மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

‘சொன்னது என்னாச்சு? திமுக அரசை எதிர்த்து அதிமுகவின் முதல் போராட்டம்!

‘சொன்னது என்னாச்சு? திமுக அரசை எதிர்த்து அதிமுகவின் முதல் போராட்டம்!

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பு பதாகைகள் ஏந்தி இன்று (ஜூலை 28) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இவற்றில் சிலவற்றை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 23ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் திமுக அரசுக்கு எதிராக ஜூலை 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

அந்த அறிக்கையில், “தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் மலிவான அரசியல் ஆயுதத்தை திமுக கையில் எடுத்துள்ளது. இதனை கண்டித்து ஜூலை 28 காலை 10 மணிக்கு அதிமுகவினர் அவரவர் வீடுகள் முன்பு பதாகை ஏந்திபோராட்டம் நடத்துவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனது வீட்டின் முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளார்களிடம் பேசிய அவர், “தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி இந்த போராட்டம் நடைபெறுகிறது. முக்கியமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பை கூட அவர்கள் வெளியிடவில்லை. பொய்யான வாக்குறிதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளனர்.

கண் துடைப்புக்காக நீட் தேர்வு ரத்து தொடர்பாக குழுவை அமைத்துள்ளனர். கல்விக் கடன் ரத்து, 5 பவுன் நகைக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, மாதம் தோறும் மின் கட்டணம் வசூல் என எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. எதன் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றே தெரியவில்லை. மின் கணக்கீடு பெரும் குளறுபடியாக உள்ளது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது” என்று சுட்டிக்காட்டினார்.

“இவ்வாறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டு வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் போடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதிமுக மக்கள் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " திமுக ஆட்சியில் இருந்து போகும் போது 1 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டுதான் போனார்கள். கடந்த ஆட்சிக் காலத்தில் வளர்ச்சிக்காகத்தான் கடன் வாங்கப்பட்டது. அது கடனாக தற்போது இல்லை. முதலீடாகத்தான் உள்ளது.

கொரோனாவை தடுக்க திமுக அரசு புதிதாக எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் செய்ததைத்தான் பின்பற்றுகிறார்கள். திமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் இருக்கிறது என்பதை மறந்துவிட்டு திமுகவினர் பேசுகின்றனர்” என்று கூறினார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தினார். அப்போது, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக அரசு தடுமாறி வருவதாக ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

கோவை குனியமுத்தூர்பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கரூர் அருகே மில்கேட் பகுதியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் போராட்டம் நடந்தது. சென்னை ராயப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி என அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அதோடு, ட்விட்டரில் ‘திமுகசொன்னீங்களேசெஞ்சீங்களா’ என்ற ஹேஷ்டேக்கை அதிமுகவினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

-பிரியா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

புதன் 28 ஜூலை 2021