மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

ஓபிசிக்கு 50% இட ஒதுக்கீடு போராட்டம் தொடரும்: டி.ஆர்.பாலு

ஓபிசிக்கு 50%  இட ஒதுக்கீடு போராட்டம் தொடரும்: டி.ஆர்.பாலு

மருத்துவ சேர்க்கைகளில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது திமுக சட்ட போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 27 சதவிகித இட ஒதுக்கீட்டுடன், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடும், நடப்பு 2021-22 கல்வி ஆண்டிலிருந்தே வழங்கப்படும் என்று நேற்று ஒன்றிய அரசு தெரிவித்தது.

இந்த ஒதுக்கீட்டுக்காகத் தமிழகத்திலிருந்து திமுக, பாமக, அதிமுக என அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தன. இதில், மருத்துவக் கல்வி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 26ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனையின் படி, இந்த ஆண்டு முதல் 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, “ மறைந்த தலைவர் கலைஞரின் கொள்கையைப் பின்பற்றி முதல்வர் ஸ்டாலின், நீதிமன்றத்திலும், ஒன்றிய அரசிடமும், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பேச வைத்தும் இந்த இட ஒதுக்கீட்டுக்காகப் பலமுறை சட்டப் போராட்டங்களை நடத்தினார். இதன் விளைவாக 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது இந்தியாவுக்கே கிடைத்த வெற்றி. இது முதல் வெற்றிதான். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடுவோம். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை அடுத்து எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

டி.ஆர்.பாலுவைத் தொடர்ந்து பேசிய விசிக எம்.பி.திருமாவளவன், “27% இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதே சமயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித ஒதுக்கீடு வழங்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதை திரும்ப பெறவேண்டும்” என்று கூறினார்.

காங்கிரஸ் எம்.பி.மாணிக் தாகூர் கூறுகையில், “பிரதமரைப் பொறுத்தவரை மற்றவர்களின் உழைப்புக்கு ஆதாயம் தேடுவது வழக்கம். தமிழக கட்சிகளும், முதலமைச்சரும் மேற்கொண்ட போராட்டத்தின் காரணமாகத்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியை தங்களுடைய வெற்றியாக மோடியும், பாஜகவும் காட்டிக்கொள்வது வருத்தத்திற்குரியது. ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித ஒதுக்கீடு போராடிப் பெறப்படும்” என்று தெரிவித்தார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வெள்ளி 30 ஜூலை 2021