மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

பெகாசஸ்: என்.ராம் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பெகாசஸ்: என்.ராம் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்!

பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், அமைச்சர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேலின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் அரசு கண்காணித்ததாக சர்ச்சை வெடித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், மற்றும் பல பத்திரிகையாளர்கள் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டதாகவும் இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றம் ஒரு வாரமாக அமளியை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் பெகாசஸ் மூலம் இந்திய முக்கியப் புள்ளிகளை உளவு பார்த்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி மூலமாக விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மற்றும் பத்திரிகையாளர் சசி குமார் ஆகியோர் ஜூலை 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று ( ஜுலை 30) மென்ஷன் செய்தார். இதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்தார்.

அந்த மனுவில், “பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக்கேட்பு என்பது அடிப்படை உரிமைகள், குடிமக்களின் சிவில் உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பை கூட பாதிக்கும் முக்கியமான பிரச்சினையாகும். இது குறித்து அவசரமாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த பிரச்சினை இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் அலைகளை உண்டாக்குகிறது.

இராணுவங்கள் பயன்படுத்தும் ஸ்பைவேரைப் பயன்படுத்தி இத்தகைய கண்காணிப்பு பல அடிப்படை உரிமைகளை சுருக்கி, நமது ஜனநாயக அமைப்பின் முக்கியமான தூண்களாக செயல்படும் பத்திரிகைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் ஊடுருவி, தாக்கி, ஸ்திரமின்மைக்கு வித்திடுவதாக இருக்கிறது.

அரசின் அங்கீகாரத்தோடுதான் இந்த பெகாசஸ் ஒட்டுக் கேட்பு நடந்ததா என்பது குறித்து அரசின் தரப்பில் இதுவரை எந்த நேரடியான பதிலும் அளிக்கப்படவில்லை. உள்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகங்களின் பதிலில் கண்காணிப்பு நடத்த பெகாசஸ் உரிமங்களைப் பெற்றதை திட்டவட்டமாக நிராகரிக்கவில்லை, மேலும் இந்த மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளில் நம்பகமான சுயமான விசாரணையை உறுதி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பேச்சுரிமை மற்றும் தனியுரிமைக்கான உரிமைகள் மீது உளவு பார்ப்பது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை. டெலிகிராப் சட்டத்தின் பிரிவு 5 (2) பிரிவு முற்றிலும் மீறப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் இலக்காகிவிட்டனர். அரசு பதில் அளிக்காத நிலையில் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்”என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

என்.ராம், சசி குமார் மட்டுமல்லாமல் இதேபோன்ற மனுக்களை ராஜ்யசபா உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா ஆகியோரும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

என். ராம், சசி குமார் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து அடுத்த வாரம் விசாரிப்பதாக கூறியுள்ளது. நாடாளுமன்றம் இன்றுவரை பெகாசஸ் பிரச்சினையில் அமளியை சந்தித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த பதில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

வெள்ளி 30 ஜூலை 2021