மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஜூலை 2021

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்!

டிஜிபிக்கு எதிராக ஸ்டாலினுக்குக் காவலர்கள் எழுதிய கடிதம்!

நீங்கள் பேருந்தில் பயணம் செய்பவராக இருந்தால் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஸ்டாப்பிங் இல்லாத இடத்தில்கூட பேருந்து திடீரென நிற்கும். அதில் சில போலீஸ்காரர்கள் ஏறிக்கொள்வார்கள். டூயூட்டிக்குப் போகும்போதோ அல்லது டூயூட்டி முடிந்து வரும்போதோ பெண் காவலர்கள் உள்ளிட்ட ஆரம்பநிலை காவலர்கள் அரசுப் பேருந்துகளை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள்.

அதேபோல சென்னையிலும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும்கூட கைதியை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்துவதற்கு அரசுப் பேருந்துகளில் அழைத்துச் செல்வார்கள்.

’இவங்களுக்குல்லாம் யாரும் டிக்கெட் கேட்க மாட்டாங்கப்பா’ என்று பேருந்தில் போலீஸாரைப் பார்த்ததும் சில கமென்ட்டுகள் எழும். அதேநேரம் பேருந்தின் பாதுகாப்புக்காக டூயூட்டி பார்க்கவில்லை என்றால்கூட... அந்தப் போலீஸார் பேருந்தில் ஏறிச்செல்லும் அந்த நிமிடங்களில் பேருந்துக்குள் இருப்பவர்களுக்கு, ‘நம்ம பஸ்ல போலீஸ் வருது’ என்ற பாதுகாப்பு உணர்வும், அத்துமீற நினைப்பவர்களுக்கு, ‘நம்ம பஸ்ஸில் போலீஸ் இருக்கு’ என்ற எச்சரிக்கை உணர்வும் இயல்பாகவே ஏற்படுவதுண்டு.

இதுமாதிரியான நிலையில்தான்... “அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் போலீஸார் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைப்பிடிப்பதை அந்தந்தத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும்” என்று போலீஸ் அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கும் இதை தெரியப்படுத்தியுள்ளார்.

ஆனால், போலீஸார் மத்தியில் இதற்கு ரியாக்‌ஷன் வேறு மாதிரியாக உள்ளது. டிஜிபியின் சுற்றறிக்கை என்பது கடைநிலை காவலர்களின் உணர்வுகளை அறியாமல் எழுதப்பட்டிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் காவலர்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக போலீஸாரிடம் பேசினோம்.

“பொதுவாகவே தமிழகக் காவலர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும்போது காவலர் அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு பயணிப்பார்கள். அதை கௌரவமாகவும் நினைத்தார்கள். வாரண்ட்களை லோக்கல் பேருந்துகளில் வாங்க மாட்டார்கள். நடத்துநர்கள் மாறாக டிக்கெட்டை கிழித்து கையில் கொடுத்து விடுவார்கள்.

திருச்சியிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் அல்லது டிஜிபி ஆபீஸ் போகிறோம் என்றால் வாரண்ட் கொடுத்து போகிறோம். கோயம்பேடு அல்லது திருவான்மியூரில் இறங்கி மாநகரப் பேருந்தில் செல்ல டிக்கெட் கட்டணம் யார் கொடுப்பார்கள்? டிஜிபி கொடுப்பாரா?

2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சியிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் யூனிபார்ம் அணியாத போலீஸ்காரர் டிக்கெட் எடுப்பது தொடர்பாக கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் மாரடைப்பு ஏற்பட்டு கண்டக்டர் உயிரிழந்துவிட்டார். இந்த விவகாரத்தை மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி டிஜிபிக்குப் பரிந்துரை செய்ததன் பேரில்தான், இந்தப் புதிய உத்தரவை டிஜிபி போட்டிருக்கிறார். இதுபோல ஏதாவது விதிவிலக்கான சம்பவங்கள் எப்போதாவது நடப்பதுண்டு. அதற்காக ஒட்டுமொத்த போலீஸ்காரர்களையும் சண்டைக்காரர்களாக காவல்துறையே சித்திரிக்க முயற்சி செய்யலாமா?

பொதுவாக காவலர்கள் அரசுப் பேருந்தில் பணி நிமித்தமாகப் பயணம் செய்யும்போது டிக்கெட்டுக்குப் பதில் வாரண்ட் உள்ளது என்று சொன்னால் அதை நடத்துநர் கணக்கில் எடுத்துக்கொள்வார். பின்னர் காவல்துறைக்கு அனுப்பப்படும் மொத்த ரசீது மூலம் காவல்துறையில் இருந்து பணம் வசூலிக்கப்படும். இதில் போலீஸார் சொந்த வேலையாகச் செல்லும்போதும், சீருடை அணியாமல் செல்லும்போதும் நடத்துநர்களிடம் தாங்கள் போலீஸ் எனக் கூறுவார்கள். நடத்துநர்களும் அதை அனுமதிப்பார்கள். தினமும் இப்படித்தான் நடக்கிறது. ஏதோ ஒருநாள் அரிதாக கடலூர் சம்பவம் போல நடக்கிறது. காவல்துறை உயரதிகாரிகள் எங்கு போனாலும் பயணிக்க கார் வசதி, ஓட்டுநர் இருக்கிறார்கள். டீசலும் அடித்துக்கொள்வார்கள். ஆனால், சாதாரண இரண்டாம்நிலை காவலர்கள், சிறப்பு எஸ்ஐ மற்றும் எஸ்ஐக்கள் என்ன செய்வார்கள்?” என்று கேள்வி கேட்கும் போலீஸார் மேலும்,

”பஸ் கண்டக்டர் - போலீஸார் விவகாரத்தைத் தானாக முன் வந்து விசாரிக்கும் மனித உரிமை ஆணையம், கடைநிலை காவலர்கள் சம்பந்தப்பட்ட இன்னொரு விவகாரத்தை தானாக முன் வந்து விசாரிக்குமா?

இப்போதைய காவல்துறை உயரதிகாரிகள், முன்னாள் டிஜிபிக்கள் வீட்டுப் பயன்பாடுகளுக்கு அரசு வாகனத்தையும் அரசு டீசலையும்தான் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் வீடுகளில் பல கடைநிலை போலீஸார் ஆர்டர்லியாக வேலை செய்து வருகிறார்கள். அரசு கொடுக்கும் சம்பளத்துக்கு அந்த போலீஸ் உயரதிகாரிகளின் வீட்டு வேலைகள், உயரதிகாரியின் குடும்ப உறுப்பினர்களது வீட்டு வேலைகளை எல்லாம் ஆர்டர்லியாக இருந்து செய்கிறார்கள். இதுபோன்ற செயல்களைத் தவிர்த்தாலே ஆண்டுக்கு கோடிக்கணக்கான நஷ்டத்தை ஈடுகட்டலாம். பல காவலர்களின் நிம்மதிப் பெருமூச்சை மீட்டெடுக்கலாம். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அரசின் ஒரு துறையான போக்குவரத்துத்துறையை இன்னொரு துறையான காவல்துறை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடுவது சரியல்ல. இதைத்தான் முதல்வரின் கவனத்துக்குக் கடிதம் மூலமாக கொண்டு சென்றிருக்கிறோம்” என்கிறார்கள் நம்மிடம் பேசிய தென் மாவட்ட போலீஸார்.

போலீஸாரது வாட்ஸ்அப் குரூப்புகளிலும் இந்தக் குமுறல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. டிஜிபி சைலேந்திரபாபு தனது சுற்றறிக்கை உத்தரவை மறுபரிசீலனை செய்வாரா என்ற எதிர்பார்ப்பு போலீஸார் மத்தியில் எழுந்துள்ளது.

-வணங்காமுடி

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

புதன் 28 ஜூலை 2021