மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

சாதிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: சீமான்

சாதிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: சீமான்

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை சட்டப்பூர்வமாக நிலைபெறசெய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று(ஜூலை 28) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த தமிழ் சமூகத்திற்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை அளித்து உத்தரவிட்டிருக்கும் தமிழக அரசின் முடிவு சரியான முன்நகர்வாகும். ஆண்டாண்டு காலமாக பிறப்பின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும், வாய்ப்பையும் அச்சமூகத்தையே அளவீடாகக் கொண்டு கல்வி, வேலைவாய்ப்புகளில் உறுதிப்படுத்துவதே சமூக நன்மையாகும்.

அதற்கேற்ப, தமிழ்நாட்டில் நிலைப்படுத்தப்பட்டுள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 10.5 ஒதுக்கீட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட தமிழ் சமூகத்திற்கு உறுதிப்படுத்தி அரசாணை வெளியிட்டிருப்பது நீண்ட நெடிய காலமாக அக்கோரிக்கைக்காகப் போராடிய மக்களின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவுமென நம்புகிறேன்.

அதேசமயம், இத்தகைய இடஒதுக்கீட்டுக்கு எத்தகைய சட்டச்சிக்கலும் ஏற்படாதிருக்க, சாதிவாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, சான்றுகளோடும், தரவுகளோடும் அதனை நிலைபெறச் செய்ய வேண்டுமெனவும், அனைத்து தமிழ் சமூகங்களுக்குமான இடஒதுக்கீட்டை மக்கள்தொகைக்கேற்ப பகிர்ந்தளிக்க முன்வர வேண்டுமெனவும் முன்வைக்கப்படும் கோரிக்கையின் நியாயத்தை பரிசீலிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

5 பேருக்கு 50 பேருக்கான உணவைத் தருவதும், 50 பேருக்கு 5 பேருக்கான உணவைத் தருவதும் ஏற்கத்தக்கதுமல்ல; சமூக நன்மையுமல்ல. அத்தகைய அசமத்துவமான போக்கு உருவாகாமலிருக்க, சாதிவாரிக்கணக்கெடுப்பின் மூலம் சமூகங்களின் மக்கள்தொகையைக் கண்டறிந்து, எண்ணிக்கை விகிதத்திற்கேற்ப அவர்களுக்கான விகிதாச்சாரத்தை வழங்குவதே தகுந்த சட்ட நடவடிக்கையாகும்.

சாதி வாரிக்கணக்கெடுப்பின் மூலம் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதைத்தான் மருத்துவர் ராமதாஸூம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். திமுகவும்

அதனைத் தேர்தல் வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆகவே, அதனை விரைந்து சாத்தியப்படுத்தி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சரிவர நிர்மாணிப்பது உகந்த செயலாகும்.

ஆகவே, சாதிவாரிக்கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதோடு, எல்லா சமூகங்களுக்குமான பிரதிநிதித்துவத்தை மக்கள்தொகைக்கேற்ப சரிசமமாக பகிர்ந்தளிக்க முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்தி அதன் முடிவை முன்வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 28 ஜூலை 2021