மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஜூலை 2021

நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

நீதிபதி ஆட்டோ ஏற்றி கொலை : அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்!

ஜார்கண்டில் மாவட்ட நீதிபதி வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும். நாங்களும் இந்த வழக்கை கவனத்தில் கொள்வோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தன்பாத் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த உத்தம் ஆனந்த் நேற்று காலையில் வழக்கம் போல் நடைப்பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதியதில் அடிபட்டு சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அப்போது, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றனர்.

அடிப்பட்டவர் யார் என்று தெரியாத நிலையில் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடைபயிற்சிக்கு சென்ற உத்தம் ஆனந்தை காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததன் அடிப்படையில் மருத்துவமனையில் இருந்த உடல் நீதிபதியுடையது என தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (ஜூல 28) வரை இது விபத்து என்று எண்ணப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் மூலம் கொலை என கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சிசிடிவி காட்சியில், ஜார்கண்ட் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் காலியாக உள்ள சாலையோரம் ஜாக்கிங் செல்கிறார். அப்போது சாலையின் நடுவில் வந்து கொண்டிருந்த ஆட்டோ சாலையின் ஓரமாக சென்று நீதிபதி மீது மோதிவிட்டு வேகமாக செல்வது பதிவாகியுள்ளது. மேலும், அந்த ஆட்டோ நீதிபதியை கொலை செய்வதற்கு முன்னர்தான் திருடப்பட்டுள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதன்மூலம் இது திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் உள்பட மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாவட்ட நீதிபதி வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம், ஜார்க்கண்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நீதித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கொலை செய்யப்பட்ட நீதிபதி பணி புரிந்த நீதிமன்றத்தில் ரஞ்சய் சிங் என்பவரது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த கொலை வழக்கில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சஞ்சீவ் சிங் சம்பந்தப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய இருவருக்கு நீதிபதி உத்தம் ஆனந்த் ஜாமீன் அளிக்க மறுத்துள்ளார். அதனால், குற்றம் சாட்டப்பட்ட தாதா அமந்த் சிங் கும்பலை சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் பேசியுள்ளேன். இதுதொடர்பாக ஜார்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் வழக்கு விசாரணை நடைபெறும். நாங்கள் இந்த வழக்கை கவனத்தில் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், “நீதிபதிகள் நியாயம் பக்கம் நிற்பதற்காக குறி வைத்து கொலை செய்யப்படுகிறார்கள்.நீதித் துறையின் சுதந்திரம் என்பது ஒவ்வொரு நீதிபதியின் சுதந்திரமாகும். மாவட்ட நீதித்துறையில் உள்ள நீதிமன்றங்கள் மக்களோடு தொடர்புக் கொள்ளும் முதல் புள்ளியாகும். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரியான சம்பவங்கள் நீதித்துறையின் சுதந்திரம் மீதான அதிர்ச்சியூட்டும் மற்றும் வெட்கக்கேடான தாக்குதலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

வியாழன் 29 ஜூலை 2021