மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

மாஜி அமைச்சர் மீதான வழக்கு: தடை விதிக்க மறுப்பு!

மாஜி அமைச்சர் மீதான வழக்கு: தடை விதிக்க மறுப்பு!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், மூன்று முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனால் தலைமறைவான மணிகண்டனைப் பெங்களூருவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். மணிகண்டனை சைதாப்பேட்டை நீதிமன்றம் சிறையிலடைக்க உத்தரவிட்டது.

தற்போது ஜாமீனில் உள்ள மணிகண்டன் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை தெளிவாக இல்லை. எனக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளன என்பதைத் தெரிந்தே சம்மதத்துடன் உறவு கொண்டதால் இது பாலியல் வன்புணர்வு ஆகாது. கட்டாயப்படுத்திக் கருக்கலைப்பு செய்யவில்லை. நடிகையின் எந்த புகைப்படமும் வெளியிடப்படவில்லை . தனக்கு எதிரான புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுவதும் பொய் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தது. அப்போது, தன்னிடம் பணம் பறிக்க முயன்ற போது அதற்கு இணங்காததால் நடிகை தனக்கு எதிராகப் புகார் அளித்ததாகவும், முன்னாள் அமைச்சரான எனது பெயருக்குக் களங்கம் கற்பிக்க அளிக்கப்பட்ட புகாரில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மணிகண்டன் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதி மணிகண்டனின் கோரிக்கையை நிராகரித்து, இம்மனுவுக்குப் பதில் அளிக்குமாறு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கும் நடிகை சாந்தினிக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் .

-பிரியா

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

10 நிமிட வாசிப்பு

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்: கடலூர் எம்.பி மீது கொலை வழக்கு?

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

4 நிமிட வாசிப்பு

மோடியை அவமதித்தாரா கமலா ஹாரிஸ்?

வெள்ளி 30 ஜூலை 2021