங்கள், அவருக்கு மக்கள் மத்தியிலான ரியாக்‌ஷன் என ஒவ்வொன்றைப் பற்றியும் முதல்வர் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் போய்க் கொண்டிருக்கிறது. அந்த ரிப்போர்ட்டில் அவருக்கு அதீத ஆடம்பர விளம்பரங்கள், சாலைகளை மறிக்கும் பேனர்கள் வைக்கப்படுகின்றன எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி உதயநிதியிடமே ஸ்டாலின் நேரடியாகக் கூறியும் பேனர்கள் வைப்பது நின்றபாடில்லை. இதையடுத்துதான், ‘கட்சியினர் பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று திமுக தலைமைக் கழகம் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் கடுமையான எச்சரிக்கை விடுத்தார் ஸ்டாலின். இது உதயநிதிக்காகவேதான் செய்யப்பட்ட எச்சரிக்கையாகும்.

உதயநிதியைக் கட்சியினர் நூறு சதவிகிதம் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதியின் மக்கள் பணியும் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக அவர் செய்யும் கல்வி உதவித் தொகை வழங்கும் பணிகள், தடுப்பூசி முகாம்கள் நடத்தி ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஊரடங்கை எதிர்கொள்ளும் வகையில் நிவாரணப் பொருட்கள் வழங்குதல்,தொகுதியின் இண்டு இடுக்குகளிலும் சென்றுவரும் தீவிரம் ஆகியவை பற்றியும் முதல்வருக்கு அளிக்கப்பட்ட ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டுமென்று ஸ்டாலினுக்குத் தனிப்பட்ட கோரிக்கைகளும் இளைஞரணி நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்டு வருகிறது. கலைஞர் 1996இல் ஆட்சி அமைத்தபோது ஸ்டாலின் அப்போது இளைஞரணியில் தீவிரமாக செயலாற்றினார். அந்த அமைச்சரவையில் ஸ்டாலினுக்கு வாய்ப்பு வழங்கப்படுமென்று எதிர்பார்க்கப்பட்டது. கட்சியில் மட்டுமல்ல ஸ்டாலின் குடும்பத்தினரும் அப்போது எதிர்பார்த்தனர். ஆனால் 96இல் ஸ்டாலினை சென்னை மேயராக்கிய கலைஞர், 2006இல்தான் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்.

அதுபோல உதயநிதிக்கு தாமதம் செய்ய வேண்டாம் என்று குடும்பத்தினர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கட்சியினரிடம் நல்ல பெயர் எடுத்து, பொதுமக்களிடமும் நல்ல பெயர் எடுக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் தாமதிக்காமல் உதயநிதியை அமைச்சராக்கி விடலாமென்பது அவர்களின் அழுத்தமான அபிப்ராயம்.

இந்த நிலையில்தான் உதயநிதியிடம், பேனர்களைக் குறைக்கச் சொன்ன ஸ்டாலின் சினிமா பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்று விசாரித்துள்ளார். ஏனென்றால் அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு சினிமாவில் நடித்தால் அது விமர்சனத்துக்குள்ளாகும். சினிமா ஷூட்டிங்குக்கு பல நாட்கள் செல்ல வேண்டியிருக்கும். அதனால் அமைச்சகப் பணிகள் பாதிக்கும், இதனால் சட்ட சிக்கல்களும் ஏற்படும் என்பதையெல்லாம் கணக்கு போட்டு உதயநிதியின் இப்போதைய சினிமா புராஜக்ட்டுகள் குறித்து அவரிடமே விசாரித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இயக்குநர் மாரி செல்வராஜுடன் ஒரு படத்தில் இணைந்திருக்கும் உதயநிதி அதை விரைவில் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அப்போதுதான், சுற்றுப் பயணத்தில் ஆடம்பரங்கள், பேனர்களைக் குறைத்துக் கொள்ளுமாறு உதயநிதிக்கு ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.

இந்தப் பின்னணியில் உதயநிதி தனது சினிமா பணிகளை முடித்துவிட்டு தன்னளவில் சில மாற்றங்களையும் செய்துகொண்டு வந்தபிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்கிறார்கள். அந்த அமைச்சரவை மாற்றத்தில் உதயநிதி அமைச்சராவது மட்டுமல்ல... தற்போது துறை ரீதியான அதிருப்தியில் இருந்துவரும் ஐ.பெரியசாமி உள்ளிட்ட சீனியர்களுக்கும் உரிய முக்கியத்துவமான துறைகள் வழங்கப்படும் என்கின்றன சித்தரஞ்சன் சாலைக்கும் கோட்டைக்கும் இடையே அடிக்கடி பயணிக்கும் இளைஞரணி சிட்டுக் குருவிகள்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 30 ஜூலை 2021