மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

10.5% இட ஒதுக்கீட்டால் யாரும் பாதிக்கவில்லை : தமிழ்நாடு அரசு!

10.5% இட ஒதுக்கீட்டால் யாரும் பாதிக்கவில்லை : தமிழ்நாடு அரசு!

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு அரசாணையால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆட்சியின்போது பிப்ரவரி 26ஆம் தேதி சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு முதல் 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று ஜூலை 26ஆம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்தாலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் வன்னியர் தவிர பிற சாதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் 10.5% இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்குகளை அவசர வழக்காக முன் கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில், தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடப்பட்டது.

இந்த வழக்கை இன்று(ஜூலை 28) காலை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய அரசாணைக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர். மேலும்,இதுகுறித்து தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மதியம் 2.15க்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,” இச்சட்டம் பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தை எதிர்த்து 28 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தில் நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதால், அரசாணைக்கு தடை விதிக்க அவசியமில்லை என்று கூறினார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வன்னியர் உள் ஒதுக்கீடு அரசாணைக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது என்று கூறி, வழக்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

மெரினாவில் சசிகலா: ஸ்டாலின் போட்ட உத்தரவு!

5 நிமிட வாசிப்பு

மெரினாவில் சசிகலா:  ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

3 நிமிட வாசிப்பு

ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

புதன் 28 ஜூலை 2021