மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

சசிகலா பற்றி ஓபிஎஸ்-இபிஎஸ் திடீர் ஒப்பந்தம்!

சசிகலா பற்றி ஓபிஎஸ்-இபிஎஸ் திடீர் ஒப்பந்தம்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஜூலை 26ஆம் தேதி பிரதமர் மோடியையும், 27 ஆம் தேதி அமித் ஷாவையும் பார்த்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.

டெல்லியில் இருவரிடமும், “ வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்காக சசிகலாவை அதிமுகவுக்குள் கொண்டுவரவேண்டும். சட்டமன்றத் தேர்தலிலேயே இதை நாங்கள் சொன்னபோது ஓபிஎஸ் ஆதரித்தார். இபிஎஸ் எதிர்த்தார். இப்போது நீங்கள் இருவரும் ஒரு முடிவெடுங்கள்” என்று அமித் ஷாஅழுத்தம் திருத்தமாக இருவரிடமும் தெரிவித்தார். இதற்கு அங்கே ஓபிஎஸ் ஓ.கே. சொல்லிவிட்டார். ஆனால் எடப்பாடியோ கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டுவந்தார்.

இதுகுறித்து மின்னம்பலத்தில் அமித் ஷாவுக்கு ஒ.கே. சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனால் 28 ஆம் தேதி காலையில் போடியில் திமுக அரசை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “அதிமுகவில் இப்போது ஜனநாயக ரீதியான கட்டமைப்பு இருக்கிறது. மீண்டும் ஒரு நபர், ஒருகுடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது. யாரும் அதிமுகவை கைப்பற்ற முடியாது” என்று சொன்னது அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது மீடியாக்களில் வெளிவந்த அதேதினம் சேலம் நெடுஞ்சாலை நகரில் திமுக அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார். பிரஸ்மீட்டில் ஒரு செய்தியாளர் ‘உங்களுக்கும்...ஓபிஎஸ்சுக்கும்’என்று தொடங்க நன்றி என்று சொல்லிவிட்டு பிரஸ்மீட்டை முடித்துவிட்டார் எடப்பாடி. அதன் பின் வீட்டை நோக்கி நடந்துகொண்டே செய்தியாளர்களைப் பார்த்து, “இந்த பாருங்க நீங்க எவ்வளவுதான் பண்ணாலும் எங்களை பிரிக்க முடியாது. எங்களை பிரிக்கணும்னு நினைக்கறதை கைவிடுங்க” என்று சிரித்துக் கொண்டே ஆஃப் த ரெக்கார்டாக சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார்.

டெல்லியில் சசிகலாவுக்கு ஒ.கே.சொன்ன ஓபிஎஸ், தமிழகம் திரும்பியதும் இப்படி சொன்னதற்கும், அதே நாளில் சேலத்தில் பேசிய எடப்பாடி, “என்னையும் ஓ.பி.எஸ். சையும் பிரிக்க முடியாது” என்று பேசியதற்கும் பின்னால் ஒரு பெரிய அரசியல் இருக்கிறது என்கிறார்கள் கடந்த சில நாட்களில் எடப்பாடி வீட்டுக்குச் சென்று வந்தவர்கள்.

“ஓபிஎஸ் இன்னமும் சசிகலாவோடு தொடர்பில்தான் இருக்கிறார். இது எடப்பாடிக்கும் நன்றாகத் தெரியும். அமித் ஷாவை சந்தித்துவிட்டுத் திரும்பிய பின் டெல்லியிலேயே ஓபிஎஸ்சோடு தனியாக பேசியிருக்கிறார் எடப்பாடி.

‘அண்ணே நீங்க சின்னம்மாவுக்கு ஆதரவா இருக்கீங்கனு எனக்கு நல்லா தெரியும். அதைப் பத்தி எனக்கு கவலை இல்லை. நமக்குள்ள என்னதான் பிரச்சினைகள் வந்துபோனாலும் நான் என்னைக்கும் உங்களை விட்டுக்கொடுக்கறதில்லை. கட்சிக்கு அதிகம் செலவு பண்றதால சில பொறுப்புகளை நான் கேட்டு வாங்கினது உண்மைதான். ஆனா என்னிக்குமே உங்க மேல எனக்கு மதிப்பு குறைஞ்சதில்லை. ஏன்னா நீங்க வந்து சேரலைன்னா டிடிவி தினகரன் அப்பவே நம்ம ஆட்சியை கவுத்துருப்பாரு.

நம்ம ரெண்டுபேருமே முதல்வரா இருந்தவங்க. ஆனா சசிகலா இதுவரைக்கும் ஒரு எம்.எல்.ஏ.வா கூட இருந்தவங்க கிடையாது. இவங்க அழுத்ததால கட்சி ஒருவேளை சசிகலா கைக்கு போனா நம்ம கதி என்ன? நாளைக்கு கட்சியில நம்ம நெலைமை என்ன? அவங்க ஜெயிலுக்குப் போனதும் கட்சியையும் ஆட்சியையும் காப்பாத்தினது நாமதான். நாம ஒண்ணும் தினகரன் போல தனிக்கட்சி ஆரம்பிச்சுட்டு நிக்கலை.

அதனால ஒருவேளை சசிகலா மறுபடியும் கட்சிக்குள்ள வந்தாலும் இப்ப நமக்கு இருக்குற மரியாதையும் பவரும் குறையக் கூடாது. நமக்கு ஏ ஃபார்ம், பி ஃபார்ம்ல கையெழுத்து போடுறப் பவர் வேண்டும். சசிகலாம்மாவை பத்தி கூட எனக்கு பிரச்சினை இல்லை. ஆனா அந்த அம்மா பின்னாடி இருக்கிற தினகரன் நாளைக்கு கட்சிக்குள்ள வந்துட்டார்னா நம்மளை ஒரு வழி பண்ணாம விடமாட்டாரு. அதனால நாம இப்பவே சில உத்தரவாதம் கெடைச்சாதான் இதுக்கு சம்மதிக்கணும். அதுக்கு கொஞ்ச நாள் ஆகட்டும். அரசியல்ல எல்லாமே உடனடியா நடக்காது. நமக்குனு சில உத்தரவாதங்களை வாங்கிவிட்டு அதுக்குப் பிறகு இதப் பத்தி பேசலாம்’ என்று ஓபிஎஸ்சிடம் சொல்லியிருக்கிறார்.

ஓபிஎஸ்சுக்கும் சில தீர்க்கப்படாத கணக்குகள் சசிகலாவோடும்,தினகரனோடும் இருக்கின்றன. எடப்பாடியின் நிபந்தனைகளைப் போல அவருக்கும் வேறு சில நிபந்தனைகள் இருப்பதால் அதை மனதில் வைத்துதான், ‘அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது’னு சொல்லியிருக்காரு.

ஓபிஎஸ் பேட்டியைப் பாத்துட்டு எடப்பாடி ரொம்பவும் சந்தோஷப்பட்டாரு. இந்த சந்தோஷம் எத்தனை நாளைக்குனு தெரியாது. ஆனால் சசிகலாகிட்டேர்ந்து தனக்காக சில சிக்னல்களை வாங்குறதுக்காகத்தான் ஓபிஎஸ் இந்த பேட்டியை கொடுத்திருக்காரு. இது சசிகலாவுக்கும் தெரியும்” என்கிறார்கள்.

சசிகலா தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, “இருவரும் நிச்சயம் ஒரு சந்தர்ப்பத்தில் சசிகலாவை சந்திப்பார்கள். அப்போது இந்த நிபந்தனைகள் பற்றியெல்லாம் அவர்களுக்கு பேச வாயே வராது. பாஜக மூலமாக அவர்கள் கடைசி நேரத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சில முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதெல்லாம் நடக்குமா நடக்காதா என்பது ஆடி முடிந்து ஆவணி வந்தால் தெரியும்” என்கிறார்கள்.

அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்களால் மீண்டும் பரபரப்பில் இருக்கிறது அதிமுக.

-ஆரா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

வெள்ளி 30 ஜூலை 2021