மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

அமித் ஷாவிடம் ஒகே சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ்

அமித் ஷாவிடம்  ஒகே சொன்ன ஓபிஎஸ்- அவகாசம் கேட்ட இபிஎஸ்

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜூலை 25 டெல்லி சென்ற நிலையில்,அவரைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த அழைப்பின் பேரில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அன்று இரவே டெல்லி  சென்றார்.

26 ஆம் தேதி பிரதமர் மோடியை இருவரும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர். சுமார் முப்பது நிமிடங்களுக்கு நீடித்த இந்த சந்திப்புக்குள் இன்னொன்றும் நடந்திருக்கிறது.அதாவது ஓ.பன்னீர் செல்வத்தை தனியாக பத்து நிமிடங்கள் சந்தித்த மோடி, அதன் பின் எடப்பாடி பழனிசாமியை தனியாக அழைத்து அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசியிருக்கிறார். இவர்கள் இருவரிடமும் தனித்தனியாக மோடி விவாதித்தது அங்கேயே அதிமுக பிரமுகர்களுக்குள் விவாதத்தை ஏற்படுத்தியது.

“அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள். தமிழகத்தில் போராட்டங்களை கூட்டணியாக இருந்து செய்யுங்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று மோடி இருவரிடமும் சொல்லியிருக்கிறார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ததற்காக மோடிக்கு நன்றி தெரிவிக்க வந்தோம் என்றும், தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக மோடியிடம் கோரிக்கை வைத்தோம் என்றும் கூறினார். அதை அதிமுகவினரும் பத்திரிகையாளர்களும், ‘நம்ப முடியாமல்’ கேட்டுக் கொண்டிருந்தனர். அதன் பின் ஒற்றைத் தலைமை, சசிகலா என்று கேள்விகள் எழ உடனடியாக பிரஸ்மீட்டை முடித்துக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

கடந்த ஜனவரி மாதம் முதல்வராக இருந்தபோது டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்த எடப்பாடி அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சசிகலா அதிமுக உறுப்பினராக இல்லை. அவரை சேர்க்க 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை” என்று முழங்கினார். ஆனால் இப்போது எதிர்க்கட்சித் தலைவராக செல்லும்போது சசிகலா பற்றிய கேள்வியை முடிக்கும் முன்பே பிரஸ்மீட்டை முடித்துவிட்டார்.

அடுத்து ஒரு நாள் காத்திருந்து நேற்று (ஜூலை 27) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இருவரும் சந்தித்தனர். அமித் ஷா சந்திப்பில் முக்கியமாக பேசப்பட்டதே அதிமுகவின் ஒற்றுமை அதாவது சசிகலாவை இணைப்பதுதான் என்கிறார்கள்.

“சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமித் ஷா சென்னைக்கு வந்தபோது அவரை சந்தித்த ஓபிஎஸ், சசிகலாவையும் தினகரனையும் சேர்த்துக் கொண்டால் தேர்தல் வெற்றிக்கு ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் என் தொகுதியிலேயே எனக்கு கொஞ்சம் கஷ்டம்தான் என்று எடுத்துரைத்தார். ஆனால் எடப்பாடி அப்போது இரட்டை இலைக்குதான் தமிழகத்தில் மதிப்பு, எனவே சசிகலாவால் எதுவும் ஆகப்போவதில்லை என்று அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

அதை இப்போது நினைவுபடுத்திய அமித் ஷா, ‘அதிமுக பாஜக கூட்டணியின் வெற்றி 2024 தேர்தலில் தமிழ்நாட்டுக்குத் தேவை. அதற்கு அதிமுக வலிமையாக இருக்க வேண்டும். இப்போது அமமுக, அதிமுக கட்சிகளில் இருந்து பலர் திமுகவுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் வேகமாக வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் கூட்டணியை நாம் பலப்படுத்த வேண்டும். சசிகலாவை, தினகரனை அதிமுகவில் சேர்த்து ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்ல இதற்கு ஓபிஎஸ் ஓ.கே. சொல்லிவிட்டார். ஆனால் எடப்பாடியோ, ‘எனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். எனது ஆதரவாளர்களோடு பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று அமித் ஷாவிடம் சொல்லியிருக்கிறார்.

இந்த டெல்லி பயணம் முழுதும் எடப்பாடி பழனிசாமியின் முகத்தில் வெளிச்சம் இல்லை. சசிகலா பற்றி அமித் ஷா ஒரு முடிவெடுத்துவிட்டாரோ என்று எடப்பாடி கருதுகிறார். அதனால் சென்னை திரும்பி தனது நெருக்கமானவர்களோடு இதுபற்றி பேச இருக்கிறார். அதன் பிறகுதான் தெரியும்” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

டெல்லிக்கு தனித்தனியாக புறப்பட்டது போலவே சந்திப்பு முடிந்து இருவரும் தனித்தனியாகவே தமிழகம் திரும்பியிருக்கிறார்கள்.

டெல்லியில் இருந்து நேற்று மதுரை திரும்பிய ஓ.பன்னீர், “அதிமுக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயார்” என்று சொல்லியிருக்கிறார். அதிமுகவை மீட்போம் என்ற தினகரனின் பேச்சு பற்றி அவர் பதிலேதும் சொல்லாமல் சென்றுவிட்டார்.

-வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 28 ஜூலை 2021