மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்!

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு இரண்டாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு பேரறிவாளனுக்கு மே 28ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதியோடு ஒரு மாதம் பரோல் முடிந்து பேரறிவாளன் சிறைக்கு திரும்பிக்கொண்டிருந்தபோது, ஜூலை 28ஆம் தேதிவரை பரோலை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

நீட்டிக்கப்பட்ட ஒரு மாத பரோல் இன்றோடு (ஜூலை 28) முடிவடையும் நிலையில், பேரறிவாளன் சென்னை புழல் சிறைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு மேலும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் வேலூர் சிறையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி, முருகனை சந்தித்தார். அப்போது, தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

புதன் 28 ஜூலை 2021