மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஜூலை 2021

சைபர் குற்றங்கள் அதிகரித்துவிட்டது: முதல்வர்

சைபர் குற்றங்கள் அதிகரித்துவிட்டது: முதல்வர்

சைபர் குற்றங்களைத் தடுக்க நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று காவல் துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது இந்த பயிற்சியில் சிறந்து விளங்கிய துணை கண்காணிப்பாளர்களுக்குப் பதக்கங்களும், சிறப்பு வாளும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது 86 டிஎஸ்பிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். ரூ.10.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உங்களது அணிவகுப்பு மரியாதையைக் கண்ட போது எனக்கே ஒரு கம்பீரம் தோன்றுகிறது. உற்சாகம் பிறக்கிறது. இன்னும் சொன்னால் மிடுக்கு ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இந்த அணிவகுப்பு கம்பீரமாக இருந்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற 86 புதிய துணை கண்காணிப்பாளர்கள் பயிற்சி முடித்து உள்ளீர்கள். புதிதாக மக்கள் சேவையாற்றச் செல்லும் இந்த புதிய துணை கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

துப்பாக்கி சுடுதல், சைபர் குற்றங்கள் தொடர்பான கணினி பயிற்சி, தடயவியல் பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சி, போக்குவரத்தைத் திட்டமிட்டு நிர்வகித்தல், நடைமுறைப்படுத்துதல், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திறமைகளைப் பெற்று இதன் மூலமாக மக்களைக் காக்கும் மகத்தான பணிக்கு உங்களை ஒப்படைத்துக் கொள்ள வேண்டும். புதிதாகக் காவல் களத்தில் இறங்கி உள்ள துணை கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகச் சொல்லத் தக்க மனிதராக உங்கள் காவல்துறை தலைமை இயக்குநர் இருக்கிறார்.

1987 ஆம் ஆண்டு கோபிசெட்டிபாளையத்தில் உதவி கண்காணிப்பாளராக பணிக்கு சேர்ந்த சைலேந்திரபாபு இன்று தமிழ்நாட்டுக் காவல் துறையின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார் என்றால் அதற்கு அவருடைய உழைப்பும் முயற்சியும் மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. அவரைப் போலவே பல்வேறு திறமைகளையும் நீங்கள் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தில் இருக்கும் எத்தனையோ துறைகளைப் போல காவல்துறையும் ஒரு துறைதான் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ஒரு அரசிடம் இருந்து முதலில் மக்கள் எதிர்பார்ப்பது அமைதியைத் தான். அந்த அமைதியை ஏற்படுத்தித் தர வேண்டிய பெரும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்துவிட்டால் பொதுமக்கள் பாதுகாப்பான சூழலை உணர்ந்து விட்டால் மற்ற செயல்களைச் சரியாகச் செய்யலாம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால் தான் தொழில் சிறக்கும் முதலீடுகள் பெருகும். அச்சமற்று மனிதர்கள் தங்களது உழைப்பைச் செலுத்துவார்கள்.

குற்றங்களுக்குத் தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாற வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்முறைகள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்களாக அடையாளம் காணப்பட்டன. ஆனால் இவை அனைத்தும் மிஞ்சியதாக சைபர் குற்றங்கள் பெருகிவிட்டன. தொழில்நுட்பம் வளர வளர குற்றம் செய்வோர் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

லுங்கி கட்டிக்கொண்டு கழுத்தில் கர்ச்சீப் கட்டியிருந்தால் வழிப்பறி செய்பவர் என்பதைப் போல ஒரு காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூன் போடுவார்கள். ஆனால் இன்று இணைய வசதி வந்ததற்குப் பிறகு அடையாளமற்ற முகமற்ற குற்றவாளிகள் பெருகிவிட்டார்கள். இணையவெளி பொருளாதார குற்றங்கள் அதிகமாகி விட்டன.

சில இணையதளங்கள் மூலமாக பாலியல் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. நிதி குற்றவாளிகளும் பாலியல் குற்றவாளிகளும் நவீனத் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சைபர் குற்றங்களை தடுக்க மிக நவீன வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. அத்தகைய நவீன வழிமுறைகளை நாம் முழுமையாக அறிய வேண்டும்.

2030க்குள் சைபர் குற்றங்கள் நடக்காத நாடாக மாற்றிக் காட்டப் போகிறோம் என்று ஐக்கிய அரபு நாடுகளில் அறிவித்துள்ளது. எத்தகைய தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கப் போகிறார்கள் என்பதைத் தமிழ்நாடு காவல்துறை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நமது காவல்துறை நவீன மயமாக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

வெள்ளி 30 ஜூலை 2021