மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

கர்நாடகாவின் புதிய முதல்வர் பதவியேற்பு!

கர்நாடகாவின் புதிய முதல்வர் பதவியேற்பு!

கர்நாடகாவின் 23வது முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் பாஜக மேலிட உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு உட்கட்சி பூசலும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கர்நாடாகவுக்கு அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.

புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கிஷன் ரெட்டி, கர்நாடக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு, பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று(ஜூலை 27) மாலை 7.30 மணிக்கு தர்மேந்திர பிரதான் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், எடியூரப்பா, மேலிட பொறுப்பாளர் அருண்சிங், கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், கிஷன்ரெட்டி, தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

அதில் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மையின் பெயரை, எடியூரப்பா முன்மொழிந்தார். இதை பெரும்பான்மையான எம்எல்ஏக்களும், மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொண்டதையடுத்து, கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

இதையடுத்து, ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

இதன்படி இன்று(ஜூலை 28) காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்ற விழாவில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக பதவியேற்று கொண்டதும், பசவராஜ் பொம்மைக்கு ஆளுநர், எடியூரப்பா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். புதிய முதல்வருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று மாலை பசவராஜ் பொம்மை பிரதமரை சந்திக்கவுள்ளார்.

பசவராஜ் பொம்மையின் தந்தை

பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர்.பொம்மை, 1988-1989ல் கர்நாடக முதல்வராக பதவி வகித்தவர். இரண்டு முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும், ஒரு முறை எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில அரசுகளைக் கலைக்க ஒன்றிய அரசு பயன்படுத்தி வந்த 356ஆவது பிரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் இவர்தான். கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சரின் மகன் முதலமைச்சராகப் பதவியேற்பது இது இரண்டாவது முறையாகும்.

-வினிதா

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

புதன் 28 ஜூலை 2021