மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஜூலை 2021

எடப்பாடி வெட்டிய குழியில் விழுந்த ஸ்டாலின் என்னும் யானை: 10.5%க்கு எதிர்ப்பு!

எடப்பாடி வெட்டிய குழியில் விழுந்த ஸ்டாலின் என்னும் யானை:   10.5%க்கு எதிர்ப்பு!

கடந்த அதிமுக ஆட்சியில் பிப்ரவரி 26 ஆம் தேதியன்று தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் நேரத்தில், அவசர அவசரமாக எம்பிசி 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்கி அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

”எம்பிசி பட்டியலில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதியினர் இருக்கும்போது வன்னியர்களுக்கு மட்டும் 10.5% கொடுப்பதால் பிற சாதியினர் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் அதிமுகவுக்கு எதிராகத் திரும்புவார்கள்” என்று அதிமுகவுக்குள்ளேயே சில குரல்கள் எழுந்தன. ஆனால் எடப்பாடி இவ்வாறு அறிவித்த பிறகு தேர்தல் களத்தில், “இது தற்காலிக சட்டம்தான்” என்று அப்போதைய அமைச்சர் உதயகுமார் போன்றவர்களே வெளிப்படையாக அறிவித்தனர்.

இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றுவிட்ட நிலையில் புதிதாக பதவியேற்ற முதல்வர் ஸ்டாலினிடம், “இந்த உள் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும்படி” பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்தார். அதன்படியே நேற்று (ஜூலை 26) வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீட்டு அரசாணையை வெளியிட்டார் ஸ்டாலின்.

இதற்கு டாக்டர் ராமதாஸ், வேல்முருகன் போன்றோர் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நிலையில், ஏற்கனவே எம்பிசி பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வன்னியர் அல்லாத சாதியினர் சமூக நீதிக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினார்கள். கடந்த 22 ஆம் தேதி அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இதர 115 சமூகங்கள் பாதிக்கப்படுவதை சமூகநீதி கூட்டமைப்பு தலைவர்கள் நடிகர் கமலஹாசனிடம் எடுத்துக்கூறினர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்களை அவர்கள் சந்திக்க ஆயத்தமாகும்போதே இந்த அரசாணை வெளியாகிவிட்டது.

தொட்டிய நாயக்கர் உள்ளிட பல சாதிகளைச் சேர்ந்த தலைவர்கள் இதுகுறித்து இன்று (ஜூலை 27) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவகாரம் குறித்து விரிவாக விளக்கியுள்ளனர்.

“ எம்பிசி பட்டியலில் இந்த உள் ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்ட 68 சாதிகளை உள்ளடக்கிய சமூக நீதிக் கூட்டமைப்பினர் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இத்தேர்தலில் அதிமுக தோற்பதற்கு வன்னியர் உள்ஒதுக்கீடு மிகமுக்கிய காரணம் என்று பல அரசியல் விமர்சகர்களும், அதிமுக முன்னாள் அமைச்சர்களும் கூட தேர்தல் தோல்விக்குப்பின் வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். எனவே புதிதாக பதவியேற்றுள்ள அரசு அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லும் என்ற நம்பிக்கையில், வன்னியர் உள்ஒதுக்கீட்டை உனடியாக செயல்படுத்தாமல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியபின்னரே அமுல்படுத்த வேண்டும் என்றும், வன்னியர் உள்ஒதுக்கீட்டு சட்டத்தில் கூறப்பட்டுள்ள பல புள்ளி விபரங்கள் உண்மைக்கு மாறானவை, மோசடியானவை என்பதை சுட்டிக்காட்டியும் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெருமக்கள் ஆகியோருக்கு கூட்டமைப்பு சார்பில் கடிதங்கள் எழுதப்பட்டன.

அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கின்ற வகையில் சமூகநீதிக் கூட்டமைப்பு சார்பில் சமுதாய மக்களிடையே இடஒதுக்கீடு குறித்து தொடர் பிரச்சாம் மேற்கொள்ளவும், போராட்டங்களை ஒருங்கிணைக்கவும், அரசிடம் தங்களின் பாதிப்புகளை எடுத்துரைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்பட்டு வந்தனர். இக்கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி முதல்வரிடம் நேரடியாகவும், அலுவலகத்திலும் கடிதம் கொடுக்கப்பட்டது.

அதேவேளையில் பாமக சார்பில் வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்தக்கோரி பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வரை நேரடியாக சந்தித்து வலியுறுத்தியதோடு, மருத்துவர் இராமதாஸ் எழுதிய கடிதத்தையும் முதல்வரிடம் கொடுத்தனர். மேலும் வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்து பாமக உறுப்பினர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய நேரத்தில் பதிலளித்துப்பேசிய முதல்வர் இதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்ற உள்ஒதுக்கீட்டிற்கு ஆதரவான பதிலையே அளித்தார்.

ஆனால் அதே சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய முதல்வர் திமுக என்ற பலம்பொருந்திய யானை என்றும் அது சமூகநீதி, பெண்ணுரிமை, சுயமரியாதை, பகுத்தறிவு என்ற நான்கு கால்களால் வலுவாக காலூன்றியுள்ளதாகவும், எனவே திமுக-வை யாராலும், எந்தக்கொம்பனாலும் அசைக்கமுடியாது என்று பேசினார். தமிழக முதல்வரின் இந்தப்பேச்சு சமூகநீதி கூட்டமைப்பில் உள்ள 115 சாதிகளுக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

அரசின் மீதான நம்பிக்கையும், முதல்வர் பேச்சிலான மகிழ்ச்சியும் நீண்டநாள் நீடிக்கவில்லை. சமீபத்தில் பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்து எந்த தகவலும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டவர், உள்ஒதுக்கீடு சட்டம் நடைமுறைப்படுத்தாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றும் தமிழக அரசை எச்சரித்திருந்தார். தமிழக முதல்வரும் இந்த அறிக்கைக்காகவே காத்திருந்ததுபோல், மருத்துவரின் அறிக்கை வெளியான ஒருசில மணிநேரங்களில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு”என்ற அந்த அறிக்கையில் மேலும்,

“தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கக்கோரி பலமுனைகளில் சமூகநீதி கூட்டமைப்பினர் முயற்சித்து வந்தபொழுதும், அதற்கு கொஞ்சம்கூட செவிசாய்க்காமல், எடப்பாடி பழனிச்சாமி அரசு எப்படி யாரையும் கலந்தாலோசிக்காமல், புள்ளிவிபரங்களோ, போதிய தரவுகளோ இன்றி அவசர அவசரமாக சட்டமியற்றியதோ அதேவழியில் இன்றைய தமிழக முதல்வரும் தான் அளித்திருந்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக, சமூகநீதியே தன் கட்சியின் பலமான அஸ்திவாரம் என்று சொன்னதிற்கும் மாறாக, 115 சமூகங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை, அவர்களின் அபலக்குரலைக்கூட காதுகொடுத்துக்கேட்காமல் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் கட்சியின் அடிப்படைக்கொள்கைகளைத்தாண்டி வாக்கு வங்கி அரசியலே முக்கியம் என்பதை ஆளும் கட்சியும் முடிவெடுத்துவிட்டது போல் தெரிகிறது. எடப்பாடி வெட்டிய குழியில் ஸ்டாலின் என்ற யானை வீழ்ந்துவிட்டது போல தெரிகிறது. இனியும் கழகங்கள் நம்மைக்காக்கும் என்ற மூடநம்பிக்கைகளை விட்டொழித்து, நம் இனத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அரசியல் கட்சிகள் பாதுகாக்காது என்பதை புரிந்துகொண்டு, சமுதாய மக்களும், அமைப்புகளும் பகுத்தறிவோடு சிந்தித்து, நேச சக்திகளோடும்,சமுதாயங்களோடும் ஒன்றிணைந்து நமக்கான உரிமைகளை வென்றெடுத்து, வருங்கால சந்ததியினர் அடிமைகளாய் பிறக்காமல் இருப்பதற்கு அமைப்பாய் திரள்வது காலத்தின் கட்டளை”என்று குறிப்பிட்டுள்ளனர்.

-வேந்தன்

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

செவ்வாய் 27 ஜூலை 2021