மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

தமிழகம்: தனியாரிலும் இலவச தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

தமிழகம்: தனியாரிலும்  இலவச தடுப்பூசி திட்டம்  தொடக்கம்!

தொழிற்சாலைகள் தங்களது சிஎஸ்ஆர் நிதியைத் தடுப்பூசி திட்டத்துக்குப் பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், சிஎஸ்ஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார்.

கொரோனாவை எதிர்கொள்ளத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டி வந்த மக்கள், தற்போது மூன்றாம் அலை மீதான அச்சத்தின் காரணமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் தமிழகத்தில் தடுப்பூசியின் தேவையும் அதிகரித்துள்ளது. எனவே சிறப்பு ஒதுக்கீடாக ஒன்றிய அரசிடம் தமிழக அரசு ஒரு கோடி தடுப்பூசிகளைக் கேட்டுள்ளது. இதுவரை ஒன்றிய அரசு 46,23,27,530 தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கியுள்ளது. இதில், 2,18,10,422 தடுப்பூசிகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன என ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2.80 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 1,73,25,995 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 27,53,892 பேர் கோவேக்சின் தடுப்பூசியும் போட்டுள்ளனர். தமிழகத்தில் போடப்பட்ட மொத்த தடுப்பூசியில் 14 லட்சம் டோஸ் தனியார் மூலம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனைவரும் எளிதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில், இந்தியத் தொழிற் கூட்டமைப்புடன் இணைந்து தனியாரிலும் இலவசமாகத் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.

அடையாறு ஆனந்த பவன் உணவகத்தின் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து இந்த இலவச தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வர் முன்னிலையில் பொதுமக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்பட்டது. ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இன்று சென்னையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் நாளை முதல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

எந்தெந்த நிறுவனத்தின் சிஎஸ்ஆர் பங்களிப்பு எந்தெந்த மருத்துவமனையுடன் இணைந்துள்ளது, எத்தனை பேருக்குத் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்ற விபரங்கள் ஒவ்வொரு மருத்துவமனை வளாகத்திலும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், "இந்தியாவிலேயே முதன்முறையாக சிஎஸ்ஆர் நிதியில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகத் தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், உள்ளிட்ட 4 மாவட்டங்களிலிருந்து மருத்துவமனைகள் சார்பில் 107 பிரதிநிதிகளும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களிலிருந்து 137 பிரதிநிதிகளும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் சிஎஸ்ஆர் பங்களிப்புடன் இந்த இலவச தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தனியார் மருத்துவமனைகள் உடன் சிஎஸ்ஆர் பங்களிப்பு பணிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைத்து மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த உதவுவார்கள்.

எந்தெந்த பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் பங்களிப்பை வழங்க முன் வருகிறார்களோ அங்கு இலவசமாகத் தடுப்பூசிகள் போடப்படும்” என்று கூறினார்.

-பிரியா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 28 ஜூலை 2021